ஒருவரது நடைமுறைப்படுத்த இயலாத விருப்பங்களை கற்பனையில் நடைமுறைப்படுத்தியது போல் காட்டுவதே சினிமா. அதைப்புரிந்து கொள்ளாமல் சினிமா காட்சிகளை உண்மையென நம்பி நடைமுறைப்படுத்த முயல்பவர்கள் நிஜ வாழ்வில் தோற்றுப்போகின்றனர். சினிமாவில் நடப்பது நிஜத்திலும் நடக்கும் எனும் அதீத எதிர்பார்ப்புடன் இருந்தான் காரி.
நகரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் அன்று மாலைக்காட்சியில் பார்த்த திரைப்படத்தில் பெரிய பணக்கார வீட்டு அழகான பெண்ணை ஏழை வீட்டில் பள்ளிக்குச்செல்லாமல், ஒழுங்காக வேலைக்கும் செல்லாமல், பார்க்க லட்சணமாகவும் இல்லாத ஒருவன் காதலித்து திருமணம் செய்வதும், அப்பெண்ணின் தந்தையை ஓட,ஓட விரட்டி ரவுடிகளுடன் சேர்ந்து நடு ரோட்டில் அடித்துக்கொன்று விட்டு ஒரே இரவில் பணக்காரனாக மாறியதுமான கதாநாயகனின் செயல் காரிக்கு மிகவும் பிடித்துப்போனது.
அந்தக்கதாநாயகனாகவே படம் முழுவதும் தன்னை நினைத்துக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளித்ததோடு, பத்து முறை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படத்தைப்பார்த்ததின் விளைவாக சினிமா கதாநாயகனைப்போல் தானும் பணக்காரனாக வேண்டும் எனும் திட்டத்துடன் ஊரில் இருக்கும் பணக்காரர்களின் பெண்களைப்பற்றிய விபரங்களைச்சேகரிக்கத்தொடங்கினான்.
‘சினிமாவில் வரும் கதாநாயகி போல் நிஜத்தில் இருப்பவர்கள் நல்லவர்களாக இல்லை. பார்த்தாலே அருவெறுப்பாக பார்ப்பதோடு, முறைத்துப்பார்க்கிறார்கள். காரில் வருபவர்களோடு தான் பேசுகிறார்கள்’ என நினைத்து வருந்தினான்.
“டேய் மச்சி, சினிமாவ சினிமாவாத்தாம்பாக்கோணும். நம்மனால நெஜத்துல பண்ண முடியாதத படத்துல பாத்து சித்த நேரம் சந்தோசப்பட்டுக்கோணும். படத்துல பார்த்தத நெஜத்துல பண்ணோனும்னு நெனைச்சீன்னு வெச்சுக்கோ கையுங்காலையும் ஒடைச்சுப்போட்டுறுவாங்க. அப்பறம் நக்கறச்சுட்டு கோயில் முன்னுக்காண்ட பிச்சை தான் எடுக்கோணும்” நண்பன் பாரி சொல்வது காரிக்குப்பிடிக்கவில்லை.
“போடா மச்சி. நீ என்ற மேல பொறாமப்பட்டு பேசறே. நா ஊட்டுக்குப்போனா அம்மா சோறு வடிச்சுப்போடுது. அப்பா செலவுக்கு துட்டு குடுக்குது. அப்புறம் எனக்கென்ன கொறைச்சல்? ரோட்டோர இட்லி கடைக்காரர் பொண்ணு ராணியுந்தா என்னைக்காதலிக்கிறதா சொல்லுது. அதக்கட்டிகிட்டா இட்லி மாவு அரைக்கப்போட்டுறும். ரோடு காண்டாக்டரு சித்தன் பொண்ணு இருக்குது பாரு அது மேலதான் எனக்கு இது…. அது கூலிங்கிளாஸ் போட்டு கிட்டு டெய்லியும் ஒரு கார்ல காலேஜ் போகும் பாரு. அம்சமா இருக்குது மச்சி…அதக்கட்டீட்டன்னா படத்துல மாதிரி அவ அப்பன கொல்ல மாட்டேன். வேலைக்காரனா வெச்சுக்குவேன். எப்படி நம்ம ஐடியா…? கதைய மாத்திருவமில்ல…”
“அப்படியே கதைய இன்னுங்கொஞ்சம் மாத்திடே…”
“எப்படி….?”
“இட்லிக்கடை ராணிய கண்ணாலம் பண்ணீட்டு சந்தோசமா குடும்பம் நடத்தி கொழந்தைங்கள பெத்துக்கற மாதிரி….”
இதைக்கேட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்ற காரி, நண்பன் எனப்பார்க்காமல் பாரியின் கன்னத்தில் அறைந்தான். பாரியின் கண்களில் கண்ணீர் வெளிப்பட்டது.
“சேரிடா… நீ நெனைக்கிற மாதிரியே பண்ணிக்க… பண்ணறதும் பண்ணற இன்னும் பெருசா பண்ணு….”
“என்ன…?”
“பாக்கிறதும் பார்க்கிறே…. நம்ம மால்காரர் பொண்ணையே பார்த்திடே….”
“இது நல்லா இருக்கு. அப்படிப்போடு அறுவாள…நீதாண்டா நண்பன்” எனக்கூறி விட்டு சைலண்சர் பிடுங்கி விட்டதால் அதிக சத்தம் வரும் தனது பைக்கின் எக்ஸ்ஸிலேட்டரைத்திருகி சத்தம் வரச்செய்து, பாதையில் செல்லும் அனைவரது பார்வையும் தன் மீது படுமாறு செய்தான் காரி.
அந்த நகரத்திலேயே பெரிய ஷாப்பிங் மால் வைத்து நடத்தும் கோடீஸ்வரர் ரஞ்சனின் பங்களா வீட்டின் முன் போய் நின்று யோசித்தான். செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டான்.
‘கொம்மாளே…. ஒரு நாளைக்கு எனக்கு சொந்தமாகப்போற வீடு தானே நீயி. இப்போதைக்கு போன்ல கம்முனு கிட. கூடிய சீக்கிரம் உனக்குள்ளே நானே வந்து ஜம்முனு படுக்கப்போறேன்’ என தனக்குத்தானே பேசியபடி பங்களா வீட்டிற்குள் நுழையத்திட்டம் போட்டான்.
“வீட்டுத்தோட்டத்துல வேலை இருக்குது வாறியா…?” கேட்ட மம்பட்டியாளிடம் “எங்க….?” எனக்கேட்டான். “இங்க மால்காரர் வீட்ல தான்” என்றதும் தனது திட்டத்தை நிறைவேற்ற ‘பழம் நழுவி பால்ல உழுது’ என மனதில் மகிழ்சியடைந்தவன், சம்பளம் பற்றி பேசாமல் “சரி” என்றான்.
அழைத்தவனுடன் பெரிய பங்களா வீட்டின் உள்ளே நுழைந்த போதே வீட்டு நாய்களைப்பார்த்தவனுக்கு மனதுள் மரண பயம் வந்து போனது.
“மாடு மாதிரி நாய்க இருக்குது….?” வேலைக்கு அழைத்தவனிடம் கேட்டான்.
“போன வாரம் இங்க தோட்ட வேலைக்கு வந்தவன் ஒருத்தன் வீட்டு வேலைக்காரப்பொண்ண ஒரு மாதிரியா பார்த்துட்டான். அதோ அந்த ரூம்ல அவன விட்டு ரெண்டு நாய்கல அவுத்து உட்டானுங்க. கண்ணாலமானா கொழந்தை பொறக்காத மாதிரி பண்ணிடுச்சுக…”
“அப்புறம்…..?” பயத்தின் உச்சத்தில் ஏற்பட்ட அச்சத்தில் கேட்டான்.
“நாம என்ன படிச்சிருக்கறமோ அதுக்கு ஏத்தாப்ல தான வேலை தேடறமில்ல… அது மாதிரி வசதிக்கு தகுந்த பொண்ணத்தேடோணும். வேலைக்காரியப்பார்த்ததுக்கே இப்படி நாய்களுக்கு விருந்து கொடுத்திருக்காங்கன்னா முதலாளி பொண்ணப்பார்த்தா என்ன பண்ணுவாங்க…?”
“கொன்னுடுவாங்களா…?”
“சீக்கிரமா கொல்ல மாட்டாங்க. தலை கீழா கட்டி தொங்கப்போட்டிருவாங்க”
“இப்படித்தா நேத்து பார்த்த படத்துல பண்ணுனாங்க. கதாநாயகன் அப்படியே பறந்து, பறந்து பத்து பேரையும் அடிச்சு போட்டிட்டு கதாநாயகிய தூக்கிட்டு போயிட்டானே…..”
“அது சினிமால…. தம்பி. நெஜத்துல முடியாது… ஒருத்தன் முதிச்சாலே உள்ள இருக்கிறது கொடலோட வெளிய வந்திரும்….”
இதைக்கேட்டவுடன் காரிக்கு உள்ளூர பயம் அதிகரித்தது. நண்பன் பாரி சொன்னபோது கோபத்தில் அவனது கன்னத்தில் அறைந்தவன் தற்போது யோசித்தான்.
“ஏனோ வயிறு கலக்குது. போயிட்டு நாளைக்கு வாரேன்…” சொன்னவன் வேகமாக சென்று வீட்டை விட்டு வெளியேறினான் காரி.
“ரொம்ப தேங்க்ஸ் மாமா. காரி என்னோட பெஸ்ட் பிரண்ட். நல்லவன் தான். ஆனா உலகம் தெரியாத வெகுளி. நெழல நெஜம்னு நெனைச்சு, நெஜ வாழ்க்கைய தொலைச்சிட்டிருக்கிற அவன திருத்த இதத்தவிர வேற வழி எனக்குத்தெரியல. நீங்க இங்க தோட்ட வேலைல இருக்கிறத நெனைச்சு இந்த ஊட்டுப்பொண்ண லவ் பண்ணுன்னு சொன்னேன். நீயும் நாஞ்சொன்னதக்கேட்டதுனால, அவனுக்கு புரியற மாதிரி சொன்னதால, இப்ப இட்லிக்கடை ராணிக்கு ஒதவி செஞ்சிட்டிருக்கான் காரி…” மால் அதிபர் ரஞ்சனிடம் வேலை பார்க்கும் தன் மாமனிடம் நண்பனுக்காக நன்றி சொன்னான் பாரி.