(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘பிறவிச் சக்கரம்கூட ஈசனின் படைப்புத் தானே?‘
அரனின் உள்ளத்தில் ஓர் எண்ணத்தின் வெடிப்பு. தன் படைப்புகளை உன்னிப்பாக அவதானித்தான். வாஞ்சை யுடன் பார்க்கும் பொழுது, சுரீரென்று நெஞ்சத்தில் ஒரு கீறல். தன் படைப்புகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மனக் குறையைத் தன்னிடமிருந்து மறைப்பதான பிரமை அவனுக்குத் தட்டியது.
மலர் முறுவலித்தது. அந்த முறுவலின் கோடியிலே சோகம் புரையோடி இருப்பதை அவன் அவதானிக்கத் தவறவில்லை.
‘மலரே! நீ விரும்புவது யாதோ?’ என விநயமுடன் கேட்டான்.
‘நான் காயாக விரும்புகிறேன்’ எனச் சட்டெனப் பதில் வந்தது.
விசாரணை சங்கிலித் தொடராக நகர்ந்தது.
‘காயே, எதை நீ விரும்புகிறாய்?‘
‘கனியாக!’
‘கனியே, உன் விருப்பம்?’
‘வித்தாக!’
‘வித்தே, உன் விருப்பம்?’
‘முளையாக!’
‘முளையே, உன் விருப்பம்?’
‘மரமாக….’
‘மரமே, உன் விருப்பம்?’
‘நான் புஷ்பிக்க….’
கேள்வி கேட்ட அரனுக்குச் சலிப்புத் தோன்றத் தொடங்கிற்று. ‘அசரங்களின் ஆசை அவ்வளவுதான்’ என வாய் முணுமுணுத்தது.
‘எல்லாப் படைப்புகளுக்கும் உயர்ந்ததாக இருக்க நீங்கள் படைத்த ஆறறிவு மனிதன் கூடப் பிறவிச் சக்கரத்திற்குள் சிக்குண்டே சாம்புகிறான்’ என்றாள் தேவி அவன் செவிகளில் இரகசியமாக,
‘என்ன தேவி? ஈசனின் செவிகளைக் கடிப்பது ஏனோ? பிறவிச் சக்கரம்கூட ஈசனின் படைப்புத்தானே?’ என்று கூறிய நாரதன் ‘சம்போ சங்கர மகாதேவா!’ என அஞ்சலி செய்து நின்றான்.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.