ரமேஷ் விரக்தியுடன் கணினி திரையை வெறித்துப் பார்த்தான். எதிர்காலத்திலிருந்து வந்திருந்தது ஒரு மின்னஞ்சல்! அவனுடைய மாஸ்டரிடமிருந்து. பெயர் தெரியாத, முகம் தெரியாத மாஸ்டரிடமிருந்து. வரவிருக்கும் கல்லூரி ஆண்டுகளை ரமேஷ் எப்படியெல்லாம் கழிக்க வேண்டும் என்று விலாவாரியாக உபதேசம்!
15 முதல் 20 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு இளைஞனுக்கும் இளைஞிக்கும் வழிகாட்டியாக இருக்க எதிர்காலத்தில் வாழும் ஒரு மாஸ்டர் நியமிக்கப்படும் இந்த உலகில், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல மாஸ்டர் அமையும் போது தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கொடுங்கோல் உபதேச மாஸ்டர் அமைய வேண்டும் என்று நொந்து கொண்டான் ரமேஷ்.
மாஸ்டர் எதிர்காலத்தில் வாழ்கிறார் என்பது உண்மை தான். ரமேஷ் இப்போது வாழும் ஆண்டுகளை மாஸ்டர் ஏற்கனவே கடந்திருப்பார், ரமேஷின் வாழ்வை வடிவமைக்க மாஸ்டரின் அந்த அனுபவம் கை கொடுக்கும் என்பதும் சரி தான். அதற்காக இப்படியா? கல்லூரியில் என்ன சப்ஜெக்ட் எடுப்பது போன்ற முக்கியமான முடிவுகளிலிருந்து நண்பர்களுடன் சினிமாவிற்குப் போகையில் என்ன கலர் சட்டை அணிவது போன்ற உப்பு பெறாத முடிவுகள் வரை ரமேஷின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் அவனது மாஸ்டரால் கட்டுப்படுத்தப்பட்டது. ரமேஷின் கனவுகளையும் தனித்துவத்தையும் கொஞ்சமும் சட்டை செய்யாத அவன் மாஸ்டரின் அதிகாரம் அவனை மூச்சுத் திணற வைத்தது.
தனது இருபதாவது பிறந்தநாளை நெருங்கியபோது, ரமேஷ் தனக்குள் ஒரு சபதம் செய்துகொண்டான். ‘நான் எப்போதாவது மாஸ்டர் ஆனால், என் மாணவர்களிடம் அன்பாக இருப்பேன். நான் அவர்களை மரியாதையுடன் நடத்துவேன், அவர்களின் சொந்த பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்குவேன்.’
தனது இருபதாவது பிறந்தநாளின் நள்ளிரவில், ரமேஷ் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மின்னஞ்சல் அரசாங்கத்திடமிருந்து வந்தது. அதிலிருந்த விவரம்:
பிறந்த நாள் வாழ்த்துக்கள், ரமேஷ்! இருபது வயதை எட்டி விட்டீர்கள். இன்றிலிருந்து நீங்கள் உங்கள் மாஸ்டரின் வழிகாட்டுதலின் கீழ் இல்லை. நீங்கள் விரும்பும் எந்த வகையிலும் உங்கள் இளமைப் பருவத்தைத் தொடர இனி மேல் உங்களுக்கு புராண சுதந்திரம் உள்ளது. ஆனால் உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பும் வந்து சேர்ந்திருக்கிறது – இப்போது நீங்களே ஒரு மாஸ்டர்! மாஸ்டர் என்ற உங்கள் புதிய பங்கைப் புரிந்துகொள்ள கீழே உள்ள வழிமுறைகளைப் படிக்கவும்.
ரமேஷ் மின்னஞ்சலை வெகு கவனமாக படித்த பின் அதில் ஒரு முக்கியமான விவரம் இல்லை என்பதை உணர்ந்தான். மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த ஆதரவு எண்ணை அழைத்தான்.
“ஹலோ, என் பெயர் ரமேஷ். நேற்றுடன் எனக்கு இருபது வயது பூர்த்தி ஆகியது. மாஸ்டராக என்னுடைய பங்கு பற்றிய மின்னஞ்சல் இன்று வந்தது.”
“வாழ்த்துக்கள், ரமேஷ். நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?”
“கடந்த காலத்திலிருக்கும் எனது மாணவருடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்த தொழில்நுட்ப விவரங்கள் மின்னஞ்சலில் இருக்கிறது. ஆனால்… எனது மாணவர் யார் என்ற விவரம் அதில் இல்லை.”
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மறு முனையிலிருந்தவர், “ஓ, உங்களுக்குத் தெரியாதா?” என்றார்.
“என்ன தெரியாதென்கிறீர்கள்?”
“மாணவர் நீங்கள் தான். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நீங்கள் தான் இப்போது உங்கள் மாணவர்.”