பிறருடைய நிறைகளைக்காண்பதை விட, குறைகளைக்காண்பதிலேயே குறியாக இருப்பாள் தேமகி. குறைகளுக்கு காது, மூக்கு, கண் வைத்து பார்க்காததை நேரில் பார்த்தது போல் கூறி கேட்பவர்களை நம்ப வைத்து விடுவதில் மகா கெட்டிக்காரி. அதே சமயம் தன் பக்கமுள்ள நிறைகளை சற்று மிகைப்படுத்திப்பிறரிடம் கூறி பெருமைப்படுவாள். இது போலவே பிறரும் நம்முடைய குறைகளைக்காண்பர் என்பது மட்டும் ஏனோ அவளுக்குப்புரிவதில்லை.
நிறை, குறை கலந்தது தான் மனித வாழ்க்கை என்பதைப்புரிந்து கொண்டு பிறர் நிறையையும் கூறி வாழ்ந்திட கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையறியாமல் எந்த வீட்டிற்குப்போனாலும், யாரோடு பேசினாலும் குறைகளை மட்டுமே கூறும் பழக்கத்தையே வழக்கமாகக்கொண்டதால் உறவுகளும், நட்புகளும் தேமகியைக் கண்டாலே ஒதுங்கிச் சென்று விடுவர்.
“பழம் கொடுக்கிற மரத்துல கூட அத்தனபழங்களும் சாப்பிடறதுக்கு பயன் படாது. சிலது சொத்தையா போயிரும், சிலது அதிகமா பழுத்து அழுகிப்போயிரும். ஆனா மத்த பழங்கள் பசிக்கு உதவத்தானே செய்யுது? அதனால மொத்தமா மரத்தையே சொத்தப்பழமரம்னு சொல்லிப்போட முடியுமா? அத மாதர தான் மனுசங்களும். சில பேரு சுய நலமா தெரிஞ்சே தப்பு பண்ணுவாங்க, சில பேரு தப்பானவங்களோட வழிகாட்டுதல் சரியில்லாம தப்பு பண்ணுவாங்க, சில பேரு தப்ப தப்புன்னு தெரியாம தப்பு பணாணுவாங்க. இதுல முதலாவது மனுசங்கள கண்டிப்பா ஒதுக்கோணும். மத்த ரெண்டு வகையச் சேர்ந்தவங்கள அரவணைச்சு, அனுசரிச்சுத்தாம் போகோணும். முதலாவது ஆள புத்தி சொல்லி திருத்த முடியாது, மத்தவங்கள திருத்திப்போடலாம். திருத்துனா திருந்தறவங்கள அவங்க பண்ணுன தப்பச்சொல்லிச் சொல்லிக் கேவலப்படுத்துனா முழு சாத்தப்பானவங்களா மாறிப்போவாங்க. அந்த தப்ப அறிவுள்ளவங்க பண்ணமாட்டாங்க” அனுபவம் மிக்க வார்த்தைகளால் தேமகியிடம், அவளது செயல்பாடுகளின் விளைவுகளைச்சுட்டிக்காட்டி அவளது சித்தப்பா பரமன் பேசியபோது தலை கவிழ்ந்து நின்றாளே தவிர அதன் பின்னும் அவளது குறை சொல்லும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
தனது உறவினர் கயாவுடைய மகன் குடிப்பது போல் தனக்குக்கிடைத்த வீடியோவை தேமகி மற்ற உறவுகளுக்கும் பகிர்ந்ததால் அதையறிந்த கயா கவலையடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தாள். இன்னொரு உறவினருடைய பெண்ணை தன் மகனுக்கு கொடுக்காமல் கயாவுடைய மகனுக்கு பேசி முடித்ததைத்தாங்க முடியாமல் பழி வாங்க இந்த வீடியோவை பயன் படுத்திக் கொண்டாள்.
அதன் பின் தன் மகனுக்கு அதே பெண்ணைக் கொடுப்பதாகப் பெண் வீட்டாருடன் பேசி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்து தனக்கு வந்த அதே போன்ற இன்னொரு வீடியோவை முழுவதும் பார்க்காமல் அனைவருக்கும் பகிர்ந்தவளை பெண் வீட்டினர் அழைத்து “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு…? நீ இப்ப எங்களுக்கு அனுப்புன இந்த வீடியோதான் நீ கயா பையன் குடிக்கிறமாதிரி முதல்ல அனுப்புன வீடியோவோட முழு வீடியோ…. அதுல கயாவோட பையன் குடிக்கிற மாதிரி மட்டும் இருந்ததுனால அவனுக்கு முடிவான எங்க பொண்ண உன்னோட பையன் நல்லவன்னு நீ சொன்னதால கொடுக்கறோம்னு சொல்லியிருந்தோம். இந்த வீடியோவுல கயா பையனைக் கட்டாயப்படுத்தி உன்னோட பையன் ஊத்திக் கொடுக்கிற மாதிரி வந்திருக்குது. உன்னோட பையனுக்கு கயாவோட பையனே பரவாயில்லை. நாங்க அவனுக்கே எங்க பொண்ணைக் கொடுக்கப் போறோம். இப்பத்தான் கயா கிட்ட அந்த வீடியோவப் பத்திப் பேசி, நீ இப்ப அனுப்புன வீடியோவையும் அவளுக்கு அனுப்பி, ஏற்கனவே நடந்த குழப்பத்துக்கு மன்னிப்பு கேட்டுட்டோம்” எனப்பெண் வீட்டினர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, தன் செயலே தனக்கு இடையூராக, எதிராகப்போனதை நினைத்து வருந்தியபடி தலை மேல் கை வைத்தபடி அமர்ந்து கண்ணீர் வடித்தாள் தேமகி.
எனது கதையினை சிறுகதைகள் இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறு கதைகளுக்கு என்றே அமைக்கப்பட்ட இத்தளம் புதியஎழுத்தாளர்களுக்கு
பேருதவியாய் உள்ளது. மிக்க மகிழ்ச்சி