இன்றைய இளைய தலைமுறையிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.அவர்களைப் பற்றிய புரிதல் இல்லாமையும் தவறான புரிதலுமே தலைமுறை இடைவெளிச் சிக்கலுக்கு வழி வகுக்கிறது.
நமக்குள் ஒரு மிதப்பு இருக்கிறது. நாம் ஆண்டு அனுபவித்த்வர்கள். நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு விஷயம் நாம் எத்தனை ராஜியங்களை ஆண்டோம்?! எதை அனுபவித்தோம்!
‘பூஜா தன் பெற்றோர்களிடம் ‘உங்களிடம் ஒரு விஷ்யத்தை மனம் திறந்து பேச விரும்புகிறேன்!’ என்றாள்
உடனே அவள் பெற்றோருக்கு உதறலெடுக்க ஆரம்பித்தது. ‘இது எங்கே யாரை லவ் பண்றேன்னு ஆரம்பிக்கப் போகுதோ’னு கலங்க, அந்த கலக்கத்தை அவள் வார்த்தைகள் பொய்ப்பித்தன.
‘அப்பா… அம்மா! எனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தால்…’
‘இது என்ன சொல்லப்போகிறதோ?’ தயங்கினார் விமல்தாஸ்.
தயக்கத்தை மறைத்துக்கொண்டு, ‘சொல்லு பூஜா’ என்றார். போலி கருணையோடு.
‘எனக்கு வரன் பார்ப்பதாக இருந்தால் அது மிகப்பெரிய குடும்பமாக இருக்க வேண்டும். அந்தஸ்து இருக்கோ இல்லையோ கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும்’ என்றாள்.
விமல்தாஸுக்கு உயிர்போய் உயிர் வந்தது. அப்பாடா என்ற நிம்மதியில் ‘ஏன் பெரிய குடும்பம்?’ என்று கேட்டார்.
‘அப்பா நான் தனிமரமா இருக்க விரும்பவில்லை.. கூட்டுக் குடும்பம் என்றால் நல்லது கெட்டத்க்கு நாலுபேர் கூடவே இருப்பாங்க! ஒரு துணை இருக்குங்கற தைரியம் எனக்கும் என் வாரீசுக்கும் தனியாய் வரும்!’ என்றாள்.
‘சே! இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா?’ ஆச்சரியமாக இருந்தது அவருக்கு. மாமியார் மாமனார் கூடாது… நாத்தனார் மச்சினர் தொல்லை கூடாது என்று புலம்பும் நவீன தலைமுறையில் தன் மகள் வித்யாசமாய் சிந்திக்கிறாளே என்று விக்கித்து நின்றார்.
பூஜாவின் தோழி சத்யபாமா தன் பெற்றோரிடம் இன்னும் வித்யாசமாய் தன் விவாகம் பற்றி பேசினாள்.
‘அப்பா… இதுவரை உனக்கிருந்த குடும்பமல்ல… நீ பெரிய கூட்டுக் குடும்பத்தில் எட்டுப்பத்துப் பேரோடு வளர்ந்தாய்…! ஆனால் இனி நம் குடும்பம். ரொம்ப ரொம்பச் சின்னக் குடும்பமாய் அருகிவிட்டது!’ என்றாள்.
சத்யாவின் அப்பா, சிவம் கேட்டார்…’நீ என்ன சொல்ல வருகிறாய்?!’
‘இல்லப்பா..! என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டே…! நான் உனக்கு ஒரே பெண்! என் மாமனார் மாமியார் கணவர் நீ அம்மா என்ற சின்ன வட்டம்தான் இனி, நம் குடும்பம். நல்லது கெட்டது இனி நம்மோடுதான். உன் உடன் பிறந்தவர்கள் மற்றவர்கள் உறவினர்கள் எல்லாம் கவுரவ நடிகர்கள் மாதிரி வருவார்கள் போவார்கள் அம்மட்டே! அதனால் எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையாய் இரு! எல்லாரோடும் இணங்கிப் போ!’ என்றாள்.
பெரியவர்கள் சின்னவர்களுக்கு அட்வைஸ் பண்ணிய காலம் போய் வாழ்க்கை பற்றி பல் வேறு பரிணாமங்களைத் தங்கள் புரிதலுக்கு ஏற்ப காலம் இளைய தலைமுறைக்குக் கற்றுத் தந்திருக்கு! நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம். அதில் பட்டம் வாங்க, வயது தேவையில்லை. வளைந்து கொடுக்கிற இதயம் தேவை என்பதை முதிய தலைமுறைக்கு முன்வைத்தன இளைய தலைமுறை, இரு கோணங்கள்!