சொல்லில் ஒரு சித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 338 
 
 

சொற்களைத் தொடுத்து வெளியிடும் பக்குவங்களில் மிக உயர்ந்த பக்குவம் கவிதை சொல்லிச் சொல்லிப் பல முறை அநுபவிக்க ஏற்ற ஒலி, பொருள் நயம், மந்திரம் போன்ற சொற்கள், உணர்வை ஊடுருவிச் செல்லும் உட்கருத்து, இவை ஒன்றுபடுமிடத்தில் கவிதை எழில் வடிவாய்ப் பிறந்து வருகிறது. தான் சென்று கலக்குமிடத்திலும் எழில் பெருக்குகிறது. –

‘சொற்களில் சித்திரம் வரைய முடியுமா? அந்தச் சித்திரத்தில் உணர்வின் சாயல்களைக் காட்ட முடியுமா? அந்தச் சாயல்களில் மென்மையும் நுணுக்கங்களும் அமைய முடியுமா? என்றெல்லாம் சந்தேகப் படுகிறவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால் ஆழ்ந்து ஈடுபடுகிறவர்களுக்குக் கவிதை அனுபவம் இன்ப மயமானது.

பலவகை வண்ணங்களைக் குழைத்து வரையும் சித்திரம் – போல் சொற்களில் வரையும் சித்திரம் ஒன்று உண்டு. சொற்களிலும் வண்ணம் இருக்கிறது. சொல்லுக்கு மாற்றுக் குறையாத ஆற்றல் உண்டாகும் விளைவுதான் மந்திரம். கவிதையிலும் மந்திரச் சொல்லாற்றல் அமைவதுண்டு.

பொதுவாகக் கவிகள் சொல்லில் இன்பமிருக்கிறது என்கிறார்கள். வேதாந்திகள் சொல்லில் மெய்யுணர்வு விளைகிறது என்கிறார்கள். சொற்பொருளில் மட்டும் ஆழமிருக்கிறது என்கிறார்கள், தர்க்கமும் தத்துவமும் வல்லவர்கள்.

ஆனால் சிறப்பாகத் தேர்ந்த கவிஞன் சொல்லிலும், பொருளிலும் சுவையிலும் எல்லாவற்றிலும் இன்பமிருக் கிறதென்று நிரூபிக்கிறான். சித்திரக்காரர்களுக்குத் தமிழில் ‘கண்ணுள் வினைஞர்’ என்று ஒரு பெயர் இருக்கிறது. தாம் செய்யும் தொழிலைக் காண்பார் கண்ணுள் நிறையும்படி ஆற்றுவதால் சித்திரக்காரர்களுக்கு இந்தப் பெயர் இட்டிருந் தார்கள். கவிகளோ தமது தொழிலை அநுபவிப்பவர்களின் கண்களிலும் மனத்திலும் சிந்தனையிலும் நிறையச் செய்து விடுகிறார்கள். அப்படி நிறையச் செய்யும் போது சொற்களிலும் சித்திரம் பிறப்பதைக் காண்கிறோம்.

இதோ அத்தகையதொரு சொற்சித்திரம்:

பழைய நாளில் மாவலிவாணன் என்று ஒரு மன்னன் இருந்தான். அவனுடைய நகரம் தென் மதுரை. ஒருமுறை அவன் போருக்குப் போயிருந்தபோது போர் முடிந்து நகருக்குத் திரும்பி வரக் காலதாமதமாயிற்று. அப்போது கார்காலம். மழை பெய்து எங்கும் குளிரும் ஈரமும் குலாவுகிற பருவம். வானில் மின்னல்கள் வாள் சுழல்வது போல் ஒளிக் கோலமிடுவதும் இடி இடிப்பதும் மழை பெய்வதுமாக இருந்த அந்தச் சூழ்நிலையில் எவருக்கும் வெளியேறிச் செல்லத் தோன்றவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடப்பதில் சுகம் காணும் பருவம்.

மாவலிவாணனைப் பிரிந்து வாடிய அவன் காதலி கூறியதாகக் கற்பனை செய்து ஒரு கவிஞர் கவிதை பாடியிருக்கிறார். பிரிவின் தாபத்தைச் சொற் சித்திரமாக வரையும் அழகிய கவிதை இது. சொல்லிச் சொல்லி இன்பமடையும் வார்த்தைகளால் ஆக்கப்பட்ட கவிதைகளை எத்துணைமுறை படித்தாலும் சலிப்பதில்லை. சில வைரக் கற்களின் அழகு, அவை நகைகளில் பதிக்கப்பெற்றபின் பெருகும். அதுபோல் தனித்தனியே இருந்த சொற்கள் மாவலிவாணனைப் பிரிந்து அவன் காதலி உருகுவதாகப் பாடப்பெற்ற இப்பாடலில் அழகு பெருகும் சித்திரமாக இணைந்திருக்கின்றன.

“கன்னல் எனும் சிறுகுருவி சுகனமழைக் காற்றாமல்
மின்னல் எனும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம்
மன்னவனாம் தென்மதுரை மாவலி வாணனைப் பிரிந்திங்(கு)
என்ன பிழைப் பென்னநகைப் பென்னவிருப் பின்னமுமே.”

முதல் இரண்டு அடிகளில் கார்காலம் சித்திரமாக்கப் பட்டிருக்கிறது. மின்னல் எனும் புழு எடுத்து விளக்கேற்றும் ‘ என்று இழுத்துப் படிக்கும் போது நம் கண் முன்னால் மேகமும் மின்னலும் சித்திரமாய் வந்து நிற்கவில்லையா? ‘என்ன பிழைப்பு? என்ன நகைப்பு? என்ன விருப்பு?’ என்று ஒவ்வொன்றாக அடுக்கும்போது சோகம் தொனிக்கும் அழகைத்தான் எப்படி விவரிக்க முடியும்? என்ன விருப்பு என்று வைத்துக் கொண்டாலும் சரி, என்ன இருப்பு என்று பிரித்தாலும் சரி, எப்படிப் பார்த்தாலும் அழகுதான். கடைசி அடியை அனுபவித்துப் படிக்கும்போது கன்னத்தில் கையூன்றியபடி சோகமே உருவாக அமர்ந்து என்ன பிழைப்பு என்ன நகைப்பு? என்ன இருப்பு?’ என்று ஆற்றாமை யோடு கேட்கும் ஒரு பெண்ணின் தோற்றம் நம் கண்முன் சித்திரம் போல் தோன்றுகிறதே, இது அல்லவா மந்திரம் போற் சொல்லின்பம்.

கனியக் கனியச் சுவை மிகுந்து இனிக்கும் பழம் போல் சொல்லிச் சொல்லி ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய சொற் சித்தரம் இது. கன்னல், மின்னல் என்று மென்மையான சொற்களைச் சொல்லும்போதே வித்தில்லாத திராட்சைக் கனியை உண்பது போலிருக்கிறது.

ஓவியம் காட்சிக்கு மட்டுமே இன்பம். சொற் சித்திரமோ , கருத்துக்கும் காட்சிக்கும் அழகிய அநுபவத்துக்கும் சேர்த்து இன்பம் தருகிறது. நிறங்களை ஒன்றுபடுத்தி அழகு சமைக்கும் ஓவியர்களைக் கண்ணுள் வினைஞர்’ என்று அழைக்கும்போது சுவைகளும் உணர்வுகளும் ஒன்றுபட்டு உருவாகும் சொற் சித்திரங்களை எழுதும் இம்மாதிரிக் கவிஞர்களைக் கருத்துள் வினைஞர்’ என்று அழைத்தால் எவ்வளவு பொருத்தமாயிருக்கும்? அவர்கள் கண்ணுக்கு மட்டும் பார்க்க முடிந்த சித்திர மெழுதுகிறார்கள். இவர்கள் கருத்துக்கும் சேர்த்துக் கருத்தினாலும் பார்க்க முடிந்த சித்திரங்களை எழுதுகிறார்களே!

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *