கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 167 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘இறைவன் படைத்தனன் கவிஞனை; அவன் படைத்தனன் காவியத் தீஞ் சுவையை!’ 

அக்கூட்டத்திற்குக் கவிஞன், விஞ்ஞானி, விமர்சகன் ஆகிய மூவரும் பேச அழைக்கப்பட்டிருந்தார்கன். சந்தர்ப்பம் வலிய வந்து வாய்த்தது என விஞ்ஞானியும், விமர்சகனும் அக மகிழ்ந்திருந்தார்கள். 

முதலில் விஞ்ஞானி பேசினான். 

‘கவிஞன் சோம்பேறி; சதா கனவு கண்டு கொண்டு இருப்பவன். தென்றலின் தழுவல், புள்ளினத்தின் கீதம் வானவில்லின் எழில், ஏகாந்த இனிமை- இவற்றிலே மனம் பறிகொடுத்ததாகப் பிதற்றுவான். அலங்காரப் பிதற்றல் களால் நாமும் சமுதாயமும் முன்னேற முடியுமா? இப் பிதற்றல்களைச் சிருஷ்டி என்று மயங்குதலும் போற்றுதலும் எவ்வளவு அபத்தமானது? இக்கவிஞர்கள் கவிதை பாடித் தமது நேரத்தையும், பிறரின் நேரத்தையும் பாழாக்குவதை அனுமதிப்பதிலும் பார்க்க, இவர்களைக் கலப்பைகளிலே பூட்டி உழ வைப்பீர்களானால், இவர்களுடைய ‘தொப்பை’ களையும் நிரப்பக் கொஞ்சம் நெல்மணிகளையாவது அதிகமாகப் பயிரிடலாம். விஞ்ஞானியின் சமுதாயச் சேவையைப் பாருங்கள். உந்திகள், வான ஊர்திகள், வானொலி, சலனப் படம், தொலைபேசி என அவன் நமது சௌகரியத்திற்காகப் படைத்துள்ளவற்றின் பட்டியல் மிகவும் நீண்டது. கடவுளுக் குச் சமதையான உண்மையான படைப்பாளிகள் விஞ்ஞானிகளே….’ என மிகவும் ஆவேசமாகக் கவிஞர்களைச் சாடி, விஞ்ஞானிகளை விண்ணிலே உயர்த்தி அவர் தமது பேச்சினை முடித்தார்

அடுத்ததாகப் பேசிய விமர்சகன், ‘விமர்சகன் சமுதாயத் தின் மனச்சாட்சியாகவும் இலக்கியச் சுவையின் உயிர்த் துடிப்பாகவும் உழைத்து வருகின்றான். பல்வகை நூல்களைக் கற்றுத் தேர்ந்த பெற்றியனே விமர்சகன். இலக்கியத்திற் கான இலட்சணங்களையும், இலக்கணங்களையும் அறிந்தவன். அவனுடைய தொண்டு மட்டும் இல்லாவிட்டால், எந்தக் கவிதா ஆக்கமும் பொதுமக்களின் சுவையை எட்ட மாட்டாது. பொதுமக்களின் சுவையைப் பூர்த்தி செய் யும் பண்டங்களை இறக்கும் துறையாகவும் அவன் தன்ன லமற்ற தொண்டு இயற்றுகின்றான். இந்த உண்மை களை மறந்து, களிஞனானவன் தான் வானத்தில் இருந்து குதித்த தனிப்பிறவி என்ற பாவனையில் வாழ்தல் அகம்பாவம் சார்ந்ததாகும்….’ என நிழல் யுத்தம் பயின்று, தனது பேச்சை நீட்டி முழக்கினான். 

 ‘விஞ்ஞானியும், விமர்சகனும் பேசிய பின்னர் என் கட்சியை எடுத்துப் பேசாதுவிட்டால், என்னை நீங்கள் சோம்பேறி என்றோ, அகம்பாவியென்றோ நினைத்துவிடக் கூடும். விஞ்ஞானிகளின் சமுதாயத் தொண்டினை நான் என்றுமே குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஆனால், ஒரு ஹென்றி போர்டோ, ரைட் சகோதரரோ, மார்க்கோனியா, ஒரு எடிசனோ தோன்றி அற்புத விஞ்ஞானக் கருவிகளை அமைத்துத் தந்திருக்காவிட்டாலும்கூட, பின்வந்த விஞ்ஞானிகள் நிச்சயம் அவற்றைக் கண்டுபிடித்துத் தந்திருப்பார்கள். மனிதன் அக்கினியையும், அதன் உபயோகத்தையும் கண்டு பிடித்ததிலிருந்து, இயற்கையின் இரகசியங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சி உண்மைகளை அடித்தளமாக வைத்துப் பல சாதனங்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளான். இவை ‘கண்டுபிடிப்பு’களே என்பது கவனத்திற்குரியது. ஆனால், காளிதாஸன் தோன்றியிருக்கா விட்டால் சாகுந்தலம். ஸேக்ஸ்பியர் தோன்றியிருக்கா விட்டால் ஒத்தெல்லோ, வள்ளுவன் இன்றித் திருக்குறள், கம்பனின்றிக் கம்பராமாயணம் தோன்றியிருக்கமாட்டா. அவற்றை அதே சுவையிலும், கற்பனை வளத்திலும் இன்னொரு கவிஞனினாற் படைத்தே இருக்க முடியாது. இறைவன் படைத்தனன் கவிஞனை; அவன் படைத்தனன் காவியத் தீஞ்சுவையை! விமர்சகனின் கூற்றினைப் பிறிதொரு கவிஞன் முற்கூட்டியே அழகாக விமர்சனஞ் செய்துள்ளான். கவிஞன் பலாப் பழத்தின் தீஞ்சுவைகளைச் சுவைத்து மகிழ்கின்றான்; விமர்சகன் அப்பலாப் பழத்தின் தோலிலுள்ள முட்களை எண்ணுவதிற் காலம் கழிக்கின்றான். இனி….’ எனத் தன் பேச்சைக் கவிஞன் தொடங்கினான்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *