கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2024
பார்வையிட்டோர்: 2,974 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வித்யா வேகமாக நடந்தாள். அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. வியர்த்துக் கொட்டிய வியர்வையை துடைக்க கர்ச்சீப் எடுக்கலாம் என்று நினைத்தவாறு திரும்பிப் பார்த்தாள்.

‘அவன்’ வேகமாக தொடர்ந்து கொண்டிருந்தான். பயம் தொண்டைக் குழிக்குள் ஏறிக்கொள்ள வித்யா ஓட ஆரம்பித்தாள். அவனும் பின்னால் வேகமாக வர, ‘யார் இவன்? இரண்டு நாளாக பஸ் ஸ்டாப்பில் என் பின்னாலேயே காத்து நின்றவன், இன்று சோப்பு வாங்கக் கடைக்கு போகும் போது என் பின்னாலேயே வர ஆரம்பித்தான். பொழுது வேறு சாய்ந்து கொண்டிருக்கிறது. எந்த பஸ் வந்தாலும் அவன் வருவதற்கு முன் பஸ்ஸில் ஏறி விட வேண்டும்! என்று எண்ணியவாறு ஓடி வந்தவள் நல்ல வேளையாக பஸ் வந்து விட ஏறிக் கொண்டாள்.

திரும்பிப் பார்த்தாள், அவன் பஸ்ஸில் ஏற முயற்சித்து பஸ்சை தவற விட்டான். ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டவாறு நெஞ்சில் கை வைத்துக் கொண்டு காலியாக இருந்த சீட்டில் அமர்ந்தாள்.

“யார் இவன்! என்னை ஏன் பின்தொடர்கிறான்? லேடீஸ் ஹாஸ்டலில் வார்டனிடம் சொல்லி புகார் பண்ணலாமா? போலீசில் ஆக்ஷன் எடுப்பார்களா ? ம்கூம் அதெல்லாம் சரிப்பட்டு வராது. நாளை மாமாவைக் கூப்பிட்டு இவன் சட்டையை பிடித்துக் கேட்க சொல்ல வேண்டும்” என்று நினைத்துக் கொண்டாள்.

மறுநாள் வித்யாவும் அவள் மாமாவும் பஸ் ஸ்டாண்டிற்கு வர, “அதோ, அங்கே நிற்கிறான் பாருங்க மாமா அவன் தான்” என்று கை காட்டினாள் வித்யா.

வித்யாவின் மாமா கோபமாக, அவனருகில் வந்து “ஏண்டா என் மருமகள் கிட்டேயா வாலாட்டப் பார்க்கிறாய்?” என்று கையை ஓங்க, அவன் அவர் கையை தடுத்தான்.

“ஒரு நிமிஷம் பொறுங்க சார். என்ன என்று கேட்காமல் அடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்”

“இன்னும் என்னடா உன்னிடம் கேட்கணும்”

“ஸாரி சார், எங்க அக்காவோட தோழி, வித்யா அபீஸிலே ஒரு கிளார்க் போஸ்ட் காலியா! இருக்கு, வித்யாவிடம் கேட்டால். கண்டிப்பா அந்த வேலை கிடைக்கும் என்றார்கள். அவர்களிடம் பேசத் தயங்கிதான் இரண்டு நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.

– ஜூலை 2001, தமிழ் டைம்ஸ்.

Print Friendly, PDF & Email
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *