நல்ல இடம்… ‘நீ’ வந்த இடம்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 4,866 
 
 

என்ன முயற்சிபண்ணியும் மகளுக்குக் கல்யாணம் அமையவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார் வைத்தியநாதன். அயர்ந்து போனவர் மனநிம்மதிக்காக வாசலில் காலாற உலாத்தியபோது கண்ட காட்சி… 

கீரைக் கட்டுகள் விற்பவள் ஒருத்தி,  தன்தலையில் கூடையில் கீரைக் கட்டுகளை வைத்துக்கொண்டு ‘கீரை! கீரை!!’ என்று கூவியபடியே விற்றபடி போய்க் கொண்டிருந்தாள். அவள் பின்னாடியே ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க அவள் குழந்தை அவளைப் பின் தொடர்ந்து ‘அம்மா…! அம்மா.!’ என்றபடி போய்க் கொண்டிருந்தது. 

கீரைக்காரி,  கீரை விற்பதில் காட்டிய ஆர்வத்தை தன்னைப்பின் தொடரும் குழந்தையின் குரலுக்குக் காட்டவில்லை. தலைபாரம் தத்தி நடக்கும் குழந்தை பாரத்தைவிடக் கூடுதலாய்ப் பட்டிருக்க வேண்டும். 

தொடர்ந்து வந்து கொண்டிருந்த குழந்தை ஒரு கட்டத்தில் கூவுவதை விடுத்து,  மண்ணில் புரண்டு ‘அம்மா! அம்மா!’ என்று அழுது அடம்பிடிக்க,  கூடையைத் தலைச்சும்மாட்டில் ஏற்றி வைத்துக் கொண்டு குழந்தை முதுகில் ‘ஒரு அடி’போட்டு, தூக்கி இடுப்பில் இடுக்கிக் கொண்டு நடந்தாள் கீரைக் காரி. 

கண்ணில் கண்ட இந்தக் காட்சி,  ஒரு கனத்தில் வைத்திய நாதனுக்கு வாழ்க்கைப் பாடத்தை வழங்கியது. 

‘சும்மா..சும்மா ‘அம்மா! அம்மா!’ என்று கூவியபோது கண்டு கொள்ளாத தாய்…(கீரைக்காரி) அம்மா…! என்று அரற்றி அழுதபோது, மண்ணில் புரண்டபோது, வாரி அணைத்து இடுப்பில் இடுக்கிக் கொண்டாளே..?! கீரைக்காரிக்கே அத்தனை கருணை இருக்கும் போது மகளின் திருமணத்திற்கு வழிகாட்டு என்று வார்த்தையால் கடவுளை வழிபடுவதைவிட கீரைக் காரி குழந்தையாய் அழுது அடம்பிடித்தால் கடவுளும் வாரி எடுத்து வாஞ்சையோடு கருணை பொழிவார்தானே…?! 

‘யானே பொய்..! என் நெஞ்சம் பொய்.!  என் அன்பும் பொய்! வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே!’  என்று இதைத்தானே நம்மோர் பாடினர்?

கீரைக் காரி எந்தத் தெருவிலும் இன்றைக்கு விற்கப் போகாமல்  என் தெருவில் வந்தது இதை எனக்குத் தெரிவிக்கத் தானோ…?! 

நல்ல  இடம் நீ வந்த இடம்., வரவேண்டு காதல் மகராணி…! என மனம் மகிழ்ச்சியில் ரீங்காரமிட்டது.  

இது மைண்டு வாய்ஸ் என்பதால் அவரை மைண்டு பண்ணாமல் போய்க் கொண்டிருந்தாள் கீரைக்காரி. 

தொழுதால் சிக்காத கடவுள் அழுதால் அகப்படுவான்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *