மன வருத்தம் மேலோங்க உறக்கம் வெகுதூரம் ரகுவை விட்டு சென்றிருந்தது. சில்லென்று அடிக்கும் காற்றும், லேசான தூரல் மழையும் உடல் சுகத்தைக்கூட்டினாலும் மனதின் நிலைப்பாட்டால் சுகத்தின் பூரணம் வெளிப்படவில்லை.
தவறுகளைத்தவிர வேறு எதையும் செய்யாத ஒருவன் ‘உலகில் தவறென்று எதுவுமில்லை’ என மேடையேறிக்கூறுவதை ரகுவால் ஏற்க முடியவில்லை. அவனிடம் நிறைய பணம் சேர்ந்தாலும், நிறைவான குணம் சேரவில்லை. பணத்தால் உடலில் நிறம் மாறினாலும், குணத்தால் உள்ளத்தில் அறம் சேரவில்லை என்பது அவனது செயல் பாடுகளிலேயே காட்டிக்கொடுத்தது.
அவனையறியாத மக்கள் மதிப்பதற்கு அவன் தவறான வழியில் சேர்த்த பணம் காரணம். பணத்தால் அவனுக்கு கிடைத்த அதிகாரம். அதிகார பலத்தால் பொய்யை மெய்யாக்கவும், மெய்யைப்பொய்யாக்கவும், நல்லவனை கெட்டவனாக்கவும், கெட்டவனை நல்லவனாக்கவும் முடிகிறது என்பதை கண் கூடாகப்பார்த்தபோது நல்லவனான ரகு மிகுந்த வேதனைக்கு ஆளானான்.
தவறென்பதை தவறல்ல என்றும், சரியானதை சரியல்ல என்றும் மாற்றிவிட முடிகிறது. பத்து பேர் உள்ள இடத்தில் தவறை ஒன்பது பேர் செய்யும் போது அது சரியென்றாகி விடுகிறது. சரி, தவறுக்கு கிடைக்கும் ஓட்டுக்களைப்பொறுத்து தான் சரியா?தவறா? என மக்கள் மனமெனும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அப்படித்தான் ரங்கி எனும் நல்ல செயல்களைச்செய்யாத மனிதன் கூட மனிதருள் மாணிக்கமாக போற்றப்படுகிறான்.
“அவன் ரொம்ப நல்லவனுங்க….” என சிங்கன் பொங்கனுக்கு ‘நல்லவன்’ சர்டிபிகேட் கொடுக்க கேவலம் ஒரு கோட்டரே போதுமானதாக உள்ளது.
அடுத்தநாள் அந்த நல்லவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கோட்டர் வாங்கிக்கொடுத்தால் ‘நல்லவன்’ என்று நேற்று சொன்ன அதே நாக்கு ‘கெட்டவன்’ என மாற்றியும் பேசுகிறது.
“கெட்டதுங்கிற வார்த்தையே தேவையில்லைங்கிறது என்னோட கருத்து. இந்த உலகத்துல எல்லாமே நல்லது தான். ஒருத்தனோட பொருளா இருந்தாலும் அவன் பயன் படுத்தாத போது எனக்குத்தேவைப்பட்டா நான் பயன் படுத்துறதுல என்ன தப்பு இருக்கு? அதப்போலத்தான் மனுசங்களும். இது வரைக்கும் எதையும் நான் தேடிப்போனதும் இல்லை. அதுவா தேடி வந்தா அது எனக்கு பிடிச்சிருந்தா விடறதும் இல்லை. இதைத்தான் நான் செஞ்சிட்டிருக்கறேன். என்னைக் கெட்டவன்னு சொல்லறாங்க. குற்றங்கண்டு பிடிக்கிறவங்களப்பத்தி நான் என்னைக்குமே கவலைப்படறதில்லை. கண்டுக்கிறதுமில்லை. சூரியனப்பாத்து நாய் ஊளையிட்டாலும் சூரியன் அதைக்கண்டுக்காதது மாதர நானும் கண்டுக்கிறதில்ல” என ரங்கி பேசியதைக்கேட்டு கூட்டம் கைதட்டியது.
வாரம் ஒரு முறை ஊருக்கே பொது கறி விருந்து போட்டான்.
“வாரம்பூரா சாதாரணமா சாப்பிடறவங்க ஞாயித்துக்கிழமை ஆயிரக்கணக்குல செலவு பண்ணி பெரிய ஹோட்டல்லியோ, வீட்லியோ வித, விதமா சாப்பிடனம்னு நெனைக்கறோம். ஆனா எல்லார் கிட்டையும் அவ்வளவு வசதி இருக்கிறதில்லை. அதனால இந்த ஊர்ல பொறந்து வளர்ந்த நானு எல்லாருக்கும் பொது விருந்து கொடுத்திரலாம்னு கொடுக்கறேன். என்னை கெட்டவன்னு சொன்னவங்களும் இங்க வந்து சாப்பிடறாங்க. அவங்களை நான் தப்பாவே நெனைக்கல. ஏன்னா தப்புங்கிற வார்த்தையே இல்லைன்னு நெனைக்கிற எனக்கு அவங்களை மட்டும் எப்படி தப்பா நெனைக்கத்தோணும்…?”
இந்தக்கேள்விக்கு அங்கிருந்த யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. தலை நிமிர்ந்து ரங்கி தைரியமாகப்பேசினான். அதே சமயம் நல்லவர்கள் எனும் நற் செயலை மட்டுமே செய்தவர்கள் தலை குனிந்து கோழைகளாகச்செல்வதைப்பார்க்க மட்டுமே முடிந்தது. அந்த நல்லவர்களுக்கு இலவச விருந்து போட நல்லவனான ரகுவிடன் கெட்டவனான ரங்கியிடம் இருக்கும் அளவுக்கு பண வசதி இல்லை. இந்த நிலையில் தவறும் கூட சரியென்றானதை, கெட்டது செய்தவனும் நல்லவன் என பெயர் பெற்றதை ரகுவின் மனமும் ஒத்துக்கொண்டது.