கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 185 
 
 

பழங்காலத்தில் தமிழ்நாடு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் முதலிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம்மண்டலங்களில் வாழ்ந்து மறைந்த அரசர்கள், புலவர் பெருமக்கள் ஆகியோர் பற்றி அறிந்து கொள்ள வசதியான நூல்களைச் ‘சதகங்கள்’ என்ற பெயரில் பாக்களாகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.

தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த பெரியோர்களின் ஊர், பேர், சிறப்புக்களைத் தொண்டை மண்டல சதகம் கூறும். அதே போல் ஏனைய சதகங்களும் தத்தம் மண்டலங்களுக்கு ஒரு சுருக்கமான வரலாறாக அமையும். இந்தச் சதக நூல்களைச் செய்யத் தூண்டியும் தொகுப்பித்தும் உதவியவர்கள் தமிழ் வரலாற்றுக்குப் பெருந்தொண்டு புரிந்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும்.

தொண்டை மண்டல சதகத்தைச் செய்வித்தவர் மாவை நகரைச் சேர்ந்த கறுப்பன் என்னும் வள்ளலாவார். இந்த வள்ளலின் தந்தை கத்தூரி என்பவர் சிற்றரசர் போன்று பெரு வாழ்வு வாழ்ந்தவர். தொண்டை நாடு முழுவதும் பசிப்பிணி ஏற்படாமல் கொடை புரிந்த பெருமையுடையவர். இத்தகைய நல்லோர்க்குப் புதல்வராகப் பிறந்த கறுப்பனும் பேரறச் செல்வராய்க் கொடுத்துக் கொடுத்துப் புகழ் சேர்த்துக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் படிக்காசுப் புலவர் என்றொரு கவிஞர் இருந்தார். தாம் பாடுகிற கவிதைகளுக்குப் படிக் காசு பெறுகிற வழக்கமுடையவர். ஆதலால் அவருக்கு அப்பெயர் ஏற்பட்டிருந்தது. நீண்ட நாட்களாகக் கறுப்பனை நேரில் காணும் வாய்ப்பில்லாமலே அவன் புகழையும் கொடுக்கும் தன்மையையும் மட்டுமே கேள்விப்பட்டுக் கொண்டிருந்தார் படிக்காசுப் புலவர். மெய்யாகவே கறுப்பு நிறத்தைக் கொண்டிருப்பதால் தான் கறுப்பன் என்று அந்த வள்ளலுக்குப் பெயர் வந்திருக்கலாமோ என்பது அவருடைய அனுமானம்.

தமிழ் மொழியில் கறுப்பு என்ற வார்த்தைக்குச் சில பொருள்கள் உண்டு. கறுப்பு நிறத்தையும் பஞ்சத்தையும் கோபத்தையும் உணர்த்துகிற வார்த்தை அது. தொண்டை நாட்டு எல்லைக்குள் பசி, பஞ்சம் என்கிற தொல்லை இருந்ததே இல்லை. எனவே அதன் காரணமாகக் கறுப்பன் என்று பெயர் ஏற்பட்டிருக்க முடியாது.

நகை முகமும் இரக்கமுள்ள மனமுமாக எவரிடத்தும் அன்போடு பழகும் கறுப்பனுக்கு ஆத்திரம் வந்து பார்த்ததாக யாரும் படிக்காசுப் புலவரிடம் கூறினதில்லை . எனவே கோபம் வருவதால் கறுப்பன் என்று பேர் ஏற்பட்டதாகக் கூறுவதும் பொருந்தாது.

அப்படியானால் இவ்வளவு நல்ல மனிதனுக்கு ஏன் தான் கறுப்பனென்று பேர் வந்தது? இந்த உலகத்தில் பொருத்த மில்லாப் பேர் வைப்பதென்பதே ஒரு வழக்கமாகி விட்டதா? கைகளே இல்லாதவனுக்குச் சக்கரபாணி என்றும், குரூபிக்குச் சுந்தரராசன் என்றும், குருடனுக்குக் கண்ணாயிரம் என்றும் பெயர் வைப்பது போல் ஒரு கறுப்புமில்லாத நம் வள்ளலுக்குக் கறுப்பன் என்று பெயர் வாய்த்தது ஏனோ என்று மயங்கினார் புலவர்.

மாவைப்பதி சென்று கறுப்ப வள்ளலையே நேரில் பார்த்து விடுவது என்று புறப்பட்டார் படிக்காசுப் புலவர். போனார். பார்த்தார். அவருக்கு இருந்த ஒரே சந்தேகமும் தீர்ந்து போயிற்று. ‘கறுப்பன் நிறத்தினால் கறுப்பனாக இருக்கலாமோ’ என்ற ஐயமும் பொய்யாகிவிட்டது. நிறம் சிவந்த அழகிய தோற்றத்தையே கொண்டிருந்தான் கறுப்ப வள்ளல்.

என்ன வரவேற்பு! எத்தகைய அன்பு! எவ்வளவு பேணுதல்! படிக்காசுப் புலவர் திணறினார். கறுப்பனின் அன்பையும் பேணுதலையும் எப்படிப் போற்றுவதென்றே புரியவில்லை. பரிபூரணமான அன்பை வார்த்தைகளால் கூறமுடியாதே! ஒரு நாள் பகலுணவுக்குப் பின் கறுப்ப வள்ளலோடு அமர்ந்து தாம்பூலம் தரித்துக் கொண்டிருந்தார் படிக்காசுப் புலவர். சிரித்தவாறே சிறிது நேரம் கண்ணிமைக்காமல் கறுப்ப வள்ளலையே பார்த்துக் கொண்டிருந்தார் புலவர்.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? என்னிடம் என்ன அதிசயம் உண்டாகி விட்டது?” என்று சிரித்தபடி கேட்டான் வள்ளல்.

“ஒன்றுமில்லை . ஒரு கறுப்பும் (பஞ்சமும்) இல்லாத தொண்டை நாட்டில் கஸ்தூரி வள்ளலின் புதல்வராகப் பிறந்த உங்களை எல்லோரும் கறுப்பன், கறுப்பன் என்று அழைக்கிறார்கள்; நீங்களோ நிறம் சிவக்கக் காட்சியளிக்கிறீர்கள்; கொடுத்துக் கொடுத்துக் கை சிவக்கிறீர்கள்; தாம்பூலம் அணிந்து இதழ் சிவக்க வீற்றிருக்கிறீர்கள். உங்களை எப்படிக் கறுப்பன் என்பது!” என்ற கருத்துப்பட ஓர் அழகிய பாடலைப் பாடினார்.

ஓர் கறுப்பும் இல்லாத தொண்டையள்
நன்னாட்டில் உசிதவேளைச்
சீர் கறுப்பொன்றில்லாத கத்தூரி
மன்னனருள் சேயைப் பார் மேல் ,
ஆர் கறுப்பன் என்று சொல்லி அழைத்
தாலும் நாமவனை அன்பினாலே
பேர் கறுப்பன் நிறச் சிவப்பன் கீர்த்தி
யினால் வெளுப்பனெனப் பேசலாமே!”

கறுப்பு, சிவப்பு, வெளுப்பு என்னும் வண்ணப் பெயர்களை வைத்துக் கொண்டு இந்தக் கவிஞர் எத்தனை அற்புதமாய்ச் ‘செப்பிடு வித்தை’ செய்கிறார், பார்த்தீர்களா? பழகின தோட்டக்காரனுக்கு எல்லாப் பூக்களின் பேரும் மணமும் தெரிகிற மாதிரி சொல்வளம் தெரிந்த கவிஞனிடம் வார்த்தைகள் தாம் எவ்வளவு நளினமாய் வளைந்து கொடுக்கின்றன!

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email
'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *