எதிர் காலத்தின் தொழில் நுட்பங்களை இன்றே அறிமுகம் செய்யும் Futurica விழாவில் கூட்டம் அலை மோதியது. ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த முரளி எந்த கண்காட்சிக்கு போவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். ஹேலோகிராபிக் டெமோ, பறக்கும் கார்கள், அழியாத இளமை போன்ற பிரபலமான கண்காட்சிகளைத் தாண்டி மூலையில் இருந்த ஒரு சிறிய கண்காட்சி அவன் கவனத்தை ஈர்த்தது. அங்கிருந்த தற்காலிக போர்டில் இப்படி எழுதியிருந்தது – ChronoTech – வாருங்கள், எதிர் காலத்திற்கு போகலாம்!
கூட்டத்தை கடந்து முரளி ChronoTech கண்காட்சியை அடைந்த போது, அங்கிருந்த வெளிர் தாடி மனிதர் அவனைப் போலவே கண்காட்சிக்கு வந்த இன்னொருவரிடம் தன்னுடைய படைப்பை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் ஒரு ஆள் மட்டுமே உட்காரக் கூடிய ஒரு சிறிய கூண்டு. அதன் தலையிலிருந்து ஏகப் பட்ட வயர்கள் வெளி வந்தன.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளிர் தாடி அவனிடம் வந்து, “புரொபஸர், ரங்காச்சாரி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மிகுந்த உற்சாகத்துடன் தனது படைப்பின் நுணுக்கங்களை விளக்க ஆரம்பித்தார். தற்காலிக பிளவுகள், குவாண்டம் சிக்கல் மற்றும் காரண காரியத்தின் நுட்பமான நடனம் பற்றி அவர் விலா வாரியாக சொல்லிக் கொண்டே போக, முரளி குறுக்கிட்டு, “சார், அதெல்லாம் இருக்கட்டும். எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரிய வேண்டும். இங்கிருக்கிறதே இந்தக் கூண்டு. இதில் ஏறினால் நான் எதிர் காலத்திற்கு செல்ல முடியுமா?” என்று ஆவலுடன் கேட்டான்.
“நிச்சயமாக,” என்ற புரொபஸர் புன்முறுவலித்தார். “இந்தக் கூண்டு ஒரு கால இயந்திரம். இது இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது. இது உங்களை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல முடியும், ஆனால் அதில் ஒரு சிறிய சிக்கல் உள்ளது.”
“என்ன சிக்கல்?”
“நீங்கள் எதிர் காலத்திற்கு சென்ற பின் உங்கள் கடந்த கால நினைவுகள் எல்லாவற்றையும் மறந்து விடுவீர்கள். நீங்கள் காலப் பயணம் செய்தது கூட நினைவில் இருக்காது. இயந்திரத்தின் இந்தக் குறைபாட்டை இன்னும் நாங்கள் சரி செய்யவில்லை.”
முரளியின் புருவம் சுருங்கியது, ஆனால் புரொபஸர் அவனை சமாதானப்படுத்தினார். “கவலைப்பட வேண்டாம் நண்பரே. இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு வைத்திருக்கிறேன்.” அவர் முரளியிடம் ஒரு சிறிய காகிதத்தை நீட்டினார். “உங்களுக்கு நீங்களே ஒரு குறிப்பு எழுதிக் கொள்ளுங்கள். உங்கள் ஊர், பேர், மற்றும் நிகழ்காலத்திற்குத் திரும்புவதற்கான வழிமுறைகளை கவனமாக அதில் பதிவு செய்யுங்கள். அதைப் பத்திரமாக வைத்திருங்கள். எதிர் காலத்திற்கு சென்ற பின் இந்தக் குறிப்பு உங்களுக்குத் தேவைப்படும்.”
முரளி யோசித்துப் பார்த்தான். புரொபஸர் சொன்ன தீர்வு சரியானதாகவே தோன்றியது. அவர் கொடுத்த காகிதத்தை வாங்கி கொண்டான். உற்சாகத்துடன் அதில் தனது பெயர், சொந்த ஊர், வீட்டு விலாசம், தான் செய்யும் வேலை, அன்றைய தேதி எல்லாவற்றையும் குறித்துக் கொண்டான். புரொபஸரிடம் கேட்டு கால இயந்திரத்தை இயக்கி எப்படி நிகழ்காலத்திற்குத் திரும்புவது என்பதையும் எழுதிக் கொண்டான். காகிதத்தின் மேல் பகுதியில் கொட்டை எழுத்துக்களில் ‘எனக்கு நான் எழுதிய குறிப்பு – கடந்த காலத்திலிருந்து’ என்று எழுதி அடிக் கோடிட்டான்.
எழுதி முடித்தவுடன், காகிதத்தை நேர்த்தியாக மடித்து கவனமாக தன் பேண்ட் பாக்கட்டில் வைத்துக் கொண்டான். அப்போது அவனுடைய விரல்கள் அவனது பேண்ட் பாக்கட்டின் ஆழத்தில் ஏற்கனவே இருந்த ஒரு கசங்கிய காகிதத்தில் உரசியது. அதை வெளியே எடுத்து கிட்டத்தட்ட தூக்கி எறியப் போகையில், அதன் வித்தியாசமான தலைப்பு அவன் கண்ணில் பட்டது. அவனுடைய சொந்த கையெழுத்தில், கொட்டை எழுத்துக்களில் இப்படி எழுதியிருந்தது: ‘எனக்கு நான் எழுதிய குறிப்பு – எதிர் காலத்திலிருந்து’