உன் மைந்தனின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.
நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் காதில் ஓதுகிறாள் மனைவி என்று தாயிடம் கூற சிரிக்கிறாள்.
எனக்கு உன் சிரிப்பின் அர்த்தம் புரிகிறது அம்மா. யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என் கணிப்பு சரிதானே என்கிறான்.
இல்லை மகனே அது ஒரு நிலையான நினைவு சுகமான சுமை அதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும், அது உனக்கு புரியாது.
நான் கருவுற்று இருந்த சமயம் உன் அப்பா பெரிதாக என்னை கண்டுக்கொள்ள மாட்டார். அதனாலேயே நான் ஏழாவது மாதமே அம்மா வீட்டுற்கு சென்று விட்டேன். அங்கு என் ராஜ்ஜியம் தான் பிறகு வலி வந்து என்னை மருத்துவமனைக்குக் கொண்டுச்சென்றனர். அதுதான் பிரசவ வலி என தெரியாமலேயே அனுபவித்தேன். தலை கீழே வந்து விட்டது என பிரசவ அறைக்கு கூட்டி சென்றனர்.
உன் அழுகுரலை முதன்முதலில் கேட்ட பொழுது சிரிப்பும் கண்ணீரும் ஒன்றாய் வந்தது. ஒரு பெண்ணிற்கு இரண்டும் ஒன்றாக வரும் தருணம் அதுவாகதான் இருக்கும்.
உன்னை முதன்முதலில் என் கையில் வாங்கிய தருணம் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையால் கூற இயலாது. பிறகு நீ செய்த சிறு சிறு குறும்புகள்,
நீ என்னிடம் நிகழ்த்திய உரையாடல்கள், நீ செய்த சேட்டைகள் நான் கவலையில் இருக்கும் பொழுது என்னை தொட்ட உன் பிஞ்சு விரல்கள்,
பிறகு என்ன நீ வளர்ந்து விட்டாய் என்னை விட்டும் சிறுது விலகிவிட்டாய் எனினும்,
நீ சிறுவயதில் நிகழ்த்திய லீலைகளை எண்ணி பார்த்து அவற்றை கொண்டே நினைவுகளின் பாலம் ஒன்றை அமைத்தால் அதன் முடிவை கண்டறிய முடியுமோ?