என்ன வழி? – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 1,211 
 

இருபுறமும் பச்சை மரங்கள் சூழ்ந்திருந்த குறுகிய ரோட்டில் பஸ்சை உச்ச வேகத்தில் விரட்டிக்கொண்டிருந்தான் டிரைவர் வாசு. மழை கொட்டிக் கொண்டிருக்க எதிரில் வந்த காரின் வேகத்தை உத்தேசித்து ப்ரேக்கை அழுத்தினான். வண்டியின் வேகம் குறையவில்லை. ப்ரேக் வேலை செய்யவில்லை ஒருகணம் இதயம் நின்றுபோனது வாசுவுக்கு. நொடியில் ஸ்டியரிங்கை திருப்பினான்.

ப்ரேக் இல்லாமல் எப்படி வண்டியை நிறுத்த.. சாலையோர மரத்தில் மோதுவதா இல்லை வயலில் இறக்குவதா வண்டியின் வேகத்திற்கு எப்படியானாலும் விபத்தை தவிர்க்க முடியாது… டென்ஷன் எகிறியது. நிரம்பி வழியும் கூட்டத்தில் விபரீதம் தெரிந்தால்… நினைக்கவே பயந்தான் வாசு…

மழை வலுத்து ரோட்டை மறைக்கவும் இனி மேலே செல்வது உயிருக்கு ஆபத்து.. நிலைமையை சமாளிக்க என்ன வழி என்று குழம்பினான். செல்போனில் அவனது மாமா கதிரேசன் விடாமல் அழைக்க எரிச்சலானான் வாசு. அந்த கணம் அவனுக்கு யோசனை மின்னலடித்தது..

அடுத்த பத்தாவது நிமிடத்தில் செல்போனில் கதிரேசனை செல்போனில் அழைத்த வாசு, அவரை பேச விடாமல் முந்திக் கொண்டான். நீங்க கால் பண்ணும் போது ரூட்ல உச்ச வேகத்தில போயிட்டிருக்கேன் மாமா. பஸ்சில திடிர்னு ப்ரேக் பிடிக்கலை..

ஆக்சிடென்டாகி இத்தனை உயிருக்கு ஆபத்துன்னு நெனச்சா மூச்சே நின்னுடும் போல ஆகிப்போச்சு. டென்ஷன்ல என்ன பண்றதுனே புரியல. செல்போன்ல நீங்க விடாம கூப்பிடவும், சட்டுன்னு ஐடியா தோணிச்சு. கொஞ்ச தூரத்தில வண்டியை மெயின் ரோட்டை விட்டு, ஊரு பாதையில் திரும்பினேன்.. தன்னால வேகம் குறைஞ்சுது.

பள்ளத்தில இறக்கி சேதாரமில்லாம வண்டியை நிப்பாட்டிடேன். நீங்க போன மாசம் கான்ட்ராக்ட் எடுத்து போட்ட புது ரோடு இப்ப எப்படியும் குண்டும் குழியுமாதான இருக்கும்னு துணிஞ்சு ரூட்டை மாத்தினேன் உங்க புண்ணியத்தில பல உயிர் தப்பிச்சாச்சு என்று நிம்மதியாக சிரித்தான் வாசு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *