மதுவின் மயக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்தான் மாதவன். முப்பது வயதில் முழுதாக மூன்று முறைதான் குடித்துள்ளான். இது நான்காவது முறை.
பள்ளிப்பருவத்தில் விடுமுறைக்கு மாமா வீட்டில் ஒரு வாரம் தங்கியபோது மாமா குடித்து விட்டு மீதம் வைத்திருந்ததை சிறிது டம்ளரில் தண்ணீருக்குள் ஊற்றி ருசி பார்த்தான். வாடை வாந்தி வரவழைப்பதாக இருந்ததால் ஓடிச்சென்று படுக்கையறையில் போர்வைக்குள் புகுந்து கொண்டான்.
காலையில் பாத்திரம் கழுவிய அத்தை அவனது கையைப்பிடித்து இழுத்து முகத்துக்கருகே வந்து மோந்து பார்த்த போது மிரண்டான். ‘கண்டு பிடித்து விட்டார்களே….’ என தலை குனிந்தான்.
“பல்லு வெளக்கினயான்னு பார்த்தேன். இந்தக்காலத்துல பல்லு வெளக்கிறதுக்கே சோம்பேரித்தனம். அந்தக்காலத்துல காட்டுக்குள்ள போயி கல்லாங்குச்சி முறிச்சு பல்லு வெளக்காம ஒரு சொட்டு தண்ணி வாயில ஊத்தீட்டா கொரடாவுலயே நாலு இழுப்பு இழுத்துருவாரு எங்கையன். இன்னைக்கு முடியுமா…?” என அத்தை கூறியதும் நிம்மதிப்பெருமூச்சு விட்டான்.
ஒரு முறை உடலில் கலலை என்கிற கொப்புளம் போட்டதால் அம்மாவின் அப்பா தென்னைமரத்தில் இறக்கிய கள்ளு வாங்கிக்கொடுத்தார். அதைக்குடித்து மயக்கமாக வந்த போது ‘வாழ்க்கையில் இதைத்தொடவே மாட்டேன்’ என தனக்குத்தானே சத்தியம் செய்து கொண்டான்.
கல்லூரியில் உடன் படிக்கும் முகினின் பிறந்த நாள் விருந்தில் குளிர்பானத்தில் மதுவைக்கலந்து கொடுத்ததால் தெரியாமல் அதைக்குடித்து மயங்கிய நிலையில் உடன் படிக்கும் இருவர் வீடியோ எடுத்து மிரட்டி பாக்கெட்டிலிருந்த பணத்தைப்பெற்ற பின் இவர்களது நட்பே வேண்டாமென ஒதுங்கி படிப்பை முடித்தான்.
“ப்ளீஸ் வேண்டாம் மது. என்கிட்ட சொல்லாம கொஞ்சமா நீ ஊத்திக்கொடுத்தத குடிச்சதே எனக்கு முடியலே. இன்னும் குடிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தாதே….” கெஞ்சினான்.
“என்னது நானே வேண்டாமா உனக்கு….?” என்றாள் போதையில் தடு மாறிய புது மனைவி மது.
“நீ வேணும். நீ மட்டும் போதும். உன்னோட கையில இருக்கிற டிரிங்க்ஸ் வேண்டாம். எனக்கு பழக்கமில்லை”
“நீ எந்த உலகத்துல வாழறே…? நீ பொண்ணு பார்க்க வந்தப்பவே இந்த விசயத்த சொல்லியிருந்தா இந்தக்கல்யாணத்துக்கு ஒத்திருக்க மாட்டேன். இல்லை நானாவது கேட்டிருக்கலாம். கட்டுன பொண்டாட்டியே ஆசையா ஊத்திக்குடுத்து குடிக்காத ஆளு இந்த உலகத்துலயே நீயாத்தான் இருப்பே. எனக்கு ஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்தே பிரண்ட்ஸ் கூட குடிக்கிற பழக்கம் இருக்கு. இப்ப டெய்லியும் குடிக்கிலீன்னா தூக்கம் வராது. எங்க குடும்பத்துக்கே காபி குடிக்கிற மாதிரி இந்தப்பழக்கம் இருக்கு” என மனைவி சொன்னதைக்கேட்டு அவள் குளிர் பானத்தில் தனக்கு ஊற்றிக்கொடுத்ததைக்குடித்த மதுவின் போதையை விட, மனைவி மதுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் மாதவனுக்கு அதிர்ச்சியையும், தலை சுற்றும்படியான மயக்கத்தையும் கொடுத்தது.