முரண்பாடுகளின் மூட்டைதான் மனிதன். உண்மைதான். யாரோடும் முரண்படலாம்., ஆனால் வாழ்க்கைத் துணையோடு முரண்படுவது என்பது மனித பிறப்பின் மகிழ்ச்சியையே குலைத்து விடுகிற ஒன்று.
அமுதாவுக்கும் அவன் கணவனுக்கும் அடிக்கடி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை ஏற்படும். எல்லாக் குடும்பங்களிலும் இப்படிச் சின்னச் சின்ன ஊடல்கள் உருவாவது கூடி முயங்கப் பெறத்தானே என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் அவர்கள் அப்படி நினைக்கவில்லை!
‘ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்.. உன்பார்வையால் எனை வென்றாய், என் உயிரிலே நீ கலந்தாய்’ என்று கல்யாணமான புதிதில் மெய்மறந்து பாடியது உண்டுதான். ஆனால், ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல ஆகி இப்போது டைவர்ஸ் வரை போய்விட்டது விஷயம்.
லாயர் லாயலானவர். காசுக்கு கவுன் மாட்டுபவரல்ல…! அவர் அட்வைஸ் பண்ணினார் இப்படி…
‘வாழ்க்கை ரயில் தண்டவாளம் போல! ஒன்றாக இருந்தால்தான் பயணம் நினைத்த இலக்கை அடையும்!.’ என்றார்.
அமுதாவோ அவர் சொல்வதை லட்சியம் செய்யாமல் மறுத்துச் சொன்னாள்…
‘தண்டவாளம்தான்! வாழ்க்கை ஒருமித்துத்தான் பயணப்பட வேண்டும்., ஆனால், தண்டவாளங்கள் ஒருமித்துப் பயணப்படலாம் ஆனால் ஒன்றாகிப் பயணப்பட முடியாது! பயணப்பட்டால்.. இலக்கு இழப்பாகத்தான் இருக்கும்!’ என்றாள் காட்டமாக.
அவன் சொன்னான். ‘பார்த்தீங்களா சார்? இவள் எப்பவும் இப்படித்தான் வானவில் மாதிரி! … நான் சூரியன் என்றால், எப்போதும் எனக்கு எதிர் திசையில்தான் இவள்…!’ என்றான் காட்டமாக.
‘டிபரன்ஸாப் ஒப்பீனியன் யாருக்கு இல்லை?! அந்த பரமசிவன் பார்வதிக்குக் கூட டிபரன்ஸாப் ஒப்பீனியன் வரவிலை?! விட்டுக் கொடுங்கள் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை!’ என்றார் லாயர் லட்சுமணன்.
‘யார் அனுசரிப்பது?’ காட்டமாய்க் கேட்டாள் அமுதா?!
‘நீ பொண்ணுதானே? நீதான் விட்டுக் கொடுக்கணும்!’ என்றான் அவன்.
லாயர் குறுக்கே பாய்ந்து சொன்னார்,
‘விட்டுக் கொடுப்பது என்பதில் இருவரும் ஒத்துப்போகிறீர்களா?!’
‘ஆமாம்!’ என்றார்கள் இருவரும்.
‘அப்புறமென்ன அதில் ஆண் பெண்! .. ?! விட்டுக் கொடுப்பதில் என்ன நீயா நானா?! வானவில் வாழ்க்கை அல்ப சில நிமிடங்கள் மட்டும்தான்.ஆனால், ஆதவன் அதிகநேரம் வாழ்கிறதே?!
வானவில் தனக்கு ஏதிராய் தோன்றிவிட்டதற்காக ஆதவன் ஆதங்கப்படுவதில்லை. வானவில்லும் அல்ப நேரத்தில் மறைந்துவிடுவதாற்காக வருந்துவதும் இல்லை..! பட்டாம் பூச்சியின் பரவசம்தான் விட்டுக் கொடுக்கிற விஷயம்! எதிராகவே தோன்றுகிறது என்று எண்ணாமல், அடுத்தவர் சந்தோஷம் அல்பநேரம் என்று பொறுத்துக் கொண்டால், சூரியனாய் பிரகாசிக்கலாம், யோசியுங்கள்!’ என்றார்.
யோசித்தார்கள்!