“ராகுல், நான் ஒரு கால் நடை மருத்துவர்; உங்க அம்மா ஒரு குழந்தை நல மருத்துவர்; காசு செலவு பண்ணி உன்னை ஃபார்மஸிஸ்ட் கோர்ஸ் படிக்க வெச்சோம்… நீ இப்படி நடந்துக்கலாமா?”
எப்போது ராகுல் வருவான்; வந்ததும் எதைச் சொல்ல வேண்டும் என்று நன்கு ஒத்திகைப் பார்த்துவைத்துக் கொண்டு, நேரம் பார்த்துப் பேசும் பெற்றோரின் பேச்சு, தெற்றெனப் புரிந்தது ராகுலுக்கு.
“ராகுல்…!” – அம்மா அழைத்தாள்.
“ம்…”
“நான் நேரிடையா விஷயத்துக்கு வரேன். நாங்க கேள்விப் படறதெல்லாம் உண்மையா?”
“உண்மைதாம்மா..!”
“அப்பா சொன்னதைப் போல, நம்ம ஸ்டேட்டஸ், உன்னோட குவாலிபிகேஷன் இதையெல்லாம் நினைச்சிப்பாத்தியா ராகுல்..”
“பார்த்தேன்ம்மா..!”.
“உன் முடிவுல மாற்றமே இல்லையா?”
“இல்லைம்மா..! நான் ஹாசியைத்தான் கல்யாணம் கட்டிக்குவேன்.” – குரலில் உறுதி இருந்தது.
“ராகுல். தெருத் தெருவாக் குப்பை வண்டி தள்ளியபடிக் குப்பை அள்ற அவளோடக் கையால எப்படிப்பா உன்னால சாப்பிட முடியும்?.” – அப்பா அம்மா இருவரும் ஒன்றாய்க் கேட்டனர்.
“அப்பா…; கால்நடை மருத்துவரான நீங்க, விலங்குகளோட அறைக்குள்ளே கை விட்டு வைத்தியம் பார்க்கறீங்க;
அம்மா, நீ கர்பிணிகளோட பிரசவ நேரத்துல, சிறுநீர், மலம், சீதம் னு எல்லாத்தையும் சுத்தம் செய்து, எப்படியெல்லாம் பிரசவம் பார்க்கறே;
உன் சமையலைச் சாப்பிட்ட உடம்புதானே இது?
என்னோட ஹாசினியும் உங்களை மாதிரி க்ளவுஸ், முகக் கவசம் எல்லாம் மாட்டிக்கிட்டுச் சுகாதாரமான முறைலதான் துப்புறவப் பணியைச் செய்யறாம்மா?”
அதற்கு மேல் ராகுலைப் பேசவிடவில்லை.
“ஹாசினியோட அப்பா அம்மாவை வந்து முறைப்படிப் பேசச் சொல்லு ராகுல்..” – தாய் தந்தை இருவரும் ஒரே குரலில் கூறியபோது, பகுத்தறிவின் உயர்வு வெளிப்படையாய்த் தெரிந்தது.
– ஜனவரி 2024 – கதிர்