(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஏழுமலை சுவாமிகளின் ஆசிரமத்தில் வளரும் மாற்றுத் திறனாளி சிறுவர் சிறுமியருக்கான பிரத்யேக நாடக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்றல் பத்திரிகையின் நிருபர் இளைஞன் தமிழ் மணி, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தான்.
மேடையில் பிரபல நகைச்சுவை நடிகர் குணசேகரன் தமது குழுவினர் உடன் குழந்தைகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார். குழந்தைகள் ஆரவாரத்துடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், மணியின் மனதில் ஒரு கேள்விக்குறி.
நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளன் சஞ்சீவியைப் பார்த்தான் மணி. அவன் சுவாமி இருக்காரு பாரு போய் ஆசீர்வாதம் வாங்கிக்க என்று கூறி நகர்ந்து விட்டான்.
ஆசிரமத்தின் தன்னார்வலர்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்தார்கள்.
சுவாமி, பார்வையாளர் இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்தார்.
தமிழ் மணி அவர் அருகில் சென்று கை கூப்பி வணங்கி நின்றான். ஆசிகள் என்று கூறிய சுவாமி, ‘என்ன மணி, குணா, திலகா ஆஸ்பத்திரியில் இருக்காரே இங்க எப்படி ங்கற கேள்வி தானே உன் மனசுல’ என்றார்.
‘அது வந்து.. ஆமாம் சாமி’ என்றான் மணி.
‘அது என்ன சொல்வாங்க ஆஃப் தி ரிகார்ட் ஆக சொல்றேன் தகவலை யாருக்கும் சொல்ல மாட்டியே’ என்றார்.
‘ஆஃப் தி ரிகார்ட் னா சொல்ல மாட்டோம் சாமி’ என்றான் மணி.
சுவாமி சொன்னார் ‘குணாவுக்கு விபத்துனால ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க. நிகழ்ச்சி ரத்து பண்ணா பசங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும்னு குணாவோட தம்பி அது என்ன சொல்வாங்க ட்வின் பிரதர் ராஜசேகரன் தான் இங்க வந்து நடிச்சாரு’
குணாவுக்கு ட்வின் பிரதரா இத்தனை நாள் நிருபரா இருக்கும் நமக்கு எப்படி தெரியாமல் போச்சு என்று நினைத்தான்.
‘உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது’ என்றார் சுவாமி புன்னகையுடன்.
‘நான் உத்தரவு வாங்கிக்கறேன் சாமி’ என்று கூறியபடியே அங்கிருந்து நகர்ந்தான் தமிழ் மணி.
– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை