கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 234 
 
 

சீர்காழி அருணாசலக் கவிராயரை இராமாயணக் கதை தெரிந்த எல்லோரும் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள். அவர் இயற்றிய இராம நாடகக் கீர்த்தனைகள் தமிழ் நாட்டு மக்களின் உள்ளங்களிலெல்லாம் சுவை நிரப்பிக் கொண்டிருக் கின்றன. பஞ்ச லட்சணம், தியாகேசர் வண்ணம் போன்ற வேறு சில நூல்களிலும் திறமையைக் காட்டியிருக்கிறார் அருணாசலக் கவிராயர். ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் அவருடைய பெயரை என்றும் மறந்துவிடாமலிருக்கும்படி அவர் செய்துவிட்டுப்போன சுவைக் காவியம் அவருடைய இராம நாடகக் கீர்த்தனைகள் தான்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய கலை வாழ்வைக் குறைவின்றிக் கவனித்துத் தேவையான உதவிகளைச் செய்தவர்கள் மணலி முத்துக்கிருஷ்ண வள்ளல், பெருவணிக ராகிய தேப்பெருமாள், பாப்பைய வேள் என்போர் ஆவர். அருணாசலக் கவிராயர் தியாகேசர் வண்ணத்தை உரைசெய்தபோது தேப்பெருமாள் அவருக்கு வெகுமதியளித்துப் போற்றினார். அவருடைய இராம நாடகக் கீர்த்தனை அரங்கேறுவதற்கோ மூன்று செல்வந்தர்களுமே சேர்ந்து உதவி செய்திருக்கிறார்கள்.

இராம நாடகக் கீர்த்தனைகளை எழுதிக்கொண்டு அவர் ஒவ்வொருவராகப் பார்த்து அதன் பெருமைகளைச் சொல்லிக் காட்டினார். இன்னும் சிலருக்குத் தாம் இராம நாடகத்தை இயற்றி எடுத்துக்கொண்டுவரப் போவதை முன்கூட்டியே சீட்டுக் கவிகள் மூலம் தெரிவித்திருந்தார். அந்தக் காலத்துப் புலமை வாழ்வே அப்படித்தான். ஏதாவதொரு பிரபந்தத்தை இயற்றிக்கொண்டு ஊரூராக அலைந்து பணமும், மனத்தில் கலை உணர்ச்சியும் உள்ள வள்ளல்களைச் சந்தித்து அதை அரங்கேற்றுவதற்கு ஏற்பாடு செய்தாக வேண்டும்.

இராம நாடகக் கீர்த்தனைகளை எழுதிக்கொண்டு சீர்காழி அருணாசலக் கவிராயரும் அப்படியெல்லாம் அலைந்தார். இல்லாவிட்டால் தமிழர்களுக்கு இன்று அந்த அருமையான காவியமே கிடைத்திருக்காது. அட்சர லட்சம் பெறுமான காவியத்தைக் கீர்த்தனமாகப் பாடித் தமிழுக்கு அளித்து விட்டுச் சென்றிருக்கும் அந்த மகாகவிக்கு ஒரு சமயம் பத்து ரூபாய்களுக்கு அல்லாட வேண்டிய நிலை ஏற்பட்டது. கேவலம் பத்து ரூபாய்க்காக ஊரூராய் அலைந்து திரிந்தார். பத்து ரூபாய்களை அளித்தாலும் நிகராகாத அழகுக் கீர்த்தனங்களை எழுதிய கவி, அலைந்து திரிந்து எங்கும் பத்து ரூபாய் கிடைக்காத ஏக்கத்தோடு ‘பாப்பைய வேள்’ என்ற சீமானிடம் போய்க் கடைசி முயற்சியாகக் கேட்டுப் பார்க்கக் கிளம்பினார்.

போனார்; பாப்பைய வேளைச் சந்திக்கவும் சந்தித்தார்; “எனக்குக் கொஞ்சம் கையில் முடை, அவசரமாக ஒரு பத்து ரூபாய்ப் பணம் வேண்டும். இந்தச் சமயத்தில் நீங்கள் தான் உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்று வாய்விட்டுக் கேட்டார்.

பாப்பைய வேள் சிறிது சிந்தித்தார். இவ்வளவு பெரிய கவி எண்ணிப் பத்தே பத்து ரூபாய் கேட்கிறாரே என்று யோசித்தாரோ, என்னவோ? ஆனால் அருணாசலக் கவியோ பாப்பைய வேளின் தயக்கத்தைக் கண்டு அவரும் இல்லையென்று கையை விரித்து விடுவாரோ என்று எண்ணி அஞ்சினார். அந்த அச்சம் அவருடைய கவி உள்ளத்தை ஒரு அழகான கவிதையைப் படைக்கச் செய்துவிட்டது. அந்தப் பாட்டில்தான் எவ்வளவு குழைவு! என்ன நைச்சியம்! எத்தனை விநயம்!

“பத்து ரூ பாயனைநேர் பாப்பையவே ளேயுனக்குப்
பத்துரூ பாயென்ன பஞ்சமோ – முத்தநகை
வீழிவாய்ப் பாலுண்ட வேந்தன் பிறந்தசீ காழியரு ணாசலன்யான் காண்”
(பெருந்தொகை 1766)
பத்து ரூப ஆயன் = தசாவதாரம் எடுத்த திருமால், வீழிவாய் = கொவ்வைக் கனி போன்ற வாய், முத்தநகை = உமை, வேந்தன் = ஞானசம்பந்தன்.

பத்து ரூபாய் எத்தனையோ பேருக்குத் தேவைப்படுகிறது! ஆனால் அதை இப்படி உள்ளமும் சொல்லும் தொனியும் குழையக் குழைய ஒரு பாட்டாக்கிக் கேட்க அருணாசலக்கவியால் மட்டும் தானே முடிகிறது?

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *