நான் என்ன சொல்லிவிட்டேன்…?!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 1,941 
 
 

முதல் மணி அடித்தபோதே பள்ளி முதல்வரைப் பார்க்க வந்திருந்தார் பார்த்த சாரதி. காலைக் கூட்டம் முடிந்து மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றிய நீதி போதனைகளை வழங்கிவிட்டு வந்த பள்ளி முதல்வர் பியூனைக் கூப்பிட்டு காத்திருக்கும் பார்த்த சாரதியை உள்ளே வரச் சொன்னார்.

‘வாங்க, உக்காருங்க…!’ என்றதும் உட்கார்ந்தார் பார்த்த சாரதி.

‘என்ன விஷயம்? சுருக்கமாச் சொல்லுங்க, எனக்கு வேலை இருக்கு!’ என்றார். அவர் பேச்சில் தலைமைத் திமிர் தென்பட்டது. மத்தவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கா மாதிரி.

‘என் பேரன் டிசீ வாங்கிக்கலாமினு வந்திருக்கேன்!.” என்றார் பார்த்த சாரதி.

அதிர்ந்து போன முதல்வர் ‘ஏன்..?! என்ன பிரச்சனை?! சொல்லுங்க!’ என்றார். முதலில் இருந்த மிடுக்கும், முறுக்கும் இப்போது இல்லை. ஒரு மாணவன் டிசி வாங்கி வெளியேறுகிறான் என்றால் சும்மாவா?! அது அவர் நிர்வாகத் திறமைக்கு அல்லவா இழுக்கு?!

பதில் சொல்லாமல் மிடறு விழுங்கினார் பார்த்த சாரதி.

‘சும்மா சொல்லுங்க, எதுனாலும் சரி, குறை களைய வேண்டியது என் வேலை!’ என்றார் முதல்வர்.

‘இங்க என் பேரனுக்கு கெமிஸ்டிரி எடுக்கற ஆசிரியருக்கு ஒரு புத்தகத்தை பப்ளிக் லைப்ரரியிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கான் என் பேரன். டி.யூ அன்னைக்கு புக்கைத் திருப்பிக் கொடுக்கக் கேட்டபோது, அவர் சொல்லியிருக்கார்… ’இந்த புக்கை விடறதுக்கே எனக்கு மனசில்லே…! இது தொலைஞ்சிடுச்சுன்னு சொல்லிடு! ஃபைன் கட்டிடேன்! பைன் அமவ்ண்ட் வேணா நான் தந்துடறேன்னாராம்.

ஒரு நூல் நிலையம் திறக்கப்படும்போது, நூறு சிறைச்சாலைகள் மூடப்படுதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஒரு நூல் நிலைய புத்தகம் திருடப்பட்டால், எத்தனை சிறைச்சாலைகள் திறக்க வேண்டி வருமோ?! யாரையும் நான் குறை சொல்லலை! நாடு அப்படியாயிட்டுது! என் பேரன், இங்க படிக்க வேண்டாம்னு நான் முடிவு பண்ணினதுக்குக் காரணம் அதுதான்.

வெறும் காலைக் கூட்ட உபதேசங்களால் மட்டும் கல்சர் உருவாயிடாது. கற்பவன் மட்டுமில்லை, கற்பிப்பவனும் காப்பாத்த வேண்டிய கட்டாயத்திலிருப்பது ‘கல்சர்’!எதுக்கு வெட்டிப் பேச்சு! எனக்கும் வேலை இருக்கு! டி சி ரெடி பண்ணுங்க!’ என்றார் பார்த்தசாரதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *