புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்ட தலைவர் “பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்கும் கட்சிகள் மக்களின் வரிப்பணத்தை மட்டும் சிக்கனமாகவா செலவழிக்கும்..?” என்று ஒரு ஃப்ளோவில் பிரஸ்மீட்டில் சொல்லிவிட.. கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள் தொண்டர்கள்.
சிக்கனமே கட்சியின் குறிக்கோளானது.
“தலைவர் சிக்கனம் சிலம்பரசன் வாழ்க..” என்கிற கோஷம் பாப்புலர் ஆனது.
கட்சி தொடங்கும் முன் முக்கிய உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டினார்.
மேடை, அலங்கார வளைவு..என்ற எந்த ஆடம்பரமுமில்லாமல் கடற்கரை மணலில் நடைபெற்றது உறுப்பினர்க் கூட்டம்.
வார்த்தைக்கு வார்த்தை சிக்கனத்தை வற்புறுத்தினார்..
“பணம் காசு மட்டுமில்லை..பேச்சிலும் சிக்கனமே வேண்டும்” என்று சொல்லி விரைவில் பேச்சை முடித்துக்கொண்டார்.
சிக்கன பேச்சாளர் மேடையில் தன் இடத்தில் சென்று அமர்ந்ததும் விழாக் குழுத் தலைவர் மைக் முன் சென்றார்.
சிக்கனத்தை பற்றி சிக்கனமாக பேசிய சிக்கனம் சிலம்பரசனுக்கு இந்தச் சிறிய கைக்குட்டையை பொன்னாடையாக நினைத்து போர்த்தி விடுகிறேன் என்று தன் பையிலிருந்து சிறு கைக்குட்டையை எடுத்தார்.
“ஐயா, அது வேண்டாம்…இதை போத்துங்க” என்ற குழுவின் செயலாளர், மூக்குக் கண்ணாடி கூட்டிலிருந்த கண்ணாடி துடைக்கும் நாலு விரற்கடை அளவு உள்ள துணியை எடுத்து தலைவரிடம் கொடுத்து போர்த்தச் சொன்னார்.
சிலம்பரசனுக்கு மயக்கமே வந்து விட்டது.
– கதிர்ஸ், 16-31 மே 2022