சந்துரு அவனுடைய வீட்டில் தன்னுடைய அறையில் வெகு மும்முரமாக கணனியில் சிக்கலான ஒரு கணக்கு போட்டுக்கொண்டிருந்தான். அவன் அணுவியல் சார்ந்த ஒரு நிறுவனத்தில் ஆர்டிஃபிஷில் இன்டெலிஜென்ஸ் துறையில் வேலை செய்பவன்.
அந்த நிறுவனத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக மிக ரகசியமான அணு ஆராய்ச்சி நடந்துவருகிறது – நியூக்ளிர் பியூஷன் – அணு இணைவு – பற்றின ஆராய்ச்சி. கரி, எண்ணை, மீத்தேன் வாயு போன்ற எரி பொருட்களை பயன்படுத்தாமல், மின் சக்தி எவ்வாறு உண்டாக்குவது என்ற அணு இணைவு ஆராய்ச்சி உலகில் பல நாடுகளில் நடக்கின்றன.
சந்துரு செய்யும் ஆராய்ச்சி இதுதான்: ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தி அணு இணைவு தடையில்லாமல் இயங்குமாறு செய்தால் ஏராளமான மின்சக்தி உற்பத்தி செய்யலாம். இந்த முறையினால் சுற்றுப்புற சூழலில் மாசு ஏற்பட வாய்ப்பில்லை என்பதுதான் கவர்ச்சியான வாதம். எப்படி ஆர்டிஃபிஷில் இன்டெலிஜென்ஸை இதற்கு ஏற்றதாக பயன்படுத்துவது?
நான் சொன்ன சந்துருவின் ஆராய்ச்சியைப்பற்றின இந்த பரம ரகசியத்தை நீங்கள் தயவு செய்து வெளியே யாருக்கும் சொல்லிவிடாதீர்கள். வேண்டி கேட்டுக்கொள்கிறேன். சந்துருவுக்கு நம்மால் வேலை போகக்கூடாது…இல்லையா?
அவன் இருந்த அறையில் எரிந்துகொண்டிருந்த மின் விளக்கு ஏதோ மங்கலாகா ஒளிவிட்டது. ‘புது எல்.இ.டி. பல்ப் போடவேண்டும்’ என்று மனதில் குறித்துகொண்டவன்,
அறைக்கதவு திறந்ததுகூட தெரியாமல் தன் வேலையில் மூழ்கியிருந்தான்.
“இராத்திரி முழுக்க வேலையா?” அவன் மனைவி மாலாவின் அலுத்துக்கொண்ட ஆனால் சூடான குரல்.
சட்டென்று அதுவரை மங்கலாக எரிந்துகொண்டிருந்த மின் விளக்கின் ஒளி கூடியதுபோல இருந்தது. அண்ணாந்து பார்த்தவன் சற்று திடுக்கிட்டான்.
“அதானே பாத்தேன்…”. சந்துரு ஒரு கமெண்ட் அடித்தான்.
“என்ன…” மாலா.
“ரூம்ல விளக்கு திடீர்னு பளிச்சுனு எரியுதேன்னு பாத்தேன்…”
எந்த ஒரு சின்ன சந்தர்பத்தையும் நழுவவிடாத மாலா, “நான் வந்தாலே எரியாத விளக்குகூட எரியும்…” என்றாள்.
“நான் சொல்றது வேற…நீ பேசினாலே விளக்கு பளிச்சுனு எரியுதே…” சந்துரு.
“எப்படி…?” மாலா.
“உன் சூடான பேச்சுக்கு அவ்ளோ அலாதி சக்தி…நான் என்னுடைய அணுயியல் ஆராய்ச்சியை நிறுத்திட்டு வேற ஒரு ஆராய்ச்சியை ஆர்ம்பிக்கலாம்னு இருக்கேன்…”
“வர வர உங்க உளறல் அதிகமாகுது…”
“உன் பிரண்ட்ஸ் எல்லாம் உன்னைப்போலதான் சூடா பேசுவாங்களா?”
“எப்படி தெரியும்? ஏன் கேக்கிறிங்க”?
“நீயும், உன் பிரெண்ட்ஸும் பேசுபோது ஏற்படும் சக்தியெல்லாம் சேகரிச்சு அதுலேருந்து மின் சக்தி உற்பத்தி செய்ய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸை பயன்படுத்தலாம்னு நினைக்கிறேன்…ஒரு புதுவிதமான ஆராய்ச்சி…எப்படி ஐடியா…?”
சந்துரு முடிக்குமுன்னே மாலா அந்த அறையைவிட்டு நகர்ந்தாள். அறையில் மின் விளக்கு மீண்டும் மங்கலாகியதோ?