கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 3,086 
 
 

(படம் பார்த்து எழுதப்பட்ட கதை)

“என்ன பாட்டி..? கவலையா… இருக்க..! கண்ணெல்லாம் கலங்கி இருக்கு…!”

(வாயில்லா ஜீவன், சிகப்பி கிழவியின், தோளைத் தொட்டு, பாசத்தோடு பார்த்தது.)

“இல்ல.. ராசா.. நான் பெத்த மகன், இனிமே வீட்டுக்கு வராதேன்னு, என் சேலை பையை தூக்கி, கோவமா ரோட்ல எறிஞ்சுட்டான் இன்னிக்கி. அதுதான், என் ஈரக்கொலை (நெஞ்சு) தவிக்குது. ராசா. இனிமே நான் எங்கே போவேன்..? யார்கிட்ட போவேன்..?”

“ஏன் பாட்டி அப்படி சொன்னாரு…?”

(வாயில்லா அந்த ஜீவன் தனது பார்வையால் கேட்டது.)

“எனக்கு… கஞ்சி ஊத்த முடியலையாம்… என் உடம்பு நாத்தம் அடிக்குதாம்…! நான் திண்ணையில் படுத்து கிடக்கிறது அவனுக்கு அசிங்கமா இருக்காம். ஏதேதோ சொல்றான். அதுனால அவன் தூக்கிப்போட்ட, சேலை பையை எடுத்துகிட்டு வந்துட்டேன்.”

“அப்படியா பாட்டி… சரி… இனிமே நீ என் கூட வந்துரு. நான் அந்த மரத்துக்கு அடியில் தான் தூங்குவோம். அந்த மரத்துக்குப் பக்கத்துல, ஒரு இடிஞ்சு போன வீடு இருக்கு. அங்கே யாரும் இல்லை. அங்கே நீ படுத்துக்கோ.”

“நான் உனக்கு சாப்பிடறதுக்கு, பழங்கள் ஏதாவது பறிச்சு கொண்டாந்து தர்றேன்,” என கையில் சைகை செய்தது.

“பாட்டி… உன்னை நான் நல்லா பாத்துக்கிறேன்” என்பது போல, கிழவியின் கையையும் தோளையும் தொட்டது.

கிழவிக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை..!

“ஐந்தறிவு ஜீவன், உனக்கு இருக்கிற பாசம் கூட, நான் பத்து மாதம் சுமந்து பெத்த, ஆறறிவு கொண்ட, என் மவனுக்கு இல்லையே ராசா.. ” என்றவளின் தலை லேசாக சாய்ந்தது. கண்கள் சொருகின. சற்று நேரத்தில் மிளகாய் ‌ குவியலின் மீது சாய்ந்த சிகப்பி கிழவி, பிறகு எழுந்திருக்கவே இல்லை.

ஐந்தறிவு ஜீவன் கண்ணீரோடு சிகப்பி கிழவியின் முகத்தை தொட்டுப் பார்க்கிறது, என்ன செய்வது எனத் தெரியாமல்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *