நான் சிரித்தால் தீபாவளி…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 9,831 
 
 

நரகாசுரன் செத்த நாள்தானே தீபாவளி?! அவன் அழிவை விழாவாகக் கொண்டாட வேண்டிக் கொண்டானாம். யாருக்குத் தேவை அதெல்லாம்!?

இங்கே ஒவ்வொரு தீபாவளி வரும்போதும் உயிர்போய் உயிர் வந்துவிடுகிறது சராசரி மனிதர்களுக்கு! இதில் ‘நான் சிரித்தால் தீபாவளியாம்!’. என்னைக்குச் சிரிச்சிருக்கான் அப்பாவி மனிதன்.

தீபாவளி இன்னைக்கு எப்படியோ தெரியவில்லை! ஆனால் ஆதிலிங்கத்துக்கு அன்னைய தீபாவளி கண்ணில் நிழலாடியது. பெரிய கூட்டுக் குடும்பம் அவர் குடும்பம்.. கூட்டுக் குடும்பத்தில் வருமானத்துக்கு என்ன குறைச்சல்..?! தீபாவளியை தித்திக்கத் தித்திக்கக் கொண்டாடலாம்தானே என்று தானே நினைக்கிறீர்கள்?! அப்படி எதுவும் இல்லை!

அடுத்த நாள் தீபாவளி என்றால், அவனும் அவன் தங்கையும் வீட்டு வசல் படியில் ‘யாருக்கும் எதையும் இல்லை என்று சொல்லாத’ அண்ணன் நெல்லையப்பன் வரவிற்காக ஆவலோடு அமர்ந்தபடி காத்திருப்பார்கள். எதற்கு?

எதற்கு..? எல்லாம் அந்த வயதில் ஆசைப்படும் பட்டாசுக்காக.!

அண்ணன் வருவார். எல்லாரையும் ஒன்னா உக்காரச் சொல்லி, வாங்கிவந்த பட்டாசுகளை பங்கு போட்டுத் தருவார். மத்தாப்பு ஒரு டஜன் பாக்கெட்டை ஆளுக்கு ஒரு ஒரு வத்திப் பெட்டி வீதம் சிகப்பில் மூன்று பச்சையில் மூன்று., பொறிமத்தாப்பில் மூன்று. கம்பி மத்தாப்பில் ஆளுக்கு ஐந்து கம்பி. சரவெடி மட்டும் பிரிக்க முடியாது அவரே அதிகாலை கொளுத்த வைத்துக் கொள்வார். கொள்ளுப்பட்டாசு ஆளுக்கு ஐந்து டப்பி. இதுதான் அன்றைய தீபாவளி. ஆனாலும் இன்பமாய் இருக்கும். அதிகாலை எழுந்தது, குளித்து பெரியவர்கள் காலில் ஆசி வாங்க விழுந்தால், பெரியண்ணன் மட்டும் சலவை நோட்டுகளை சப்ளை செய்வார். அதே ஆர்வத்தில் அம்மா காலில் விழுந்தால்… ஆளுக்கு ரெண்டு சுடச்சுட சுடும் உளுந்து வடை ரெண்டு தந்து சிரிப்பாள்.

அப்பா மட்டும் கரும்புகை கக்கும் பாம்புவில்லையை அவர் கட்டுலுக்குக்கீழே கொளுத்தச் சொல்லி, கொசுக்கடிக்கு இலவச மருந்து தேடிக் கொள்வார். வெடிசத்தம் கேட்டா.. ‘என்னப்பா ஐஞ்சு ரூவா குளோசா!’ கேட்டு ன்னு நோகடிப்பார்!.’காசைக் கரியாக்கக் கூடாது!’ என்பது அவர் கருத்து.

நரகாசுரன் சாகாமலே இருந்திருக்கலாம். செத்து, தங்களை நோடிப்பதாகப்படும் அந்தக் கூட்டுக் குடும்ப வாசிகளுக்கு.

ஆனாலும் தீபாவளி தித்தித்தது! அன்றைக்கு எல்லாரும் மகிழ்ந்து சிரிப்போம்.! பட்டாசுகள் ஆசை தீர அதிகம் இல்லை! அளவாய்த்தான் என்றாலாம் ஆனந்தம் ரொம்ப அதிகமாக இருந்தது. குறையிலும் ஒரு குதூகலம்.

இன்றைக்கு கரியாக்கறயே காசை என்று கடிந்த அப்பா இல்லை! வடை சுடச்சுடத்தர அம்மா இல்லை! பங்கிக் கொலுத்த பங்ககாளிகள் இல்லை!

‘எங்கே நான் சிரித்தால் தீபாவளி?. பை நிறைய பணமிருக்கிறது மனம்தான் நிறைவில்லாமல் தவிக்கிறது சொந்த பந்தங்களுக்காக!

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *