(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாம்பு தோலைக் கழற்றி வைத்துவிட்டுப் புறப்பட்டது.
ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பக்கம் அது போனது.
அங்கே நின்ற தனியன் ஆட்டிடம் “அதோ பார்… பாம்பு உன்னுடையவர்கள் இருக்கும் இடத்தை நோக்கித்தான் போகிறது. நச்சுப்பாம்பு – பல் பட்டாலே போதும்..” என்று கூறியது சேவல்.
“….அப்படி ஒன்றும் நடந்து விடாது. பாம்பு தோலைக் கழற்றிப் புதிதாய்ப் பிறந்திருக்கிறது.” என்றது தனியன் ஆடு.
சிறிது நேரத்தில் –
ஆடுகளின் அலறல் புல்வெளியை உலுக்கியது.
ஓசை வந்த திசை நோக்கி தனியன் ஆடும் சேவலும் ஓடின.
அங்கே –
பாவம்…அப்பாவி ஆடுகள் இரண்டு பாம்புக்குக்குப் பலியாகிச் செத்துக் கிடந்தன.
சேவல் சொல்லியது-
“பல்லைக் கழற்றாத பாம்பு
தோலைக் கழற்றி என்ன? வாலைக் கழற்றி என்ன?”
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.