கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 2,335 
 
 

“புவனா…. புவனா…” 

அழைத்த கணவனின் அருகில் சென்று சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு “எதுக்கெடுத்தாலும் புவனா…. புவனா…. நானென்ன அந்த புவன மாதாவா….? எப்பத்தான் உங்க வேலைய நீங்களே செய்ய கத்துக்கப்போறீங்களோ….? என்னால நீங்க சொல்லற வேலைய இப்ப செய்ய முடியாது…” பேசிவிட்டு சலிப்புடன் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

நான்கு பெண்களுடன் பிறந்தாலும், அப்பா எந்த வேலையென்றாலும் புவனாவைத்தான் கூப்பிடுவார். சிறு வயதில் சலிக்காமல் செய்தாள். அதே போல்  கணவனும் தன்னிடம் வேலை வாங்க முயற்சிக்க திருமணமாகி கடந்த பத்து வருடங்களாக செய்தவள் தற்போது உடல் நிலை ஒத்துழைக்காததால் மறுத்தாள்.

வெகுளித்தனமான புத்திசாலிகள், புத்திசாலித்தனமாக இருப்பதைப்பெருமையாக நினைப்பவர்கள். இந்தப்பெருமை எருமையைப்போல் பாடுபட வைத்துவிடும் என்பதை அறியாதவர்கள். 

சூழ்ச்சிக்கார புத்திசாலிகள் ஒன்றுமே தெரியாதது போல் இருப்பார்கள். அவர்களிடம் யாரும் வேலை சொல்ல மாட்டார்கள். பிறரிடம் வேலை வாங்கி விடுவார்கள். ஆனால் அவர்களது தேவைகளை கண்ணும், கருத்துமாக அமைதியாக சாதித்துக்கொள்வார்கள்.

 புத்திசாலிகளாகக்காட்டிக்கொள்வதைப்பெருமை என கருதும் புவனாவைப்போன்றவர்கள் அனைத்து வேலைகளையும் செய்யும் வேலைக்காரர்களாகவே மாற வேண்டியுள்ளது என்பது அவர்களுக்கே புரிவதில்லை. 

“புவனா ஒரு லிஸ்ட் கொடுக்கறேன். மார்க்கெட் போயிட்டு வரும் போது எனக்கும் மளிகை சாமான்களை உன்னோடதோட சேர்த்தே வாங்கீட்டு வந்திடு. பணம் ஒன்னாந்தேதி சம்பளம் வந்துடனே ஜீபே பண்ணிடறேன்” பக்கத்து வீட்டு கவி சொன்னதை மறுக்காமல் வாங்கி வந்தாள்.

“புவனா என்னோட ஈபி பில்லை கட்டி விட்டறியா? என் கிட்ட பேலன்ஸ் இல்லடி” சொல்லி விட்டு பதிலைக்கேட்காமல் கட் பண்ணும் சகோதரி.

“புவனா இந்த மாசம் கொஞ்சம் டைட். உன்னோட சம்பளத்த அடுத்த மாசம் சேர்த்து போடச்சொல்லறேன்” முதலாளியின் கெஞ்சல்.

ஹோட்டலில் நான்கு பேர் ஒன்றாக சாப்பிடப்போனாலும் “புவனா நீ கொடுத்திடே…” கோரசாகச்சொல்லும் குரல்கள்.

“ஏண்டி நீ என்னதான் நெனைச்சிட்டிருக்கே….? இதையெல்லாமா பெருமைன்னு நெனைக்கிறே…? வெளில எலியா, என்கிட்ட மட்டும் புலியா இருக்கறே… வேலை சொன்னா முடியாதுன்னு சொல்லறே… வீட்ல எலியா, வெளில புலியா இருந்தாத்தான் வாழ முடியும்.  முடியாதுன்னு என் கிட்ட துணிஞ்சு சொல்லற ஒரு வார்த்தைய வெளியாளுங்க கிட்ட சொல்லிப்பாரு. ஒருத்தி கூட உன் கூட பேச வரமாட்டா. இல்லே அவங்க உன்னச்செய்யச்சொல்லற வேலைய நீ அவங்ககிட்ட  செய்யச்சொல்லிப்பாரு. அப்பறம் புரியும் உனக்கு” கணவனின் புத்திசாலித்தனமான பேச்சு புவனாவை சிந்திக்க வைத்தது. உடனே தன் கணவனிலிருந்தே ஆரம்பித்தாள்.

“ஏங்க..‌. ஏங்க…‌ துணியக்கொஞ்சம் வாசிங்மிசின்ல இருந்து எடுத்து காயப்போட்டிடுங்க”

“ஓ…ஓ…என்கிட்டவே ஆரம்பிச்சிட்டியா….? பரவாயில்லை. பண்ணறேன். ஆனா என் கிட்ட மட்டும் கூடாது. எல்லார் கிட்டேயும் இப்படி நடந்து கிட்டீன்னா நீ சொல்லற வேலைய நான் என்னோட ஆயுளுக்கும் செய்யறேன். ஏன்னா நீ என்னோட மனைவி… அடுத்தது உன்ற அக்காவுக்கு போனப்போட்டு நம்ம வீட்டு ஈபி பில்லை கட்டச்சொல்லாட்டியும் பரவாயில்லை. ஒரு வருசமா நீ அவங்களுக்கு கட்டின பணத்தைக்கேளு…” 

கணவனின் யோசனைப்படி போனடித்தாள்.

“என்ன புவனா…? புதுசா இருக்கே உன்ற பேச்சு…? நான் என்ன குடுக்க மாட்டீன்னா சொன்னேன்….? இந்த மாச பில்லையும் கட்டிடு. அடுத்த மாசம் கண்டிப்பா கொடுத்தர்றேன்…”

“இல்லக்கா. நேத்து வயித்து வலின்னு ஆஸ்பத்திரி போயிருந்தேன். வயித்துல ஒரு சின்னக்கட்டி இருக்குதுன்னு நாளைக்கே ஆபரேசன் பண்ணோனும்னு டாக்டர் சொல்லிட்டாரு…” விசும்பினாள்.

“அப்புடியா…? இரு, இப்பவே மாத்தியுடச்சொல்லறேன்” அடுத்த நிமிடம் வங்கிக்கணக்கில் பணம் வந்து விழுந்தது.

“ஒருத்தர ஏமாத்தரதுக்கு பொய் பேசறது ஆகாது. நம்மைக்காப்பாத்திக்க பேசலாம். அதத்தான் நீ இப்ப பண்ணியிருக்கே. நீ பொழைச்சுக்குவே…” என பேசிய கணவனை முதலாக காதலோடு பார்த்தாள் புவனா.

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *