புதுப்பழக்கம் இந்த மதுப்பழக்கம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 2,727 
 
 

வழக்கம்போல் அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டான் கருப்பசாமி. மரமறுக்கும் வேலை. மழைக்காலம் என்பதால் அங்கங்கே மரங்கள் சாய்ந்து தொங்க வேலை கொஞ்ச நாளாவே அதிகம்.

‘மாமோவ் சாமி குமிபிட்டுட்டு வேலைக்குப் போ! மரமேர்றபோது வழுக்கிக் கிழுக்கி வச்சிடப் போவுது ஜாக்கிரதை!’ சாமி படத்தைக் காட்ட,

‘நான் என்னைக்குச் சாமி கும்பிட்டிருக்கேன்… நீதான் எனக்கு சாமி.. சம்சாரம் எல்லாம்..! அவளைப்பார்த்து அர்த்த புஷ்டியோடு கண்ணடிக்க…’ அய்யே! மூணு புள்ளீங்க இருக்கு! கியாபகம் இருக்கட்டும்!’ என்று சொல்லிச் சிரித்தாள் ,மனைவி மயிலாள்.

அன்றைக்கு வரும்போது அவனிடம் என்னைக்குமில்லாத புளிச்ச வாசம் அடிக்கவே ‘என்ன மாமா உன்றகிட்ட ஒரு மாதிரி வாசம் வருது?!’ கேட்டாள் மயிலாள்.

‘ஒடம்பு பூராம் ஒரே வலிபுள்ளே..! இன்னைக்குத்தான் அலுப்பா இருக்குதேன்னு அரை பாட்டில் குடிச்சேன்…!’ என்றான்.

‘மிச்சம் எங்கே?”

‘எனக்கென்ன அறிவில்லைனு நெனைச்சுட்டயா?! டெந்த் படிக்கிற நம்ப புள்ள லதாங்கி ஸ்கூல் ஃபேக்குல ஒளிச்சு வச்சுட்டேன்!’

‘அத ஏன் அவ பையில வச்சே?’

‘புது பழக்கம் பாரு இந்த மதுப் பழக்கம்?’.. பாட்டிலை எங்க மறைச்சு வக்கிறதுன்னு தெரியலை! லதாங்கிதான் ஸ்கூல் ஃபேக் பக்கமே போறதில்லையே திருடன் கையுலயே சாவி இருக்கட்டும்னு அதான்… அவ பையில…!’ இழுத்தான் கருப்புசாமி.

மாலை சாமி போட்டோவுக்கு பின்னாடி இருந்து மகள் எதையோ சடக்குன்னு எடுத்து பாவாடைக்குள் மறைச்சு வைக்க, ‘என்னடி அது?! என்றாள் அம்மா.

‘செல் போன்னு’ என்று சொல்ல, அதை வாங்கிப் பார்த்தாள். ஓரே நம்பர்ல இருந்தும் அதுக்கும் ஏகப்பட்ட போன்கால்கள்..

‘என்னடி நடக்குது இங்கே?! இது ஏது உனக்கு ?!என்றாள்.

‘அம்மோவ் ஸ்கூல்ல ஒண்ணா படிக்கிற பையன் தந்தான் ‘ரீ சார்ஜெல்லாம் அவந்தான் பண்றான்’.

‘அப்பனுக்குத் தெரிஞ்சா கொன்னு போடுமேடீ?!’

‘அதுக்குத் தெரியக் கூடாதுன்னுதான்…

‘தெரியக்கூடாதுன்னுதான்…?’

‘அது சாமி பக்கமே வராதுன்னுன் சாமி போட்டோ பின்னாடி மறைச்சு வச்சேன்!’ என்றாள் மகள்.

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *