நீண்ட நெடிய யோசனைக்குப் பிறகுதான் நிம்மி அந்த முடிவுக்கு வந்தாள்.
‘ஏன் உன்னைக் கொல்லக்கூடாது!நிஜந்தா?! நிஜந்தா, உன்னை எத்தனை உயிருக்கு உயிராய்க் காதலித்தேன்?!. நீ சொல்கிறாய் என்பதற்காக என்னவெல்லாம் செய்தேன்?!ஏதையெல்லாம் செய்யாமல்விட்டேன்?!எத்தனைபேரின்யோசனையை ஆலோசனையை அறிவுறுத்தல்களை அலட்சியப் படுத்தியிருக்கிறேன்?! ஆனால், ஒரு முறைகூட உனக்குத் துரோகம் செய்ததில்லையே?! என்னை ஏமாற்ற எப்படி உனக்கு மனம் வந்தது?!
நீ பேருக்கு மட்டும்தான் நிஜந்தன்!. ஆனால், நீ ஒரு பொய்யன்! ஒரு பேடி…! என்னை என் முன்னேற்றங்களை., என் வாய்ப்புகளை எல்லாம் உன் ஒருத்தனுக்காகத் தானே தத்தம் செய்தேன்?! நீ இப்படி ஏமாற்றுவாய் என்று கனவிலும் நினைக்கவில்லையே ?!
‘இனி, நீ உயிரோடு இருக்கக் கூடாது! உன்னைக் கொல்வதாக முடிவு செய்துவிட்டேன். இவள் பெண்தானே ?! என்ன செய்துவிடப் போகிறாள் என்று மட்டும் தப்புக் கணக்குப் போட்டுவிடாதே! பெண்புத்தி ‘பின்புத்தி’ ஆம்! கூர்மையான் புத்தி என்பதைத்தான் பின் புத்தி என்றார்கள்!
நான் வாழ வேண்டுமென்றால்…, நான் நல்லபடியாக என் இஷ்டப்படி வாழ வேண்டுமென்றால்… நீ…. நீ… நீ இந்தக் கனம் முதல் உயிரோடிருக்கக் கூடாது!
‘உன்னைக் கொல்ல வேண்டும்!. ஒற்றை ஒரு நொடியில் நீ அவ்வளவு சீக்கிரமாக செத்துவிடக் கூடாது! துடிதுடித்து எனக்குச் செய்த துரோகங்களுக்காக… ஏன் எனக்கு என்னைப் போன்ற அப்பாவிகள் ஆயிரமாயிரம் பேருக்குச் செய்த துரோகத்துக்கு தண்டனையாக செத்துத்தான் ஆகவேண்டும்’ தீவிர முடிவுக்கு வந்தாள் நிர்மலா.
‘நிஜந்தனை எப்படிக் கொல்லலாம். எத்தனை வருஷ பழக்கம்?! பைபிள் கொட்டேஷனெல்லாம் காட்டினானே?!பாவி! பாவி!’ கணவனும் மனைவியும் ஒரே மாமிசமாய் இருக்கிறார்கள்!’ என்று. என்னை வெறும் மாமிசப் பிண்டமாக கடைசியில் நினைத்துவிட்டானா? எப்படிக் கொல்வது??????
கத்தியால் குத்திக் கொலவதா? ரத்தம் பீச்சுமா???!! துப்பாக்கியால் சுட்டுக் கொல்லலாமா? குறி தப்பிவிட்டால்?! சுருக்கு மாட்டி இழுத்துவிடலாமா? சுருக்குக் கயிறில் சிக்குவானா அவன்? பலே கில்லாடியாச்சே?! ஒண்ணும் முடிவுக்கு வரமுடியாமல் தவித்தாள்.
நிஜந்தனுக்குத்தான் எத்தனை பெயர்கள்?
என்ன செய்ய ஆரம்பித்தாலும் இதைச் செய்யாதே? அப்படிச் செய்யாதே! இது அசிங்கம்! பேர் கெட்டுப் போகும்!! என்று தடைகளால் முன்னேற்றாத்தை தடுத்தவன்! இப்படி முப்பது வருஷமாய் கட்டிய கணவனாய் பாவி கூடவே இருந்து குடிகெடுத்தவை எத்தனை?! என்னுள் உயிருள் உயிராய் இருக்கிறானே?
என்னுள் மட்டுமென்ன இன்னும் எத்தனை எத்தனை அப்பாவிகளின் உயிரின் உயிராய் இருந்திருக்கிறானோ…?! இன்றும் இருக்கிறான் நிஜந்தன்! மனசாட்சியாய் எனும் மறு பெயரில் ??? அவனைக் கொல்ல ஒரே வழி… நான் தற்கொலை செய்து கொளவதுதான். அப்போதுதான் அவன் இடையூறு இருக்காது! மனசுக்குள் ஒரு பளீர் மின்னல்…!
மனசாட்சியைக் கொன்றுவிட்டு வாழ்வது ஒரு வாழ்வா?
முடிவுக்கு வந்தாள்.. ! ஒவ்வொரு முறையும் நிஜந்தன் எனும் என் மனசாட்சி சொற்படி நான் நடக்காது போயிருந்தால்…??? இவளெல்லாம் எதற்கு உயிரோடிருக்கிறாள் என்ற பழி சொல்லியிருக்குமே உலகம்?!
‘நிஜந்தா… என் மனசாட்சியே! நீ எத்தனை தோல்விகளைச் சந்திக்க வைத்திருந்தாலும்… என் உயிரின் உயிராய் என்னுள் ஒரே மாமிசமாய் இருக்கும் உன்னை நான் கொல்வது நியாயமாகது!!… முடிவுக்கு வந்தவள் யோசித்தாள்.
‘இந்த முடிவுகூட நிஜந்தன் வழிகாட்டுதலால் நடக்கிறதா? இவ்வளவும் அவனால் நடந்தது என்றால்.. இது நடப்பதும் அ ந்த மனசாட்சியாலேயே நடக்கட்டும்! கொல்வது பாவம்’ என்று மனசாட்சி சொல்ல மன மாறினாள் கொலை செய்வதில்லை முடிவுக்கு வந்தாள் நிம்மி!