‘வந்திருக்கும் நோய் ஆயுளுக்கும் போகாது. தினமும் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்’ என டாக்டர் சொன்னதிலிருந்து வந்த மனக்கலக்கமும், தீராத மனக்குழப்பமும், கவலையும் ஒன்று சேர்ந்து ரங்கசாமியை வாட்டியது.
யாருமற்ற இடத்தில் தனிமையில் அமர்ந்து தனது வேதனையைப்போக்க முயற்ச்சி செய்தார். தனிமையும் இனிமை தர மறுத்தது. குழப்பத்தால் மன அமைதியை இழந்தார். உடலும் தளர்ந்து போனது. எல்லாவற்றுக்கும் மனம் தான் காரணம். தான் சேர்த்திருக்கும் பணத்தால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எதுவும் செய்ய இயலவில்லை என்பதை புரிந்து கொண்டார். குழப்பத்தில் இருந்தால் தனிமையை நாடுவதை விட பிறரின் ஆலோசனை தான் நிம்மதி கொடுக்கும் என நினைத்தவர் கூட்டங்களில் தனக்கான நபரைத்தேடினார்.
‘கூட்டத்தினரோடு கலக்காமல் உடலால் தனியாகப்போய் அமர்ந்து கொள்வது தான் தனிமை என தான் நினைத்திருந்தது தவறு என்பதைப்புரிந்து கொள்ளவே தனக்கு அறுபது வயது தேவைப்பட்டுள்ளது’ என நினைத்தார்.
தனியிடத்தில் அமர்ந்து கொண்டு உலக விசயங்களை உள்வாங்கி ஒரு முகப்படாத அலைபாய்கின்ற மனதோடு கவலையை மேலும் வளர்ப்பவர்களாக இருப்பவர்களும், கூட்டத்திலிருந்து கொண்டே எதையும் உள் வாங்காமல் அமைதியாக தனிமையின் நிலையை உணர்பவர்களும், யாருடனாவது தனது பிரச்சினையைச்சொல்லி தீர்வு காண்பவர்களும் இருக்கிறார்கள்.
“தனிமையில என்றனால நிம்மதியாவே இருக்க முடிய மாட்டேங்குது. கூட்டத்துலயும் ஆராச்சுங்கூட பேசோனும்னு தோண மாட்டேங்குது. தியானம், யோகா சொல்லிக்குடுக்கிற பக்கம் போயிமே பலனே இல்ல. அதுகெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் . மனம் செம்மையானா மந்திரமே தேவையில்லைன்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு. அந்த மந்திரமும் கேக்கல. ” என தனது பால்ய நண்பர் ராமசாமியிடம் கூறினார்.
“ரங்கசாமி, கொல்லற நோய் இருந்துமே என்ற மாமம் பையன் ராசு கவலைப்படாம இருக்கறான். ஒரு வருசந்தான் இருப்பான்னு சொல்லியும் தைரியத்தால நோய் வந்து பத்து வருசமாயும் உசுரோடதான் இருக்கறான். நீ என்னடான்னா சுகர் வந்திருச்சுன்னு டாக்டர் சொன்னதுக்கே கலங்கி கண்ணீர் வடிக்கிறே….? ரோட்ல போனாலே ஆறாவது வந்து இடிச்சிருவாங்கன்னு பயந்திருந்தா அம்பது வருசமா கோயம்புத்தூர்ல இருந்து டெல்லி வரைக்கும் லாரில லோடு ஏத்திட்டு ஓட்டிருப்பனா…? இந்த பூமில பொறந்தாலே ஒரு நாளைக்கு சாகத்தான் வேணும். ஆனா பயம் இருக்குது பாரு அது தெனமும் ஒரு தடவ நம்மள கொன்னுட்டே இருக்கும்” படிக்காத ராமசாமியின் பேச்சு ரங்கசாமியின் மனதைத்தேற்றியது.
“சுகர்னு சொல்லறாங்களே அது வேற ஒன்னுமில்லே. நாம சாப்பிடற சாப்பாட்டோட சத்தி. அதை ஒடம்புல சேத்தி வெக்காம பாடு பட்டு செலவு பண்ணீரோணும். இல்லீன்னா சதைல போயி தங்கிக்கும். இப்படியே சேந்துச்சுன்னா ஒடம்பு பெருத்துக்கும். சதை பெருசாகற அளவுக்கு ரத்தம் போற நரம்பு பெருசாகாது. அப்புறம் ரத்தம்போறதுக்கு செரமப்படும். அது தான் நோயி.
நீ பணம் நெறைய வெச்சிருக்கறீன்னு பாடு படாம பந்தாவா இருக்கறது கௌரவம்னு நெனைக்கிறே. எத்தன பணம் வந்தாலும், சொத்து சேந்தாலும் நம்ம வேலைய நாமலே ஆயுசுக்கும் செஞ்சோம்னு வெச்சுக்கோ என்னைக்கும் நோயே வராது. பெட்ரோல் போடற காருக்கு டீசல் போட்டா எப்படி ஓடாதோ, அத மாதிரி நம்ம ஒடம்புக்கு ஒத்துப்போகாத சாப்பாட்ட மனசுக்குப்புடிக்குது, நாக்குக்கு புடிக்குதுன்னு சாப்பிடப்படாது. ஒடம்புக்குன்னு ஒத்துப்போற சாப்பாட்ட நேரத்துக்கு சாப்புட்டுப்போட்டு பாடு பட்டம்னா ஒடம்பும் நல்லாருக்கும். ஒடம்பு நல்லாருந்தா மனசும் நல்லாருக்கும். மனசு நல்லாருந்தா நாம எடுக்கிற முடிவும் நல்லாருக்கும். முடிவு நல்லாருந்தா நம்ம வாழ்கையே நல்லாருக்கும்” என ராமசாமி பேசியது ரங்கசாமிக்கு தன் குழப்பத்தைத்தீர்க்கும் மருந்தாக இருந்தது.
அன்று முதல் தன் தோட்டத்து வேலையை வேலையாட்களுடன் வேலையாளாக தானும் செய்ய ஆரம்பித்தார். வேலை செய்யும் போது தியானம், யோகாவில் கிடைக்கும் நிம்மதியை விட பல மடங்கு கிடைப்பதாக உணர்ந்தார். ஆரோக்யம் மேம்பட்டதால் மாத்திரை தேவையில்லாமல் போனது. தூக்கம் நன்றாக வந்தது. குழப்பமற்ற மனதால் கூட்டத்திலும், தனிமையிலும் நிம்மதி கிடைத்தது.