“தமிழ் மூச்சு கழகம் ” கட்சியின் தலைவர் தமிழண்ணன். அவரின் துணைவியார் தமிழண்ணி. மகள் தமிழரசி. மகன் தமிழரசன். தமிழை உலக மொழியாக ஐநா அங்கீகரிக்க வேண்டுமென்று இரண்டு மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து ஊடக வெளிச்சத்தை வாங்கிக் கொண்டவர். அன்று போனில் தமிழரசன் யாரோ ஓர் எதிரியை தீர்த்து கட்டுவதுப் பற்றி தன் நண்பர் ஒருவனிடம் பேசுவது போல் இருந்தது.
‘மச்சான், ஐ வில் நாட் லீவ் ஹிம். யா. பை நெக்ஸ்ட் வீக், ஹி வில் பி டெட் ‘.
‘அப்போ டெஃபனட்டா அவன் க்ளோஸ் தானே?’.
‘டோன்ட் ஒரி . ஓகே. பை பை. சீ யூ’ என்று சொல்லிய பின் ‘டேய், பிரிட்ஜிலிருந்து கூலா ட்ரின்க் கொண்டா மேன் ‘ என்று வேலைக்காரனை ஏவினான் கொதித்து போயிருந்த தமிழரசன்.
[உரையாடலின் தமிழ் வடிவம்:
‘மச்சான், நான் அவனை விடமாட்டேன். ஆமாம், அடுத்த வாரம் அவனைத் தீர்த்திடுவேன்’.
‘அப்போ நிச்சயமா அவன் கதை முடிஞ்சுடும் இல்லையா.?
‘கவலைப் படாதே. சரி. பார்க்கலாம்’.]
கதை சார்ந்த தகவல்:
International Mother Language Day: சர்வதேச தாய்மொழி தினம் என்பது, மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும், பன்மொழிகளை மேம்படுத்துவதற்கும் பிப்ரவரி 21 அன்று உலகளவில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடுவது பங்களாதேஷின் முன்முயற்சியால் விளைந்தது.
பப்புவா நியூ கினியாவில், சுமார் 840 மொழிகள் பேசப்படுகின்றன. இரண்டாவதாக இந்தியாவில் 780 மொழிகள். லெபனானில் பிறந்த பல்மொழியாளர் ஜியாத் ஃபாஸா 58 மொழிகளில் சரளமாக பேசுவதாகக் கூறப்படுகிறது. நாம் தமிழ் மொழியில் சரியாக பேசவே திக்கித் திணறுகிறோம்.