முள் ஏறுவதால் ஏற்படும் உடலின் வலியை விட, சொல் மாறுவதால் ஏற்படும் உள்ளத்தின் வலி அதிகம். ‘நேற்று நம்பிக்கை தரும், மகிழ்ச்சி தரும் ஒரு சொல்லைச் சொல்லி விட்டு இன்று மாற்றிச்சொல்வது எந்த வகையில் நியாயம்? இன்று நம்மை நேசிக்கும் ஒருவர் நாளை இன்னொரு பெண்ணை நேசிப்பதை யார் தான் விரும்புவார்? இது ரொம்ப அநியாயம்….’ வருத்தத்தின் உச்சத்துக்கு சென்றிருந்தது கயாவின் மனம்.
கல்லூரி வாழ்வில் காதலென்பதே கூடாது எனும் பெற்றோரின் கண்டிசனை ஏற்றுக்கொண்டுதான் டிகிரி படிப்பில் சேர்ந்தாள். கிராமத்து பழக்கத்தில் ஊறிப்போயிருந்த தம் பெற்றோர் தம் மகள் வெளியில் படிக்க சென்றால் யாரையாவது காதல், கல்யாணம் என பண்ணிக்கொண்டு வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
“இத பாரு கண்ணு எங்களுக்கு நீ படிச்சுப்போட்டு வாரத விட பதனமா வந்து சேரோணும். நீ வேலைக்கு போறதுக்கு ஒன்னும் படிக்க வேண்டாம். விபரமா பேசறதுக்கும், இங்கிலீசுல கடிதாசி வந்தா படிக்கிறதுக்கும் படிச்சாப்போதும். ஏழனப்பு சொத்து கெடக்குது. அது வெளைஞ்சா ஏழூட்டுக்காரங்க சாப்புட்டுப்போடலாம். தெரிஞ்ச குடும்பத்துல கண்ணாலம் பண்ணுனா நாளைக்கு கடைசி காலத்துல தெருவுல போய் நிக்க வேண்டீது வராது” என தனது தாய் எச்சரிக்கை செய்து பேசியும் காதல் கண்ணை மறைத்தது கயாவிற்கு.
பெற்றோரை எதிர்த்து, காதலித்து திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத்தாயான பின்பு, வேறு பெண்ணுடன் பைக்கில் தன் கணவன் சென்றதாக வேறொருவர் மூலமாகத்தெரிந்து வருந்தினாள். ‘வேலி தாண்டிய வெள்ளாடாகி விட்டாரோ…? அதிலும் இரவில் உடன் வேலை செய்யும் பெண்ணின் வீட்டிற்கு என்ன வேலை? காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்ததோடு, காதல் பரிசாக ஒரு குழந்தையையும் பெற்றுக்கொடுத்த பின்பு …. முன்பிருந்த அழகு தன்னிடம் தற்போது குறைந்து விட்டதோ….?’என நினைத்து கண்ணாடியில் தனது முகத்தை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
காலையிலேயே அழுதவளை அணைத்தபடி”என்னடி செல்லம்? உனக்கு என்ன பிரச்சினை….?” எனக்கேட்டான் கிரி.
“நீ தான் பிரச்சினை” அழுதபடி மூக்கைச்சிந்தி அவனது சட்டை மீது துடைத்து தனது வெறுப்பை வெளிப்படுத்தினாள்.
“யாரோ உனக்கு என்னப்பத்தி தப்பா போட்டுக்கொடுத்திருக்காங்கன்னு நெனைக்கிறேன். எனக்குத்தெரிஞ்சு இது வரைக்கும் தப்பா எதுவும் நடக்கலை. முந்தா நேத்து என் கூட வொர்க் பண்ணற சுமிய என்னோட பைக்ல அவ வீட்ல டிராப் பண்ணினேன். அவளோட ஸ்கூட்டி பஞ்சர்…. அதனாலதான்…”
“டாக்ஸில போகச்சொல்ல வேண்டியது தானே….?”
“நம்ம வீட்டுக்கு வர்ற வழி தானேன்னு....”
“அப்படியே வீட்ல போயி கடலை போட்டுட்டு டீ, காபி, டிபன்னு சாப்பிட்டுட்டு ஏழு மணிக்கு வாரதுக்கு பதிலா எட்டு மணிக்கு வந்திட்டு, நம்ம பைக் பஞ்சர்னு பொய் வேற பொருத்தமா சொல்லீட்டு…. நீ இப்ப ரொம்பம்மே மாறிட்டேடா….”
“ஸாரி கயா. நீயா கற்பனை பண்ணிட்டு பேசாதே. நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. வீடு வரைக்கும் வந்துட்டு டீ சாப்பிடாம போகக்கூடாதுன்னு சொன்னதும் மறுக்க முடியலை” எனக்கூறி அணைக்க வந்தவனை பிடித்து தள்ளி விட்டாள்.
“நாளைக்கிருந்து நீ குழந்தையப்பார்த்துட்டு வீட்டு வேலைய கவனிச்சுக்க. நான் வேலைக்குப்போறேன். பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா? பைக்க வித்துட்டு ஸ்கூட்டி வாங்கிடலாம். ரெண்டு பேரும் ஓட்டிக்கலாம்” என பேசிய காதல் மனைவியைப்பார்த்து வாயடைத்து நின்றான் கிரி.
அடுத்த வாரமே உடல் நிலை சரியில்லையென ஒரு மாதம் மெடிக்கல் லீவில் தன் காதல் மனைவியின் சந்தோசத்திற்காக குழந்தையைப்பார்ப்பதோடு சமையல் வேலைகளையும் செய்தான்.
கயா தினமும் பைக்கை விற்று வாங்கிய பழைய ஸ்கூட்டி ஒன்றில் திருமணத்துக்கு பின் முதன் முறையாக சாப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்கு சென்றாள்.
வித்தியாசமான வாழ்க்கை முறையை விரும்பியே வாழ்ந்தான் கிரி. யூடியூப் சேனல் வீடியோக்களைப்பார்த்து விதவிதமாக சமைத்து பழகினான். கயாவின் டீம் ஹெட் ஒரு நாள் உணவை ருசித்துப்பார்த்தவர் “கயா… ஒரு சண்டே கண்டிப்பா உன்னோட வீட்ல தான் என்னோட பேமிலியோட வந்து தங்கப்போறேன்…” என்றதும் வியர்த்தது கயாவிற்கு.
‘இன்னும் தோசை கூட கட்டாகாமல் முழுசாக எடுத்துப்பழகவில்லையே….. இவரு வேற இப்படி ருசியா பண்ணிப்பழகி….. எம்பேரைக்கெடுத்திருவாரு போலிருக்கே…’ என்ன சொல்வதென்று தெரியாமல் குழப்பத்தில் “ம்… ம்…” என்றாள்.
அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது ஸ்கூட்டி பஞ்சராகியிருந்தது. இந்த நேரத்துக்கு பேருந்து தன் வீடிருக்கும் நகர் வழியே செல்லாது என்பதாலும், டாக்ஸியில் அதிக வாடகை கொடுத்து போக மனமில்லாததாலும் விழித்து, காத்து நின்றவளை விசாரித்த உடன் வேலை செய்யும் கரண் தனது பைக்கில் கூட்டிச்செல்வதாகச்சொன்னவுடன் மறுக்காமல் ஒத்துக்கொண்டாள்.
வீட்டின் முன் பைக்கிலிருந்து இறங்காமல் சற்று முன்னே நிறுத்தச்சொல்லி இறங்கி நன்றி சொல்லிச்சென்றவளை “நன்றி மட்டும் போதுமா...?” என்ற கரணை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
“இவ்வளவு தூரம் வீட்டுப்பக்கம் வந்திருக்கேனே… ஒரு காஃபி கிடையாதா…?” என்றதும் அதிர்ச்சியிலிருந்து மீண்டவள், “ஓ…தா… தாராளமா…. வாங்க போட்டுத்தாரேன்…” என்று சொன்னவளைப்பின் தொடர்ந்து அவள் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான் கரண்.
கயாவிற்கு மனம் படபடக்க, காலிங் பெல்லை அடித்ததும் கணவன் கிரி கதவைத்திறக்க, கயாவிற்கு உடல் வியர்த்திருந்தது. “இவரு…. “
என முடிப்பதற்குள், “சாரத்தெரியுமே…. என்னோட வேலை பார்க்கிற சுமியோட ஹஸ்பெண்ட் தான். போன மாசம் நான் சுமியோட ஸ்கூட்டி பஞ்சரானதால நான் டிராப் பண்ணினப்ப சாருதான் எனக்கு டீ போட்டுக்கொடுத்தாரு. நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிருங்க…. இதோ காஃபியோட வாரேன்….” என கணவன் சொல்லிச்சென்ற போது உலக நடப்பின் உண்மையைப்புரிந்து கொண்டு அவர் பின்னே சமையலறைக்குச் சென்றவள், “ஸாரிங்க… என்னை மன்னிச்சிடுங்க. அன்னைக்கு சுமிய நீங்க டிராப் பண்ணினத தப்பாப்புரிஞ்சதோட, உங்களை வேலைக்கே போக வேண்டான்னு சந்தேகத்துல கிணத்துத்தவளையா அறிவில்லாம நாஞ்சொன்னது எவ்வளவு தப்புன்னு இப்ப புரிஞ்சிட்டேன். நீங்க போயி கரணோட பேசிகிட்டிருங்க. நானே காஃபி போட்டு எடுத்துட்டு வாரேன்….” என மனைவி கயா சொன்னதைக்கேட்டு நிம்மதியடைந்து மகிழ்ந்தான் கிரி.