காதல் இருக்கே அது ஒரு சுகானுபவம். எங்கேயோ எப்போதோ யாரோ தூவிய விதை..! ஆலமரமாய் கிளைத்து வளர்ந்துவிடுகிறது. ஆணிவேர் அறுக்கப்பட்டுவிட்டாலும், அதன் விழுதுகள் வீழ்ந்துவிடுவதில்லை. இது மறைக்க முடியாத, மறக்க முடியாத ஒன்று.
அவளை எங்கோ எப்போதோ சந்தித்தது. இப்போது அவள் எங்கே இருக்கிறாள்?! எப்படி இருக்கிறாள் தெரியாது. எல்லாருக்கும் நிகழ்கிறதா புரியவில்லை!. இதுதான் காதல் என்பதா?! சொல்லத் தெரியவில்லை!
இதை மூடி மறைத்தவனெல்லாம் மகாத்மாவாக வலம்வருகிறான். தண்ணீர் தெளித்துக் காத்துவருபவனெல்லாம், கல்லடி படுகிறான்.
தினமும் வாட்ஸாப்பில் காலை குட்மார்னிங்க் அனுப்ப, அவளும் பதில் குட்மார்னிங்க அனுப்ப., வாழ்ந்து வருகிறது எங்கள் தெய்வீகக் காதல். இது இளமையின் ஈர்ப்பபோ கவர்ச்சியோ அல்ல…! காதல்தான்! வேறென்ன சொல்ல!??
தினமும் காலை ஒரு பூவைப் பரிசாக்கா.. அவளும் பதில் பூ அனுப்பி வைப்பாள். வாடாத பூவாக…உதிராத மலராக காதல காலை வணக்கப் பூவாக வலம் வருகிறது நாளும்.
இந்த அல்ப சந்தோஷத்தில் ஆத்மா லயித்திருந்தாலும். வில்லனாய் விஸ்வரூப மெடுக்கிறது மனசாட்சியின் சாட்டையடி!
மனசாட்சி படமெடுத்த பாம்பாய்ச் சீறிச் சீண்டுகிறது….!
‘வாழும் போது ஒரு முழும் நிஜப்பூ வாங்கிக் கொடுக்க வக்கில்லாத உனக்கு வாட்சாப்பில் வாழ்த்துப் பூ எதுக்கு?!
அதையும் யாரோ உனக்கனுப்பியதை பார்வேர்டு செய்கிற கஞ்சப்பயலே.. உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா?!!’
ஏங்கிருந்தாலும் வாழ்க…! பாடலை இதயத்துள் உறங்காமலிருக்கும் காதலுக்குத் தாலாட்டாய்ப்பாடி நிம்மதிப் பெருமூச்சுவிட்டு இன்றைய நாளையும் கழிக்கிறேன். என்றென்றையும் போல…!