மே மாத லீவு விட்டாச்சு.. இனி பிள்ளைகள் எல்லாம் ஒரே ஆட்டம்தான். எதுக்கு லீவு விடணும்?! மேலயும் ஸ்கூல் வச்சுத் தொலைச்சா என்ன?! இந்த வாலுகளை எப்படி மேய்க்கப் போறோம்னே தெரியலையே?!’ என நொந்து கொள்ளும் நூற்றுவரில் நாகராஜும் ஒருவன். ஆனால், அவன்மனைவி அம்சவேணி கொஞ்சம் அவனைவிட அதிகம் படித்தவள். ஒரு பெண் படித்தால், ஒரு குடும்பமே படித்தா மாதிரி என்பதற்கு இணையாக அவள் திட்டங்கள் இருக்கும். மே லீவுக்கு ஒரு திட்டம் தீட்டினாள்.
அக்கம் பக்கத்திலிருப்பவர்களைச் சேர்த்துக் கொண்டு நகரிலுள்ள தனியார் நூலகம் ஒன்றுக்கு எல்லாப்பிள்ளைகளையும் சேர்த்துவிடச் சொல்லி, லீவைப் பயனுள்ள வகையில் கழிக்க ஏற்பாடு செய்தாள்.
நகர நூலகம் தனியார் நூலகம் என்பதால் பணம்கட்டிச் சேரவேண்டும். ஒன்று இரண்டல்ல… ஆயிரக் கணக்கில் பணக்கட்ட பணக்காரக் குடும்பத்துக்கே முடியும். எல்லாரையும் படிக்க வைக்க அவளும் உதவினாள். எல்லாரும் நூலகம் நோக்கிப் பயணப்பட்டார்கள். அங்கிருந்த பணிப்பெண் உறுப்பினர் கட்டணம் வாங்கி டிரா உள்ளே போடும்வரை ஒரு வார்த்தை பேசவில்லை!.
மே வெயிலின் உக்கிரம் ‘மஞ்சள் அலர்ட் ’ரெட் அலர்ட்’ என்று மகிமை காட்ட, அவள் ஒரு மணி வாக்கில் போய், நாலு மணிவாகில் வெயில் தாளத் திரும்ப உத்தேசித்தாள் அவள் பாரதிதாசன் பாடலின்படி ‘கற்கையில் வருந்தும்படி இருப்பினும் தொடர்ந்து படி’.. கற்கத்தான் வேண்டும் அப்படி! கல்லாதவர் வாழ்வதெப்படி? என்ற வரிகளுக்கு இணங்க பிள்ளைகளோடு போயிருந்தாள்.
உறுப்பினர் தொகை கஜானா நிரம்பியதும் டூ… டுத்திரி லஞ்ச்… டூ டு திரி லஞ்ச்ச் என்று கிளிப்பிள்ளியாய்க் கூவ கொதித்துப் போனாள். எல்லோரையும் வெளியேற்றுவதில் குறியாய் இருந்தாள் பணிப்பெண்!
‘உன் சாப்பட்டில் பங்கு கேட்கலை..! சாப்பாட்டு வேளையில் யாராவது அன்னியர் வந்தால்கூட ‘வாங்க ஒரு வாய் சோறுண்ணுங்க!’ன்னு சொல்ற ஊர் நம்ம ஊர்…! நீ என்னம்மா டூ…டு த்ரி லஞ்ச் டைம் டைம்னு கூவறே?! பிள்ளைகள் சோறை, வெயிலை மறந்து கல்விப்பசியில் நூலகம் வந்திருக்கு.!. நீ இப்படி கடுப்பேத்தறயே? நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பினு பாடிய பாட்டைக் கேட்டதில்லையா?
ஃப்ரியாப்படிக்கவிடும் பொது நூலகத்துல ஒருத்தரும் நுழையறதில்லை!.. இங்க பணங்க்கொடுத்து படிக்க வந்த பிள்ளைகள்; படிப்பை மதிக்காம சரியான ‘சோற்றுப்பிண்டமா’ அலையறயே?!… உன்னைப் பற்றி புகார் பண்ணனுமா?! இவங்க, கொடுக்கிற உறுப்பினர் தொலைலதான் உனக்கு ஊதியமே வருது! உணர்ந்து செயல்படு!’ என்று கத்த எல்லோரும் திரும்பி பார்க்க வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் பணிப்பெண்.