‘நான் ஸ்கூலுக்கு வரலை….!’ அடம்பிடித்தான் அழகர்சாமி.
‘ஏன்…???’ என்ற ஒற்றைவார்த்தைக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.
‘சே! என்ன பெரிய கஷ்டமாப்போச்சு. ?! ஸ்குலுக்குப்போகாம முடியுமா?’
அவனைச் சமாதானப்படுத்தும் சடங்கு நடந்தது.
‘ஸ்கூலுக்குப் போறது, ஒரு கஷ்டமா!? இப்பல்லாம் ஸ்கூல் முந்தி மாதிரி இல்லே…! டீச்சர்ஸ் அடிக்க மாட்டாங்க…!’
இந்த வரிகளைக்கேட்டதும் கண்களை அகல விரித்து ‘நெசமாவா?’ என்றான் அழகர்சாமி வியப்போடு!
‘ஆமாம்!’
‘அடிக்கறதுமட்டுமில்லே…! திட்டக்கூட மாட்டாங்க! திட்டக்கூட டீச்சர்ஸால இப்ப முடியாது! அவங்க கையெல்லாம் கட்டியாச்சு!’ என்றதும் லேசாய் நிம்மதி பிறந்தது, கண்களில். மகிழ்ச்சிப் பிரதிபலிப்பு ஒளியாய் கண்களில் மிளிர்ந்தது.
‘சரி ,அப்போ ஸ்கூலுக்குப் போலாந்தானே?’ கேட்க,
மறுபடியும் வேதாளம் முருங்கைமரம் ஏறத்தொடங்கியது.
‘டீச்சர்ஸ் படிக்கிற கொழந்தைகளை அடிக்கவோ திட்டவோ மாட்டாங்க சரி…! ஆனா, பேத்தியை ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு வர்ற தைரியமில்லையே எனக்கு..!
ஸ்கூல் முடிஞ்சு பேத்தி, வீடு திரும்ப வரும்போது வேணா அவளைக் கூட்டீட்டு வர நான் வரேன். கொண்டுவிட நான் வரலை..! பேத்தி அழுதால், அதைத்தாங்க என்னால முடியாது’. கண்களைத்துடைத்தபடி அழகர்சாமி சொல்ல, வீடே அவனை விசித்திரமாய் பார்த்தது.
‘அழுதாதான் கண்ணீர் வரணும்னு இல்லே., சிரிச்சாலும் கண்ணீர் வரும்!’ என்பது , அறுபது வயது அழகர்சாமியின் பேத்திமீதான பிரியம் அனைவர்க்கும் அங்கே புரிந்தது.
கவிதையாத்தலைவிட கஷ்டமானது கதை எழுதுவது. கதை எழுதுகையில் திடீரென முளைக்கும் பாத்திரத்தை தள்ளவும் முடியாது, தாங்கவும் முடியாது !அதன் போக்கிற்கு நாம் போய் நசுங்காமல் வெளிவருவதும் விஷயத்தை வெளிப்படுத்துவதும் வித்யாசமான வீர விளையாட்டுகளில் ஒன்று!.