கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 56 
 
 

படிக்காசுத் தம்பிரானும் அவர் நண்பராகிய வேறொரு புலவரும் வள்ளல் ஒருவரைக் காண்பதற்காகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். கால்நடையாகச் செல்லும் பயண மானாலும் இருவரும் தேர்ந்த தமிழ்க் கவிஞர்களாகையால் மனத்திற்கு விருப்பம் சென்றவாறெல்லாம் உரையாடிக் கொண்டே சென்றனர். தனிமை, சிந்தனைக்கு ஏற்றதுதான். ஆனால் செயலுக்கு ஏற்றதில்லை. நடந்து போதல் முதலிய வற்றிற்குத் தனிமை சற்றே துன்பம் கொடுக்கத்தான் செய்யும். சிந்திப்பதற்கோ தனிமையைவிடச் சிறந்த கருவி வேறெதுவும் இருக்க இயலாது. எனவே சேர்ந்து செல்லும் பயணத்தில் வழிநடைக் களைப்பை உணரும் வாய்ப்பே அவர்களுக்கு எற்படவில்லை .

வழியில் ஓர் அழகிய நகரை அவர்கள் கடக்க நேரிட்டது. வழியை ஒட்டி அமைந்திருந்த ஒரு பெரிய பழத்தோட்டமும், பக்கத்தில் படிக நிறத்து நீர் கலகலவென்று ஓடிக்கொண்டிருந்த சிற்றாறும் ஆக இருந்த இடத்திற்கு வந்ததும் படிக்காசருக்கு அங்கிருந்து மேலே அடியெடுத்து வைக்கக்கால் எழவில்லை. அந்த இடத்தின் இயற்கை வனப்பு அவரைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. கிளி, குயில் இவைகளை அந்தத் தோட்டத்தில் கிளைக்குக் கிளை காண முடிந்தது. வெய்யில் உள்ளே நுழைய முடியாத அளவு அடர்ந்து பசுமை நெருங்கிய தோட்டம் அது. விருப்பத்தை அடக்க முடியாமல் நண்பரோடு தோட்டத்திற்குள் நுழைந்தார் படிக்காசர். மாணிக்கச் சிவப்போடு கனிந்த நிலையில் சரம் சரமாகத் தொங்கும் மாம்பழங்கள், தங்க வண்ணம் பொங்கும் கொய்யாக் கனிகள், இன்னும் எண்ணற்ற கனிகள் மயமாகக் காட்சியளித்தது தோட்டம்.

இயற்கையை இரசிக்க வந்த படிக்காசரும் நண்பரும் கைக்கு எட்டியனவும், கீழே உதிர்ந்து கிடந்தனவும் ஆகிய கனிகளையும் இரசிக்கத் தொடங்கினார்கள். தின்னத் தெவிட்டாத தீங்கனிகள்! தின்று கொண்டே இருந்தனர். முதலில் தாம் தண்ணீர் குடித்து விட்டு வந்துவிடுவதாகச் சொல்லி விட்டு அருகில் ஓடிக்கொண்டிருந்த நதிக்குச் சென்றார் நண்பர். காய்நிலையும் கனிநிலையும் கொண்டு, அரைகுறைப் பழமாக இருந்த அரிசிக் கொய்யா’ வின் விதைகளைச் சுவைத்துக் கொண்டிருந்த படிக்காசர் முந்திரிப் பருப்புப் போன்ற இனிமை பொருந்தியுள்ள அதன் விதைகளை எண்ணி வியந்து கொண்டே கீழே கிடந்த அடுத்த கொய்யாக் கொத்தை எடுத்தபோது, இரும்பு வலிமை படைத்த கையின் முஷ்டி ஒன்று அவர் தோளின் மேல் விழுந்தது.

