கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2024
பார்வையிட்டோர்: 1,169 
 
 

தாய் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பதினோரு மணியாகி விட்டதால் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு வழியாக அதே ஊரில் சற்று தொலைவில் உள்ள தன் வீட்டிற்குச்செல்வதை நினைத்து மனதை பயம் கவ்வியது ராணிக்கு.

கணவன் ரவி வந்திருந்தால் துணைக்கு ஆள் இருக்கிறது என பயமிருக்காது. தனியாக அதுவும் அமாவாசை இருளில் செல்வதென்பது மிகுந்த பயத்தையே தருவதாக இருந்தது. 

சிறு வயதிலிருந்து சுடுகாட்டுக்கதைகள் பல கேட்டதால் அக்கதைகள் இச்சமயம் வந்து கண் முன் நின்று பயமுறுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக அமாவாசை நாளில் சாமக்கோடங்கிகள்  சுடுகாட்டில் பூஜை செய்வார்களென்றும், அவர்களைப் பார்த்தவர்களுக்கு பைத்தியம் பிடிக்கும் என்று தாயின் தாயான அம்முச்சி சொன்னதும் நினைவில் வந்து போக உடல் லேசாக நடுங்கத்தொடங்கியது.

“நடுச்சாமமாகப்போகுது. இந்த நேரத்துக்கு என்னத்துக்கு ஒருத்தியும் தனியாப்போறேங்கிறே…? காத்தாளைக்கு கோழி கூப்புடற நேருத்துக்கு எந்திருச்சு மாட்டக்கறந்து இத்தன காப்பித்தண்ணியக்குடிச்சுப்போட்டு போனீன்னா பொழுது கெழம்பறதுக்குள்ள ஊடு போய் சேந்துக்கலாமில்ல…. உன்ற புருசன் தனியா இருப்பான்னு போறயா…? தனியா இருந்தா அவன பெசாசா கொண்டு போயறப்போகுது….?”  என வயதான தனது தாய் பெசாசை நினைவு படுத்தியது கலக்கத்தைக்கொடுத்தது.

கணவன் வீட்டிற்கு வந்தால் அவனிடம் வீடு திறக்க இன்னொரு சாவி இல்லாததாலும், வெளிக்கதவைப்பூட்டாமல் வந்து விட்டதாலும், கணவன் வராமல் வேலை செய்யுமிடத்திலேயே இரவு தங்கி விட்டால் வேறு யாராவது பூட்டாத வீட்டைத் திறந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு போய் விட்டால் என்ன செய்வது? எனும் பயமே ராணியை ‘போ போ’ என்றது.

கையில் தாய் வீட்டிலிருந்த அரிக்கன் லைட்டை எடுத்துக்கொண்டாள். அது கண்ணாடியில் புகை படிந்து போனதால், போகும் பாதையை மங்களாகக்காட்டியது. நடு இரவு என்பதால் எதையோ வானத்தில் பார்த்தவாறு நாய்கள் ஒன்று சேர்ந்து ஊளையிட்டன. சாவு குருவிகள் கத்திச்சென்றன. திரும்பி தாய் வீட்டிற்க்கே சென்று விடலாம் போலிருந்தது. மனது ‘திக் திக்’ என அடித்துக்கொண்டது. இதயத்துடிப்பு அதிகமானது. வேலிகளில் ஏற்பட்ட சலசலப்பு வேறு பயத்தை மேலும் கூட்டியது. ‘ஒரு வேளை பாம்பாக இருக்குமோ…? ‘ என நினைத்து பயந்தாள். பக்கத்தில் சென்று லைட்டைப்பிடித்துப்பார்த்தாள். ஓணான் தனது இணையை துரத்தியபடி சென்று கொண்டிருந்தது.

 வேலி உள்ள பகுதியில் ஒரு குடிசை வீட்டின் முன் சென்ற போது மனிதர்கள் இருப்பார்கள் என்பதால் பயம் சற்று நீங்கினாலும் குடிசை வாசலில் ஓர் உருவம் வித்தியாசமான தோற்றத்துடன் நிற்பதைக்கண்டு சற்று மறைந்து நின்று கொண்டாள். 

உடுக்கை அடிக்கும் சத்தம் கேட்டது. “ஒரு வாரத்துல இந்த குடிசைல உசுரு போகப்போகுது. அதத்தடுக்கோணும்னா இந்த சாமக்கோடங்கிக்கு அரிசி, பருப்பு, சேலை, வேட்டி, காணிக்கை வெடியறதுக்குள்ளே எடுத்துட்டு வந்து ஆட்டாங்கல்லு மேல வெச்சுட்டு திரும்பிப்பார்க்காமப் போயரோணும் ” என கூறிவிட்டு சுடுகாட்டை நோக்கி தான் செல்லும் வழி நோக்கி அவனும் சென்றான்.

‘சாப்பாட்டுக்கே கஷ்டப்படற, ஒரே சேலைய தொவைச்சு கட்டிக்கிற குடிசைல வாழ்ந்துட்டு கூலி வேலைக்கு போயி வகுத்த வளர்க்கற மனுசங்க கிட்ட இவ்வளவையும் கேக்கறானே….? இவனுக்கு அரிசி, பருப்பு, சேலை, துணி குடுத்தா போற உசுரு போகாதுங்கறானே…..? கண்டிப்பா இவன் ஏமாத்துக்காரன் தான். இவன் சுடு காட்ல என்ன தான் பண்ணறான்னு பாத்தே போடோணும் இன்னைக்கு…’ என திடீரென மனதில் பயம் நீங்கி தைரியம் வந்தவளாய் அவனை முன்னே விட்டு பின்னே சென்றாள்.

