இருபத்து நான்கு வயதைக்கடந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் வரன் தேட ஆரம்பித்து பல திருமண தகவல் மையங்களில் பதிவு செய்த வகையில் ஒவ்வொரு வரனாக குடும்பத்துடன் அமர்ந்து அலைபேசி திரையில் ஆன்லைன் மூலமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு வரன் புகைப்படம் மனதுக்குப்பிடித்துப்போனதும் அதன் மீது கை வைத்தாள் மகி.
“ஏண்டி மகி உனக்கு அறிவிருக்கா…? பார்க்க கரேன்னு தோசக்கல்லு மாதிரி இருக்கான்…. அவனப்போயி…. நீ இருக்கற அழகுக்கு மன்மதன் மாதிரி மாப்பிள்ளை எதிர்பார்க்கிறோம்” எனப்பேசிய தாயை கோபமாகப்பார்த்தாள்.
“அம்மா நீ கம்முனு இருக்க மாட்டியா….? சிவப்பா நீயும் புடிச்சியே…. இப்ப சிறப்பா வாழ்ந்திட்டிருக்கிறியா….?”
தன் மகள் இப்படிக்கேட்பாள் என சிறிதும் யோசிக்காத தந்தை கரண் எழுந்து சென்று விட, “என்ற வாழ்க்கைய உட்டுத்தள்ளு. செவப்பா இருக்கறவங்க உன்ற அப்பனமாதர ஊதாரியா இருந்திடுவாங்களா….? கருப்பா இருந்தா நல்லவங்களாவே இருப்பாங்களா….? எல்லாம் நம்ம தலை எழுத்து. ஜோடிப்பொருத்தம் இல்லாம ஆராச்சும் பண்ணுவாங்களா? நீயே சொல்லு…” தாய் கருணியின் பேச்சில் உடன்பாடு இல்லாதவளாய் அந்த வரனின் ப்ரொபைலையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
மாதம் இரண்டு லட்சம் சம்பளம். ஐடி கம்பெனி வேலை. பெங்களூரு வாழ்க்கை. பூமி, வீடு, காலியிடங்கள், வாடகை வருமானம், கார் என இல்லையென்பதே எதுவுமில்லை. ‘பையன் கருப்பா இருந்தாலும் நல்லா கலையா வேற இருக்கான். கருப்பான முகத்துக்கு மட்டும் தான் பற்கள் பளிச்சென்று வெண்மையாகத்தெரிகிறது’ என உள் மனம் அசை போடப்போட வெளி மனதுக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டதை உணர்ந்தாள்.
“நேர்ல பார்க்கனம். பேசிப்பார்க்கனம். ஏற்பாடு பண்ணுங்க” என உறுதியாகச்சொன்ன பின் மறுக்க முடியாமல் ஒரு கோவிலில் வரனைச்சந்திக்க திருமண தரகர் மூலமாக ஏற்பாடு செய்தனர் மகியின் பெற்றோர்.
முதல் சிரிப்பிலேயே முழுவதும் சரணடைந்து விட்டது மகியின் மனம். கன்னத்தில் குழி விழும் பெண்கள் அடிக்கடி சிரித்து கன்னக்குழியை பிறர் பார்க்க காட்டுவது போல, கருப்பான ஆண்கள் அடிக்கடி பற்கள் முழுவதுமாக தெரியும் அளவுக்கு காட்டுவதும் வழக்கம். வெள்ளைப்பற்கள் கருப்பான முகத்துக்கு கிரீடம் போன்றவை. இந்த சூட்சுமத்தை புரிந்ததவர்கள் அடிக்கடி சிரித்து வைப்பார்கள். அதைத்தான் இன்று மகியைப்பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை கரணும் செய்தார்.
“நல்லா இருக்கீங்களா….?”
“இதுக்கு முன்ன என்னைப்பார்த்து பழகியிருக்கீங்களா….”
“இல்லை. இப்பத்தான் முதலா பார்க்கறேன்….”
“அப்புறம் எதுக்கு நல்லா இருக்கீங்களான்னு கேட்டீங்க,?”
“அது… வந்து.… சும்மா ஒரு பேச்சுக்கு. யாரைப்பார்த்தாலும் இப்படித்தான் கேட்பேன்”
“நான் நல்லா இருக்கேனான்னு நீங்க சொல்லுங்க. அதக்கேட்கத்தான் இங்க மீட் பண்ணறோம்”
“ஓ… அப்படி வாறீங்களா? தமிழ்லதான் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தம் இருக்கே. நீங்க சூப்பரா இருக்கீங்க. என்னப்பத்தி நீங்க சொல்லுங்க. உங்களோட சேர்த்து பதினேழாவது பொண்ணு நீங்க. அத்தனை பேரும் என்னோட நிறத்தப்பார்த்து நிராகரிச்சிட்டாங்க. நீங்களும் அதத்தான் பண்ணப்போறீங்கன்னு எனக்குத்தெரியும்”
“ஆமாங்க கருப்பு நிறத்த எனக்குப்புடிக்கலே”
“அப்ப நான் கெளம்பறங்க”
“அதுக்குள்ள கிளம்பிடாதீங்க. நான் சொல்லி முடிக்கல. மொத்தமா உங்கள புடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்…..”
‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ எனும் மகாகவியின் வரிகள் காதில் ஒலித்தது போலிருந்தது கரணுக்கு!