ஐயனார் கோவிற் குதிரைபோல ஆகாயத்துக்கும் பூமிக்குமாக வாட்டசாட்டமான தோற்றத்தோடும் தம்முன் அனல் கக்கும் கண்களோடும் நின்று கொண்டிருக்கும் காவற்காரனைக் கண்டதும் படிக்காசருக்கு வாயடைத்துப் போய் விட்டது. பரபரவென்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவன் இழுத்துச் செல்லத் தொடங்கினான். படிக்காசருக்கு என்ன செய்யலாம் என்றே தெரியவில்லை. அவனுக்கு முன்னால் வாயைத் திறந்து பேசுவதற்கே அவருக்கு அச்சமாக இருந்தது தண்ணீர் குடிக்கப் போயிருந்த நண்பரோ இன்னும் திரும்பி வரவில்லை. புலவருக்கு நண்பர் திரும்பி வராததும் ஒரு காரியத்திற்கு நல்லதாகவே பட்டது. அவர் வந்து தம்மை இந்தக் கோலத்தில் பார்த்துவிடவேண்டாம். அவரும் இந்த எமனிடம் அகப்பட்டுக் கொள்ள வேண்டாம். பேசாமல் இவனோடு கொஞ்ச தூரம் சென்றதும் மறைவான இடம் ஒன்றிலே கெஞ்சிக் கதறி விடுவித்துக்கொண்டு வந்துவிட்டால் பின் நண்பரை இங்கே வந்து சந்தித்துக் கொள்ளலாம்’ என்று எண்ணிக்கொண்டு அவர் அவனோடு நடந்தார். காவற்காரன் அவரை நகரத்திற்குள் அழைத்துக்கொண்டு போனான். பல தெருக்களைக் கடந்து ஊரின் நடு மையமாக அமைந்திருந்த அந்தப் பெரிய அரண்மனையின் உள்ளே இழுத்துக்கொண்டு போனான். புலவர் இடையிலே அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ளச் செய்த முயற்சி பலிக்கவில்லை. தன்னை விட்டு விடுமாறு கேட்டபோது அவன் பார்த்த அந்த நெருப்புப் பார்வை அவருடைய சர்வ நாடிகளையும் ஒடுக்கிவிட்டது. பேசாமல் அவனைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிந்து கொண்டபின் அதையே செய்தார். அவன் அழைத்துச் சென்ற அந்தப் பெரிய மாளிகையைக் கண்டதும் அதற்குரியவன் அந்நகருக்கே அரசனைப் போன்ற தகுதியும் பெருமையும் உடையவனாக இருக்கவேண்டும் என்று ஊகித்துக் கொண்டார் புலவர். தோட்டக் காவற்காரன் மாளிகை வாசலில் நின்ற காவலனை ஏதோ குறிப்பாகக் கைகாட்டிக் கேட்டான்.

“இப்போது முடியாது. பார்க்க வேண்டுமானால் எப்படியும் இன்னும் ஒன்றரை நாழிகை காத்திருக்கவேண்டும்” என்று மாளிகை வாயிலில் காவற்காரன் தோட்டக்காரனுக்கு மறுமொழி கூறினான்.

இந்த மறுமொழியைக் கேள்வியுற்ற பின்னர் சிறிது நேரம் ஏதோ சிந்தித்துக் கொண்டிருப்பவன் போல நின்று கொண்டிருந் தான் தோட்டக்காரன். பின் ஏதோ முடிவுக்கு வந்தவன் போல் வாயிற் காவலனுடன் கால் நாழிகை காதோடு காதாக ஏதோ பேசினான். இறுதியில் வாயிற் காவலன் தலையசைத்தான். தோட்டக்காரன் முகம் மலர்ந்தது. இருவரும் புலவரை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். வாயிற் காவலன் ஓர் அறையின் கதவைத் திறந்துவிட்டான்.
இதன் விளைவு? – படிக்காசர் இரண்டு நாழிகை நேரம் அந்த அறையில் சிறை செய்யப்பட்டார். தம்மை உள்ளே விட்டுத் தாழிட்டுக்கொண்டு சென்றபோது அவர்கள் பேசிச் சென்ற பேச்சிலிருந்து இதை அவர் அனுமானித்துக் கொண்டார்.

இங்கே இவர் இப்படி இருக்கும்போது, அங்கே ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டுத் தோட்டத்திற்குள் நுழைந்த படிக்காசரின் நண்பர், மரத்தடியிற் படிக்காசரைக் காணாமல் திடுக்கிட்டார். சற்று நேரம் அந்தப் பக்கம் படிக்காசர் எங்கே போயிருக்கலாம்?’ என்ற சிந்தனையோடு உலாவிக் கொண்டிருந் தார். அப்போது தற்செயலாக அங்கே வந்த வேளாளன் ஒருவனிடம் அந்தத் தோட்டத்தைப் பற்றியும் விவரமாகக் கேட்டறிந்துகொண்டார். தோட்டத்திற்குள்ள கட்டுக்காவல் களைப்பற்றி அந்த வேளாளன் சொன்ன போது என்ன. நடந்திருக்கும்? என்பதை அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. உடனே அதே வேளாளனிடம் அத்தோட்டத்தின் உரிமை யாளராகிய திருமலைராய பூபதியின் இருப்பிடத்தை
அறிந்து கொண்டு நகரத்தை நோக்கி வேகமாக நடந்தார்.

திருமலைராய பூபதியின் வீட்டை அடைந்த படிக்காசரின் நண்பர், “தமிழ்ப்புலவர் ஒருவர் வந்திருக்கிறார்” என்று உள்ளே சென்று கூறி அனுமதி பெற்று வருமாறு வாயிற் காவலனை அனுப்பினார். வாயிற் காவலன் உள்ளே சென்று வந்ததும், திருமலைராய பூபதி உள்ளே வரச்சொல்லி அன்போடு வேண்டிக் கொண்டதாக அவரிடம் கூற, அவர் மகிழ்ச்சியோடு உள்ளே சென்றார். உள்ளே ஓர் அறைப் பக்கமாக அவர் வந்து கொண்டிருந்தபோது சாளரத்தின் வழியே படிக்காசரின் தலை தெரிந்தது. வியப்புடனே தாம் நினைத்தது போலவே நடத்திருப்பதை எண்ணிக்கொண்டே சாளரத்தை நெருங்கினார். படிக்காசரைச் சைகை செய்து அழைத்து விவரங்களைச் சுருக்கமாக அறிந்து கொண்டு எப்படியும் விடுவிக்க முயல்வதாக உறுதி கூறிவிட்டு உள்ளே நுழைந்தார்.

புலவர் உள்ளே நுழைந்தபோது திருமலைராய பூபதி தாம் அருமையாக வளர்த்து வந்த பஞ்சவர்ணக் கிளியின் கூட்டை முன்வைத்து அதன் மழலையைக் கேட்டு அனுபவித்துக் கொண்டிருந்தார். பால், பழம், பருப்பு, முதலியவற்றை அதற்குக் கொடுத்து அது தன் செவ்வாயைத் திறக்கும் அழகை வியந்து கொண்டிருந்தார்.

தம் வரவு தெரியப் புலவர் கனைத்தார். பூபதி தலை நிமிர்ந்தார். பின் எழுந்து அன்போடு வரவேற்றுப் புலவரை அமரச் செய்தார். இப்போது வாயிற்புறத்து அறையிலிருந்து யாரோ பலமாகத் தொடர்ந்து விக்கும் ஒலி கேட்டது. பூபதி கிளிக்கூட்டை கையில் வைத்துக் கொண்டே “அது என்ன? யாரோ விக்குவது போலக்கேட்கிறதே?” என்றார். விக்குவது யாரென்பதை அறிந்து கொண்ட புலவர் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல்,

“நாட்டிற் சிறந்த திருமலையா! துங்க நாகரிகா!
காட்டில் வனத்தில் திரிந்துழ லாமற் கலைத்தமிழ் தேர்
பாட்டிற் சிறந்த படிக்காசன் என்னுமோர் பைங்கிளியைக்
கூட்டி லடைத்து வைத்தாய் இரைதா’

என்று கூப்பிடுதே” துங்க = உயர்ந்த நாகரிகா = நாகரிகமுடையவனே, இரை = உணவு.

என்று திருமலைராய பூபதியை நோக்கிப் பாடிவிட்டு நடந்த எல்லாவற்றையும் கூறினார். பூபதி உடனே காவலர்களைச் சினத்தோடு கண்டித்துவிட்டுப் படிக்காசரை விடுதலை செய்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டார். சமயத்தில் விக்கலை உண்டாக்கிய அரிசிக் கொய்யா விதைகளை மனதிற்குள் வாழ்த்தினார் படிக்காசர்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *