எக்ஸ்பிரஸ் ஏழாவது பிளாட்பாரத்தில் நின்றது.
முதுகுப் பை தவிர இரண்டு கைகளிலும் சுமைகளோடு இறங்கினார் சங்கரன். அவருக்கு வயது 60.
“தூக்கியாரட்டுங்களா?”
கேட்டார் போர்டர்.
“…”
யோசித்தார் சங்கரன்.
“50ரூவா குடுங்க போதும்” என்றார் .

‘நம் சுமைகளை நாமேதான் சுமக்க வேண்டும்…!’ என்ற கொள்கையால் சங்கரன் வயதுக்கு மீறிய சுமையைச் சுமந்துகொண்டு நடந்து, பிளாட்பாரத்தின் மறுகோடியில் படியேறி, முதல் படியிறங்கி, முதல் நடைமேடையில் ரயில்நிலைய முகப்பில் வந்து நின்றார்.
‘இன்னும் அரை மணி நேரத்தில் டவுன் பஸ் இருக்கிறது. மகன் இதோ இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவான்.’ வீட்டுக்குப் போகும் நேரத்தை மனசால் கணக்கிட்டார்.
“முதல் பிளாட்பாரத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும்…” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து;
“வந்து கொண்டிருக்கிறது…” என்ற அறிவிப்பும் வந்தது.
ஒரு வழியாக, மகன் வருகிற ரயிலும் வந்துவிட்டது.
“ப்ரீஃப் கேஸை’ போர்ட்டர் கையில் கொடுத்துவிட்டுக் கைவீசியபடி மகன் வந்தான்.
கையடக்கமானப் பெட்டியைத் தூக்கி வந்தப் போர்டருக்கு “நூறு ரூபாய் கொடுப்பா!” என்றான்.
கையை அசைத்து ஆட்டோ வரவழைத்தான்.
ஆட்டோவுக்கும் 100 ரூபாய் தந்தார் சங்கரன்.
அவசரப்பட்டுத் தனியாக டவுன் பஸ் பிடித்து வராமல் மகனின் வருகைக்காக, அரை மணி நேரம் காத்திருந்து ஆட்டோவில் வந்ததால் நகரப் பேருந்துக் கட்டணமான ஐந்து ரூபாயை மிச்சப்படுத்தியத் திருப்தியில் வீட்டுக்குள் நுழைந்தார் சங்கரன்.
– மே 2023 கதிர்ஸ்