காசு…துட்டு…பணம்… பணம்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 2,955 
 
 

முத்துவேலனுக்கு முதல் குழந்தை பெண் பிறந்ததும் பார்க்க வந்த எல்லாரும் வாயார வாழ்த்தினார்கள் ’மகாலெட்சுமி’ பிறந்திருக்கா! ‘வரவு’தான் என்று!. இரண்டாவது பெண்! ஏன்…? மூன்றாவதும் பெண்ணாய்ப் பிறந்ததும் வாழ்த்திய வாய்களே தூற்ற ஆரம்பித்தன. ‘முன்றும் பெண்ணா?! முடிஞ்சே நீ! அவ்வளவுதான்!’ எண்ணிக்கைக்குத் தகுந்தா மாதிரி  எண்ணமும் மாறிவிடுகிறதோ..?!

பையன்னா மட்டுமென்ன?! அதையும் இவர்கள் பணமாய்த்தானே பார்க்கிறார்கள்?!. ‘உனக்கென்னப்பா வரதட்சணையா சுலபமா சுளையா கறந்துடலாம்!’ சட்டத்தைச் சட்டை பண்ணாதவர்கள் பேச்சு இப்படி!  

குழந்தைகளைக் குதிராய்த்தானே பார்க்கிறது உலகம்?! ஆணோ பெண்ணோ ‘காசு..துட்டு.. பணம் பணம்…!’ பிறந்தால் தங்கக் காசில் தேனைத் தொட்டு நாக்கில் வைத்தல்… செத்தால் நெற்றிப் பொட்டில் நாணயத்தை வைத்துப்புதைத்தல்…! எல்லாம் பணம் தான் எல்லாவற்றிலும் பணம்தான். 

‘காசு தரய்யா? இல்லை, தலையை வெட்ட வா!!?ண்னு  கிணற்றுப் பாசான்னு ஒரு வகை நீள மெல்லிய காம்பில் பூக்கும் பூவை எதிரிலிருப்பவரிடம் காட்டி  பூவைச்சுண்டி அந்த் காம்பிலிருந்து பூவைக் கிள்ளுகிற விளையாட்டை ஸ்கூல் பசங்க விளையாடுவாங்க, அங்க தொடங்குது காசு ஆசை! வழிப்பறிக்கு வலாறு..! ஆயிரம் இருக்க… ‘பாங்க்கர்’னு ஒரு விளையாட்டு… பணம் வைத்து சீட்டாட்டத்தில் எத்தனை ஆட்டங்கள்…?! எல்லாம் எதுக்கு? காசு… துட்டு.. பணம் பணம் அதுக்கு! 

எல்லாம் முடிஞ்சு போம்போது மட்டும் ஞானம் வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரைப் பிள்ளை கடைசிவரை யாரோ? அப்புறம் என்ன கழுத்தைக்கு காசு காசுன்னு அலையணும்? 

எல்லாம் படிச்சுட்டு ஏரோப்ளேன் ஏறி, அமெரிக்கா போய் கைநிறைய சம்பாதிக்கணும்… சம்பாதிக்கறோம்…! கைநிறையுது…! மனசு நெறையுதா!? 

அப்பன் ஆத்தாவை அனாதை ஆஸ்ரமத்துல விட்டுட்டு.,  சொத்தைப் பங்கு போட்டா மாதிரியே அப்பா அம்மாவை ஆளுக்கு ஆறுமாசம்னு பங்கு போட்டு பார்த்தோம். எதுக்கு? காசு.. துட்டு.. பணம் பணம்…! 

பணத்தை மட்டும் மனுஷன் கண்டுபிடிக்காம இருந்திருந்தா…மனுஷனைத் தொலைச்சிருக்க மாட்டோம்! மனுஷனைத் தேடி அலையும் நிலை வந்திருக்காது! இதை யாருக்குச் சொல்வது என்று தெரியாத மூன்று பெண்னைப் பெற்ற முத்துவேலன் தனக்குத் தானே பிதற்றிக் கொண்டான் பித்து த்லைக்கேறி ஆஸ்பத்திரியில் அனாதையாய்க் கிடக்கையில்! 

Print Friendly, PDF & Email
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *