ஓ.ஆர்.எஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நரேஷ், தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். ‘‘என் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக பதவி விலகியதால், நான் பொறுப்பேற்க நேரிட்டது உங்களுக்கே தெரியும். நான் இந்த நிறுவனத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்ய இருக்கிறேன். நிறுவனத்துக்கு இளம் ரத்தம் பாய்ச்ச வேண்டும். போட்டிகளைத் துடிப்பாக எதிர்கொள்ள வேண்டும். எனவே முதலாவதாக, ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்…’’
கூட்டத்திற்கு வந்திருந்த நரேஷின் தந்தையும், முன்னாள் தலைவருமான மாசிலாமணியின் முகம் மாறியது.
அடுத்த நாள் காலை. வீட்டில் அப்பாவிடம் நரேஷ் குதூகலத்துடன் பேச ஆரம்பித்தான்.
‘‘டாடி, நீங்க தாத்தாவாகப் போறீங்க. அண்ணா நகர்ல டாக்டர் கற்பகம்னு ஒரு மகப்பேறு மருத்துவர் இருக்காங்க. அறுபத்தஞ்சு வயசான அனுபவமுள்ள டாக்டர். அவங்ககிட்டதான் அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன்…’’ – நரேஷை மேலும் பேசவிடாமல் மாசிலாமணி குறுக்கிட்டார்.
‘‘டாக்டர்ல ஒரு இளைஞரைப் பார்க்காம, வயசான அனுபவமுள்ளவரைப் பார்க்கிற நீ, நம்ம நிறுவனத்தில் மட்டும் வயசான ஆட்கள் இருக்கக் கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம் நரேஷ்? துடிப்பான, இளம் ஊழியர்களைப் போல, அனுபவமுள்ள வயதான ஊழியர்களும் ஒரு நிறுவனத்திற்குத் தேவை இல்லையா?’’
பதில் பேசாமல் தலைகுனிந்தான் நரேஷ்.
– 16 செப்டம்பர் 2013