வாலிப வயதில் அந்தப் பாட்டை அவினாசி ரொம்பவே ரசித்ததுண்டு. பாடலில் ’கடவுள்மீது ஆணை உன்னைக் கைவிட மாட்டேன்!’. என்று ஆண் பாட, ‘உயிர்க் காதல் மீது ஆணை, வேறு கைதொடமாட்டேன்!’ என்று பெண் பாட, வாலிப வயதில் அவனை வசீகரித்த பாடல் அது. ஆனால் அதற்குள் ஒரு அழகிய பாடம் ஒளிந்திருப்பது அப்போது தெரியவில்லை பாவம்!!
இன்று முதிர்ந்த வயதில் மூளியாய் அந்த பிஸி சாலையில் எதோ யோசனையாக நடந்து கொண்டிருந்தவனை அந்தக் காட்சி கவர்ந்தது…..!
டூவீலரில் கணவனுக்குப் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தாள் ஓட்டுபவன் மனைவி.
பயணித்துக் கொண்டிருந்த பெண் மடியில் ஒரு பெண் குழந்தை! அது பயணிக்கும் வண்டி வேகத்துக்குப் பயப்படாமல், பதற்றப்படாமல் ‘ஹாயாய்’ அம்மாவைக் கட்டிப் பிடிக்காமல் பயணித்துக் கொண்டிருந்தது தைரியமாய்!.
அடுத்துப் போன, அதே மாதிரியான டூவீலரில் ஒரு அம்மா மடியில் ஆண் குழந்தை, அம்மாவை அது, இறுக்கிக் கட்டிப் பிடித்துக் கொண்டு பயத்தோடு பயணிக்க,… இரண்டையும் ஒரு கணம் ஒப்பிட்டது அவினாசி மனம்.
‘என்றைக்கிருந்தாலும் வேறு வீட்டுக்கு மறுமகளாகப் போய்விடப்போகும் பெண் பெற்ற தாயைப் பிடிக்காமல் ஹாயாய்ப் பயணிக்கிறது! தேனும் பாலும் ஊட்டி வளர்த்த தாயை, எங்கிருந்தோ வந்தவளை மணந்ததும் ஒதுக்கிவிடுகிற பெரும்பாலான ஆண் பிள்ளைகள் ஏதோ கைவிடாமல் காப்பாற்றப் போபவன் போல இறுகிப் பற்றிக் கொண்டு பயணிக்கிறான்.
ஒன்று புரிந்தது அவினாசிக்கு.
‘ஆணைப் பொறுத்தவரை என்றும் பற்றுக் கோடில்லாமல் உலகை ஜெயிக்க, உலகில் பயணிக்க ஆணால் கடைசிவரை முடியாது….! ஆனால், பெண்ணை ‘வீக்கர் செக்ஷன்’ என்று நாம் தப்பாய் எடை போடப்படும் ‘பெண்’ நம்மை ஏமாற்றி கட்டியவனையோ.. பெற்றவரையோ கடைசிவரை யாரையும் சாராமல் தனியாய் தைரியசாலியாய்ச் சாதிக்கிறாள். பெண்ணால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்!’ என்று.
பாடல்வரிகள் அவன் அனுமானத்தை உறுதி செய்தன.
‘உயிர்க்காதல் மீது ஆணை வேறு கை தொட மாட்டேன்!’ என்கிறாள் பெண்.
பொய்யாய்… போலியா கடவுள்மீது ஆணை என்று புளுகிவிட்டுக் கழன்று கொள்கிறான் ‘ஆண்’ என்பதையே டூவீலரில் பயணித்த ஆண் பெண் குழந்தைகள் தந்த ஞானம் அதிசயிக்க வைத்தது அவினாசியை!