திருப்பம்! – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 3,251 
 
 

சுஜாதா, ராஜாமணி இருவரும் ஒரு வார இதழை தொடர்ந்து படிப்பதோடு, வாசகர் கடிதங்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிக்கு கடிதம் எழுதுபவர்கள். இதழில் வெளியாகும் இவர்களது கடிதங்கள் பரிசுக்கு தேர்ந்தெடுக்கும் போது இவர்களது பெயரோடு முழு முகவரியும் வெளியாகும் என்பதால், அந்த முகவரிக்கு இதழைப்பற்றியும், நாட்டு நடப்பு பற்றியும் கடிதம் மூலமாக இருவரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை கடிதங்களில் பறிமாறிக்கொண்டதால் இருவருக்குள்ளும் பேனா நட்பு மலர்ந்தது.

வேறு, வேறு ஊரைச்சேர்ந்தவர்கள் என்பதால் நேரில் சந்திக்கவும் உடனே வாய்ப்பு அமையவில்லை. கடிதம் தவிர தொலை பேசி, அலை பேசி வசதிகளும் இல்லை.

ஒருமுறையாவது இருவரும் நேரில் சந்தித்து எண்ணக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டுமென ராஜாமணி கடிதம் எழுத, சுஜாதாவும் சம்மதித்து தனது ஊரான கோவையை விட ராஜாமணியின் ஊரான திருச்சியில் சந்திக்க விருப்பம் தெரிவிக்க ராஜாமணியும் சரியென கடிதம் எழுத ஒரு நாளையும், நேரத்தையும் கடிதம் மூலமாக முடிவு செய்தனர்.

சுஜாதா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்ததால் தான் திருச்சியில் சந்திக்கும் திட்டம். அதாவது ஶ்ரீ ரங்கத்தில் உள்ள ரங்கநாதரையும் பார்த்து விடவே அத்தகைய முடிவு. 

சந்திக்கும் நாளுக்கு முதல் நாள் இரவு தூக்கமின்றி இருவருமே தவித்தனர். முதன் முதலாக பேனா நட்பு முக நட்பாக மாறப்போகிறது. முதன் முதலாக சந்திக்கும் போது ஏதாவது பரிசு எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது. யாருக்கு ‌என்ன பிடிக்கும்? என கேட்டுத்தெரிந்த பின்பு வாங்கிக்கொடுப்பதற்கு பெயர் பரிசல்ல. பரிசைக் கொடுப்பவருக்கு பிடித்தது, பரிசை வாங்குபவருக்கும் பிடித்திருக்க வேண்டும். அதுவே நல்ல நட்புக்கு இலக்கணமாகும். இருவருமே என்ன பரிசு வாங்குவது என யோசித்து முடிவு கொண்டனர்.

கோவையிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு பேருந்து பயணம் மூலம் சுஜாதாவால் மதியம் திருச்சிக்கு போய் சேர முடிந்தது. மதிய விருந்துக்கு வரச்சொல்லித்தான் ராஜாமணி எழுதிய கடிதம் சொல்லியது. பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ பிடித்து குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்று வாசலில் இறங்கிய போது வயதான ஒரு பெண் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச்சென்று இருக்கையில் அமரச்செய்து, குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு “சித்த இருங்க ராஜாமணி வர்ற நேரமாயிடுச்சு” எனக்கூறிய அடுத்த நொடி முப்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் வீட்டினுள் நுழைந்ததும் சுஜாதாவைப்பார்த்து “நீங்க யாரு? யாரப்பார்க்க வந்திருக்கீங்க?” என வினவ, “என்னோட பேரு சுஜாதா. நான் கோயம்புத்தூர்ல இருந்து வர்றேன். இங்க ராஜாமணிய பார்க்க வந்திருக்கேன். அவங்க எப்ப வருவாங்க? அவங்க உங்க சகோதரியா?” என கேட்க, “இல்லை. நான் தான் ராஜாமணி. நானும் உங்கள ஒரு பொண்ணுன்னு நினைச்சுத்தான் உங்களுக்கு பரிசா கொடுக்க ஆபீஸ்ல இருந்து துணிக்கடைக்கு போயி சேலை வாங்கிட்டு வர்றேன்” என்றதும், “நானும் உங்கள பொண்ணுன்னு நினைச்சுத்தான் பரிசு கொடுக்க சேலை வாங்கிட்டு வந்திருக்கேன்” என சுஜாதா கூறிய போது இருவரது முகங்களிலும் அசடு வழிந்தது அப்பட்டமாகத்தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *