என்ன தவறு செய்தேன்..!?

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 3,555 
 
 

சிமிண்ட் தரையைத் தெளித்துப் பெருக்கி கோலம் போட்டாள் தனலட்சுமி. பால்வாங்க வந்த பக்கத்துவீட்டு பாக்கியலட்சுமி, தனலட்சுமி அருகே போய் நின்று கேட்டாள்.

‘எப்போதுமே வாசல்ல மாக்கோலம்தான் போடுவீங்களா? நான் கோலம் போடுவதில்லை., அது ‘டைம் வேஷ்ட் !’ என்றாள்.

‘மாக்கோலம் போட்டால் அது, ஈ எறும்புக்கு உணவாகுமே?! அதான்’ என்றாள் தனம். அடுத்த சில நொடிகளில் செவ்வெறும்பு பெருகி, கோலமாவை அள்ளித் தின்றபடி திரிந்தன.

ஏனோ அந்த இரக்கம் பாக்கியலட்சுமிக்குப் பிடிக்கவில்லை. பின் வாசலில் வெந்நீர் போட்ட அடுப்பிலிருந்து சாம்பலை அள்ளி வந்து, கூடிய எறும்பின்மீது கொட்டிவிட்டாள்.

‘ஏன் இப்படிப் பண்ணினீங்க?’ கோபமாகக் கேட்டாள் தனலட்சுமி.

‘இந்தக் கடி எறும்பு நான் பால் வாங்கப் போகையில் காலை கடிக்கிறதே அதான்!.’ என்றாள்.

‘உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?

ஒரு காலத்தில் இந்த எறும்புகள் மனிதர்கள் காலைக் கடித்தபோது அவற்றை காலால் மிதித்து நசுக்கியே சிலர் கொன்றார்களாம்! . கோபம் கொண்டு எறும்புகள் கடவுளிடம் வரம்கேட்டன. ‘நாங்கள் கடித்தால் , சாக வேண்டுமென்று!’ ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டல்லவா?! ‘கடித்தால் யார் சாக வேண்டும்’ என்று தெளிவாய்க் கேட்கவில்லை. மாறாக, நாங்கள் கடித்தால் சாக வேண்டும் என்று மட்டும் வேண்டின. கடவுளும் வரம் தந்தார். எறும்புகள் மனிதர்கள் காலைக் கடித்தால் அந்தக் காலாலேயே அவற்றை மனிதர்கள் அவற்றை மிதித்துக் கொன்றார்கள்.

எறும்புகள் கடவுளிடம் ஏனிப்படி எனக்கேட்க, ‘நீங்கள்தானே கடித்தால் சாக வேண்டும் என்று வரம் கேட்டீர்கள். யார் சாக வேண்டுமென்று கேட்கவில்லையே, அதான் சாகிறீர்கள். என்றாராம்.

பிழைக்க வழி ..?! என்று அவை கேட்க,

‘நீதியும் அன்பும்மிக்க மனிதர் சிலர் மாக்கோலம் போட்டு உங்களை வாழ வைப்பார்கள்!’ என்று உறுதியளித்தாராம். என்று சொல்லிவிட்டு,

‘இப்ப, நீங்க அடுப்புச் சாம்பலை எறும்புகள் மீது கொட்டியது, காலால் நசுக்கிக் கொல்வதைவிடக் கொடுமையானது. எறும்புகளுக்கு மாக்கோலம் போட்டு மரியாதை தராட்டாலும் பரவாயில்லை.. சாம்பலை அள்ளித் தெளித்துச் சாகடிக்காமலாவது இருக்கலாமில்லையா?! உங்களைவிடச் சிலர் இன்னும் மோசம், ‘கோல ஸ்டிக்கரை’ தரையில் ஒட்டி எறும்பை ஏமாற்றுகின்றனர். நியாயமா?!’ என்றாள் தனலட்சுமி.

பாக்கியலட்சுமி, பாவம் செய்த பரிதவிப்பில் நெளிந்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “என்ன தவறு செய்தேன்..!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *