கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 18 
 
 

புறக்கருவிகளின் வசதிகளும் வாழ்க்கையில் வேகமும் வளர வளர மற்றவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற எண்ணம் சமூக வாழ்வில் குறைந்து கொண்டே வருகிறது. பிறரைக் கவனிக்காமல் பிறருடைய இன்ப துன்ப உணர்ச்சிகளைப் பொருட்படுத்த வாழ்வதே ஒருவகை நாகரிகம் என்று நம்முடைய நகரங்கள் கற்றுக் கொடுத்துவிட்டன.

ஒரு சில தலைமுறைகளுக்கு முன் இருந்த தமிழ் நாட்டு வாழ்வு வேறு; இப்போதுள்ள வாழ்வு வேறு. பழைய தலைமுறையில் ஏழைகளாக இருந்தும் வள்ளலாக வாழ முயன்ற மனிதர்கள் இருந்தார்கள். இப்போதோ வள்ளலாக இருக்கத் தகுதியுள்ளவர்களும் ஏழைகளைப் போல் வாழ விரும்புகிறார்கள். தம் பெருமையையும் நிலயையும் பிறருக்கு உதவுவதற்காகத் தாழ்த்திக் கொள்ளக் கூடாதே என்று எண்ணுகிற காலம் இது.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னால் மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் பண்பாடு என்று கருதிய ஒரு மனிதரைப்பற்றி இங்கே பார்க்கலாம். அப்படிப்பட்ட மனிதர்கள் நமது இன்றைய சமூகத்தில் இல்லாவிட்டாலும் பழைய பாடல்களிலும் இலக்கியங்களிலும் இருக்கிறார்கள்.

தொண்டை நாட்டு மறவனூரில் அரங்கேச வள்ளல் என்ற பிரபு ஒருவர் இருந்தார். அந்த ஊரிலேயே பெருஞ்செல்வராதலால் ஊர்மக்கள் அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் ஏற்பப் பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக அவர் வாழ்ந்து வந்தார். பிறருக்கு இயன்றவரை உதவி செய்து வாழ்வதுதான் பண்பாடு என்று எண்ணுபவர் அவர். பிறரோடு பழகுவதிலும் பேசுவதிலும் எளிமையாக நடந்து கொள்வார்.

அவருடைய உள்ளம் எவ்வளவுக்குக் கருணைமயமானது என்பதை விளக்குவது போல் ஒரு சம்பவம் நடந்தது. புலவர் குடியிற் பிறந்த பாணன் ஒருவன் மறவனூருக்கு வந்தான். அவனுடைய சொந்த ஊர் எங்கோ வெகு தொலைவில் இருந்தது. ஊற்றார் உறவினர்களைப் பிரிந்து நாடோடியாகத் திரிந்து சுற்றிக் கொண்டிருந்தான் அவன். மெலிந்த உடல் அவனுக்கு. அதில் நோய்கள் வேறு அடிக்கடி வந்து பற்றிக் கொண்டு விடும்.

மறவனூரில் சில நாட்கள் தங்கியிருந்த அந்தப் பாணன், ஒரு நாள் யாரும் எதிர்பாராத விதமாக இறந்து போனான் , இன்னிசை பொழிந்த அவன் உடல் பிணமாகிக் கிடந்தது. உற்றார், உறவினரில்லாத நாடோடிப் பாணனின் பிணத்தை யார் எடுப்பார்கள்? ஊரில் எல்லோரும் அந்த அனாதைப் பிணத்தை வேடிக்கை பார்த்துவிட்டுப் போனார்கள். ஒருவருக்காவது அந்தப் பிணத்தை அப்புறப்படுத்தி அதற்கு முறையாகச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டுமென்று தோன்றவே இல்லை. காலம் கடந்து கொண்டே இருந்தது. அந்த நிலையில் அரங்கேச வள்ளலுக்கு இந்தச் செய்தி எட்டியது. எல்லோரும் அனாதைப் பிணம்தானே’ என்று கேவலமாக நினைத்தது போல் அவரால் அலட்சியமாக இருக்க முடியவில்லை. அவர் பண்பாடு தெரிந்தவர். அதற்கேற்ப நடந்து காட்டினார். நாலைந்து மூங்கிற் கழிகளையும் அரிவாளையும் எடுத்துக்கொண்டு சவம் கிடந்த இடத்துக்கு அவர் தனியாகச் சென்றபோது ஊரே ஆச்சரியப்பட்டது. கழிகளை வெட்டி இணைத்துப் பாடையை அவரே கட்டினார். அவரே அப்படிச் செய்ததைப் பார்த்ததும் ‘நான், நான்’ என்று போட்டி போட்டுக் கொண்டு ஊரார் அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். அவர் யாரையும் அருகில் நெருங்க விடவில்லை,

“ஒரு தமிழ்ப் புலவரின் சவத்தைத் தனியாகச் சுமந்து சென்று ஈமச் சடங்கு செய்யும் பெருமையை எனக்கு மட்டுமே கொடுங்கள்” என்று தனியாகவே அந்தச் சடலத்தைச் சுமந்து கொண்டுபோய்த்தம் உறவினருக்கு உரிமையோடு செய்கிற மாதிரி ஈமக் கடன்களெல்லாம் தாமே செய்தார் அரங்கேச வள்ளல். அப்படிச் செய்ததில் அவருக்கு இணையற்ற பெருமிதம் ஏற்பட்டது. எல்லோரும் கேவலமானது என்று கைவிட்டு விட்ட காரியத்தை அவர் செய்த போது உயர்வானதாக்கிப் பெருமை தேடிக்கொண்டார். தொண்டு செய்கிற மனிதனுக்குத் தான் செய்கிற காரியத்தைச் சாமானிய மனிதர்கள் கேவலமாக நினைப்பார்களே’ என்ற கூச்சம் இருக்கக்கூடாது. தன்னுடைய எண்ணத்தின் உயர்வால் தியாகத்தின் சிறப்பால் தான் செய்கிற காரியத்தையும் பெருமைப்படுத்தி விட வேண்டும், அதுதான் பண்பாடு.

“உறவைப் பிரிந்து வந்தே இறந்தான் அங்கொரு புலவன்
மறவைப் பதிந்தி வங்கிசத்தோன் அரங்கேச வள்ளல்
அறவைப் பிணஞ்சுடல் தான் செய் எண்ணான்கின்
அறத்ததென்றோ பிறர்கைக் கொடாமல் எடுத்தான் அப்பாணன் பிணத்தினையே.”
(பெருந்தொகை 1230)
மறவை = மறவனூர், நதி வம்சம் – கங்கை , மரபு = எண்ணாண்கின் முப்பத்திரண்டு அறம்.
அரங்கேச வள்ளல் மாய்ந்த பின்னும் அந்தப் பண்பாட்டின் பெருமை மாயாமல் பாட்டில் வாழ்கிறது மேற்கண்டவாறு ! உண்மைப் புகழ் என்றுமே அழிவதில்லையே!

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *