விச்சுவும், கிட்டுவும் பால்ய வயதிலிருந்தே தோழர்கள். இப்ப, ‘வாக்கிங் போய் வயிறு குறைக்கும் வயசு!’ வாக்கிங் முடிந்து ஒரு மரத்தடி பெஞ்சில் அமர்ந்தார்கள்.
‘கிச்சு வீட்டுக்குப்போய் என்னடா பண்ணப் போறே..!? வாயேன் எங்க வீட்டுல காலை டிபன் சாப்பிடலாம்!.’ என்றான் விச்சு.
‘இல்லடா., லதா போய்ச்சேரும் முன்னாடிலாம் வீட்டு சாப்பாடுதான். அவ விட்டுட்டுப் போய் ரெண்டு வருஷமாறது இப்பல்லாம் ஹோட்டல் சாப்பாடுதான். பிடிக்கலைனாலும் சாப்பிடத்தானே வேண்டியிருக்கு?! இன்னைக்கு ஒருநாளைக்கு உங்க வீட்டுக்கு டிபனுக்கு வரலாம். நாளை மறுபடி ஹோட்டல்தானே என் தலை எழுத்து!?’ சொல்லும்போதே அவன் கண்கள் கசிந்தன.
‘ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்குதாடா?’
‘ஒத்துக்கலைதான். போட்டது, கிணத்துல போட்ட கல்லாக் கிடக்குது. டிபன்னு இல்லே, ஹோட்டல்ல என்ன சாப்பிட்டாலும் அப்படித்தான்.’
‘உண்மைதான்.. எனக்கும் எப்போதாவது ஹோட்டல்ல சாப்பிட்டா, ஜீரணமே ஆறதில்லே..! அப்படியே கிணத்துல போட்ட கல்லாத்தான் கிடக்குது!’ அவனும் நொந்து கொண்டான் ஹோட்டல் சாப்பாட்டை.
‘ஏன் அப்படி இருக்கு தெரியுமா?’
‘வீட்டுல வீட்டுக்காரி, அரிசில கல்லு பொறுக்குவா! கருப்பரிசி நெல் நீக்குவா!. ஹோட்டல்ல கல்லோடதான் சமைக்கிறான் போல! அதான் தின்னது அப்படியே வயித்துல கல்லாக் கிடக்குது.
மொறத்தால புலியை வெரட்டுனதும், மொறத்துல கல்லு பொடைச்சு கல்லைக் கனியாக்கி பசியாற்றியதும் ஆத்துக்காரிகங்கற பெண்கள் தாண்டா..! அவ இல்லாத அருமை, ஹோட்டல் சாப்பாட்டில் புலப்படுது’ என்று கிச்சு சொல்ல, வீட்டு நியாபகம் வந்த விச்சு விடைபெற்றான்.
சிறுகதைகள் உண்மைச்சம்பவங்களின்ஒருபிரதிபலிப்பு. நடந்த துயரங்களை யோ சம்பவங்களையோ நமக்குக் காட்டி நாம் எதிர்பார்ப்பதைப் புலப்படுத்தும் புதையல் பேழை..! உலகை நாம் பார்த்த விதத்தை வாசகர்கட்கு வார்த்தை வழியே வழங்கும் காணிக்கை.. ரேரம் போக்கி அல்ல… நிதர்சன ஊக்கி!
வளர்கவி கோவை