”காலையில தரகர் வந்து டீடெயில்ஸ் கொடுத்துட்டுப் போனாரும்மா! முருகேஷ், கணேஷ்னு ரெண்டு வரன்களோட ஜாதகம் மட்டும் வாங்கி வச்சிருக்கேன். முருகேஷுக்கு நல்ல வேலை. வசதியான வாழ்க்கை. வெளிநாடு போகவும் வாய்ப்புகள் இருக்கு. கணேஷுக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் இருக்கறா மாதிரி தெரியலை. ரெண்டு பேர் வீட்டிலும் வயசான பெற்றோர்கள். நம்ம சம்மதத்துக்காக காத்திருக்காங்க. இவங்கள்ல யாரை உன் கணவனா தேர்ந்தெடுக்கறதுன்னு நீதாம்மா முடிவு பண்ணணும்’’ – சிவம் தன் மகள் சாந்தியிடம் கேட்டார்.
‘‘ரெண்டு பேரோட அப்பா, அம்மாவும் எங்கே தங்கியிருக்காங்க? அந்த விபரத்தை மட்டும் விசாரிச்சு சொல்லுங்கப்பா’’ என்ற மகளை ஆச்சரியத்தோடு பார்த்தார் சிவம். அவள் கேட்டதை விட அதிக விபரங்களை சேகரித்துக் கொடுத்தார்.
‘‘வசதியான வாழ்க்கைன்னாலும் எந்தக் காரணமும் இல்லாம வேலை பார்க்கிற இடத்தில் தனியாவே தங்கியிருக்குறாராம் முருகேஷ். வருஷத்துக்கு ஒரு தடவை அம்மா, அப்பாவைப் போய் பார்க்கிறதையே பெருமையா சொல்றார். ஆனா, கணேஷ் பெத்தவங்களை தன் கூடவே வச்சுப் பார்த்துக்கறார். அவர்தான்பா வாழ்க்கையில் எல்லா விஷயத்திலும் பொறுப்பா இருப்பார். என் சாய்ஸ் கணேஷ்தான்’’ என்றாள் சாந்தி.
குழப்பத்தில் இருந்த அப்பாவின் மனதுக்கு தெளிவையும் சாந்தியையும் கொடுத்தது அந்த பதில்!
– 01 ஜூலை 2013