அவனோடு வேறு வீதியிலிருந்து இன்னொரு கோடங்கியும் சேர்ந்து கொண்டான். இரண்டு பேரும் பாதையோரம் இருந்த சுடு காட்டிற்குள் நுழைந்தனர். இந்த நேரத்தில் யாரும் சுடுகாட்டுப்பக்கம் வரமாட்டார்கள் என்பதால் திரும்பிப்பார்க்காமல் அவர்கள் சென்றது ராணிக்கு சாதகமாகப்போனது. ஒரு வேலி மறைவில் தைரியமாக நின்று கொண்டாள்.

ஒரு மண்டை ஓட்டை வைத்து அதற்கு பூஜை செய்தனர். அதற்கு முன் கொண்டு வந்த பணம், துணிகள், நகைகள் என அனைத்தையும் அங்கிருந்த ஒரு பகுதியில் மறைத்து வைத்தனர். அவர்களின் செயல் திருடர்களின் செயலைப்போலவே இருந்தது.

அப்போது மந்திரம் சொல்வதை விட அவர்கள் சாதாரணமாகப்பேசிக்கொண்டிருந்தது காதில் கேட்டது.

“இட்டாரி முக்குல இருக்கற கொசவனோடு போட்ட ஊட்ல புருசனுக்கு ஆபத்துன்னு  சொல்லி, அதுக்கு பரிகாரமா தாலியத்தானமா  கொடுத்தா சரியாப்போகும்னு சொன்னேன். அப்பவே பயந்து போட்டு போட்டிருந்த தாலியக் கழட்டிக் கொடுத்துட்டாங்க” என்றான் ஒருவன்.

“இன்னைக்கு என்ற காட்லயும் நல்ல மழை தான். பதனைஞ்சு சேலை, நூறு ரூபா பணம் கெடைச்சுது. எப்படியோ பொம்பளைங்க ஏமாந்து போற வரைக்கும் நம்முளுக்கு கொண்டாட்டம் தான்” என பேசியதைக்கேட்டு கோபம் தலைக்கேறியவளாய் கீழே கிடந்த கற்களைப்பொறுக்கி ஒவ்வொன்றாக, ஆக்ரோசமாக கோடங்கிகளின் மீது வீசினாள். 

கற்கள் தங்கள் மீது விழுந்ததும், கற்கள் வந்த பக்கம் பார்த்தவர்களுக்கு வேலி மறைவில் நிழல் போல் பெண் உருவம் தெரிய, பேய் என நினைத்து பயந்தபடி   ‘பேய், பேய்’ என அலறியடித்துக்கொண்டு ஓடினர். அவர்கள் ஓடிய பின் வீட்டிற்கு தான் செல்ல வேண்டிய பாதையைத் திரும்பிப்பார்க்கையில் தன்னை நோக்கி ஓர் உருவம் வருவதைப்பார்த்ததும் ராணியும் உடல் நடுங்க மயங்கி நினைவிழந்தாள்.

காலையில் கண் விழித்த போது வீட்டில் படுக்கையில் இருந்தாள். பக்கத்தில் கணவன் ரவி அவளது நெற்றிக்கு ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

“சுடு காட்டுல நீ கல்லு வீசுனதும் கோடங்கிக உன்னப்பார்த்து பேய்னு நெனைச்சு ஓட்டமெடுத்துட்டானுக. நீ என்னையப்பார்த்து பேய்னு நெனைச்சு பயந்து போயி மயக்கமானதும் நாந்தான் உன்னைய தோள்ல தூக்கி சொமந்துட்டு ஊட்ல கொண்டு வந்து படுக்க வெச்சேன். தொட்டுப்பாத்தா காச்சலு. அதுக்குத்தான் ஒத்தடம் கொடுத்துட்டிருக்கறேன்” என கணவன் கூற பயம் விலகி நிம்மதியானாள்.

அன்று இரவு அதே கோடங்கி ராணியின் வீட்டு வாசலில் வந்து நின்று உடுக்கை அடித்தவாறு “இந்த ஊட்ல பேயி இருக்குது, பெசாசு இருக்குது, ஊட்டுப்பொம்பளைய கொல்லப்போகுது. அதுக்கு பரிகாரமா பொம்பள காதுல போட்டிருக்கிற கம்மலக்கழட்டிக்கொடுத்தா பேயும், பெசாசும் ஓடிப்போயிரும்…” எனக்கூறியதைக் கேட்டு கதவைத்திறந்து வீட்டை விட்டு வெளியில் வாசலுக்கு வந்த ராணி,  “நேத்து ராத்திரி சுடுகாட்ல உன்ற மேல கல்லு வீசுன பேயப்பாத்துட்டு ‘பேய், பேய்’ னு சத்தம் போட்டுட்டு பயந்து ஓடுனியே….? இது அந்தப் பேயான்னு கொஞ்ச நல்லாப் பார்த்துச் சொல்லு….” எனக்கூறியதைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்த கோடங்கி, ‘அது இவங்களுக்கு எப்படித்தெரிஞ்சுது….? இந்த பொம்பளைக்குள்ள பூந்த பேய் தான் நேத்து சுடுகாட்டுக்கு வந்திருக்குமோ.‌.?’ என நினைத்ததும், இதுவரை தனது அனுபவத்தில் கண்டிராத நிலையில் பயம் மனதில் மேலோங்க ‘தூ…தூ….தூ….’ என  கூறிய படி அலறியடித்து கோடங்கி ஓட்டம் பிடித்ததைக் கண்டு ராணிக்கு சிரிப்பு நிற்க வெகு நேரமானது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *