மேல் மாடியில் ஒரு வீடு கட்டி, வாடைக்கு விடக் காத்திருந்தார் விஸ்வநாதன். வருகிறார்கள்.,.வீட்டைப் பார்க்கிறார்கள். ‘அட்வான்ஸ் அதிகம்., வாடகை அதிகமென்று’ ‘ஆவாலதி’ சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். ஒருவரும் வாடகைக்கு வந்த பாடில்லை. ஆனாலும் விஸ்வநாதன் அசரவில்லை. காத்திருந்தார்.
‘வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப் பார்!’ என்று சும்மாவா சொன்னார்கள்?! வீட்டைக் கட்டினார். இப்ப பார்க்கிறார்…! அவ்வளவுதான்.
அன்று ஒரு பெண் வந்தாள்…’சார், நான் ஒருவாரம் முன்னாடியே வந்தேன்… பார்த்தேன், இதுவரை யாரும் குடிவரலையே?! அட்வான்ஸ், வாடகையைக் குறைச்சுக்கலாம் தானே?’ என்றாள்.
அவள் கேள்வி அவளைப் பொறுத்தில் மட்டும்தான் நியாயம்! விஸ்வநாதனைப் பொறுத்தவரை அது, பொருத்தமில்லாதது! காரணம் அவளிடம் அவர் இப்படிச் சொன்னார்.
‘நீ சொல்றது சரிதாம்மா..! ஆனா, நகைக் கடைப் போறோம். பத்து பவுன்லயும் பதினைந்து பவுன்லயும் செயின், ஹாரம் இருக்கு! காஸ்டிலிதான்!! ரொம்ப நாளா ஷோ கேஸ்லயே இருக்கே… அதுக்காக வெலை குறைனு கடைக்காரண்ட்ட சொல்லமுடியுமா?!
‘நான், தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதிச்சா மாதிரி கீழ்வீட்டுக்கு மேலே மாடில ஒரு போர்ஷன் கட்டியிருக்கேன்!. வாங்கற கெப்பாசிட்டி இருக்கிறவன் வந்து வாங்கிக் கொள்ளும் வரை அது ஹாரம் மாதிரி காத்திருக்கும்!. என் பொருளின் மதிப்பும், தரமும் எனக்குத் தெரியும்! விலை போகமலிருக்க இது ஒண்ணும் ‘முத்துன கத்திரிக்கா இல்லை!’ முத்துப் பதக்கம்!’ என்றார் முடிவாக…! வந்தவள் வாய் பேசாமல் திரும்பினாள்!