(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நாம் ஏன் சாகணும்!”
மலையின் உச்சியில் மைதிலியின் கையோடு கையைச் சேர்த்துக்கொண்டிருந்த ஜார்ஜ் கேட்டான்.
“எத்தனை முறை பேசி முடிவெடுத்து இங்கே வந்திருக்கிறோம். இப்ப கடைசி நொடியில் மனம் மாறுறீங்களே…ஏன் சாவுன்னதும் பயமா?” கண்ணில் கண்ணீரோடு கேட்டாள் மைதிலி.
“நாம் இந்த ஊரில்தானே வாழ முடியாது.”
“இல்ல… நாம எந்த மூலையில் இருந்தாலும் எங்க அப்பா விடமாட்டார். கண்டுபிடிச்சிடுவார்…”
அந்த துயர நொடிகளிலும் அவனுக்குள் லேசாய் புன்முறுவல்.
“அப்ப நாம இப்படியல்ல மைதிலி… குழந்தைகளோடு இருப்போம்.”
“சரி… இப்ப என்னதான் சொல்றீங்க?”
“கர்த்தர் தந்த வாழ்க்கையை ஏன் நாம் முடித்துக் கொள்ள வேண்டும். போராடி வாழ முயற்சி செய்வோமே.”
“…”
“என்ன பதிலையே காணோம்?”
“எங்கதான் போறது?”
“வா… இந்த மலை அடிவாரத்தில் ‘சர்ச்’ இருக்கு. அங்கே போய் பாவமன்னிப்பு கேட்டு ஜெபம் பண்ணுவோம். பிறகு ரெயில் ஏறி ஏதாவது ஒரு பட்டணத்துக்குப் போயிடுவோம்.”
“அடுத்தவேளை சாப்பிட வழியில்லாமல் பட்டணத்துக்குப் பயணமா?” மைதிலி சோகமும், கேலியுமாகக் கேட்டாள்.
“என் உடலில் பலமிருக்கு. நமக்கு நம்பிக்கை இருந்தா நிச்சயம் வெற்றி பெறமுடியும். வா போகலாம்.”
இருவரும் அந்த முடி வோடு, உயிரும், உயிரும் ஒன்றாகக் கலந்து, கை கோர்த்தபடி புறப்பட்டனர்.
சிறிது நேரத்தில் மணி ஒலித்தது. தூரத்தில் ஆலயம் தெரிந்தது. வேகமாய் நடந்தனர்.
“பிதாவே… இவர்களை மன்னிப்பீராக…” என்ற ஜெபக்குரல் அவர்களின் காதுகளில் வந்து விழுந்தது.
அவர்களுக்குள் நம்பிக்கை பிறந்தது. இன்னும் வேகமாய் நடந்தனர்.
– 24-12-2000, ராணி.