படித்துக் கொண்டிருந்த காலத்திலும் சரி, டிரைவிங் பயின்ற காலத்திலும் சரி… எந்த ஊர் சென்றாலும் புத்தம் புது ஏர் பஸ்ஸில்தான் ஏறுவான் முருகேசன்.
‘‘ஓட்டை உடைசல்கள்ல ஏறினா நடுவழியில மக்கர் பண்ணிடும். அதான் நான் ரொம்ப அலர்ட்டா புது பஸ்ஸா பாத்து ஏறுவேன்!’’ என்று நண்பர்களிடம் பெருமையடித்துக் கொள்வான்.
இன்று கூட… மதுரை செல்ல பஸ் நிலையத்துக்கு வந்தான் முருகேசன். அங்கு வரிசையாக மதுரை செல்லும் புத்தம் புது பஸ்கள் நான்கு நின்றிருந்தன.
ஸ்லீப்பர் கோச், ஏர் பஸ், வீடியோ கோச், மிதவை பஸ், சூப்பர் ஏர் பஸ் எனப் பெயர் தாங்கியிருந்த அவற்றின் அழகையும் கம்பீரத்தையும் முருகேசன் ரசித்தானே தவிர, எதிலும் அவன் ஏறவில்லை.
கடைசியாக, ‘பழைய இரும்புச் சாமான், ஈயம், பித்தளைக்கு பேரீச்சம் பழம்’ என்பது போலிருந்த அரசுப் பேருந்து அருகே வந்தான். அதில் பெயின்ட் எல்லாம் உதிர்ந்து பல் விழுந்த முதியவர் போலிருந்தது அந்த பஸ். டயர்கள் தேய்ந்து வழுக்கையாகியிருந்தன.
புத்தம் புது பஸ் பிரியனான முருகேசன், கடைசியாக அந்த டப்பா பஸ்ஸில் ஏறினான்.
‘‘என் தலையெழுத்து… வேலைக்குச் சேர்ந்ததும் மொதமொதல்ல இப்படி பஸ்ஸைக் குடுத்திருக்காங்க’’ என்று சலித்தபடி டிரைவர் இருக்கையில் போய் அமர்ந்தான்!
– 01 ஜூலை 2013