காலை வாக்கிங் செல்லும்போது நடு வீதியில் கருப்பு குப்பை கவர் பிரிந்து அதனுள் இருந்த குப்பைகள் வெளியில் சிதறியிருந்ததை பார்த்தேன். மூன்று கொக்ககோலா பாட்டில்கள், அலுமினியம் ஃபாயிலில் கோபி மஞ்சூரியன் மீதம், லேய்ஸ் சிபிஸ் கவர். வாலிபர்களின் நேற்றைய தொடர் தொலைக்காட்சி படலத்தின் சாட்ச்சியங்கள். வாலிப வயதில் இது நடப்பதுதான். இந்த வயதில் பார்க்கவில்லையென்றால் எப்போது? குப்பையை சரிவர தொட்டியிலோ அல்லது வண்டியிலோ கொடுத்திருக்கலாம். சரி வயதானதும் நல்ல குடிமகன்கள் ஆகிவிடுவார்களென நினைத்து முன்னே நடந்தேன்.
கொஞ்சதூரத்தில் ஒரு ஓங்கிய தூங்குமூஞ்சி மரம், அதன் கீழ் குப்பை மேடு. ஒரு கவரில் கத்திரிக்காய் காம்பு, காட்டாக கொத்தமல்லி வேர், வெங்காய தோல், முட்டை ஓடுகள். யாரோ ஒரு குடும்பத்தில் நேற்று கத்திரிக்காய் மசியல் அதற்கு இணையாக ஆம்லெட் அல்லது முட்டை புர்ஜி வறுவல். ஆஹா! இப்போதே நாக்கு ஊறுகிறது. நூறு ரூபாய்க்குள் உணவை முடித்துவிட்டார்கள். பெரும்பாலும் மத்திய வர்க்கமாக இருக்க வேண்டும். முட்டை ஓடுகளை சரியாக எண்ணமுடியவில்லை என்றாலும் நான்கு பேர் சாப்பிடலாம் என யூகித்தேன். நேற்று குப்பை வண்டி வரவில்லை போலும் அல்லது வீட்டில் குப்பை தொட்டி நிரம்பியிருந்தால் எலி வந்திவிடுமென நினைத்திருக்கலாம். சரி, அடுத்தமுறை கரெக்ட்டாக குப்பை வண்டியில் கொடுத்து விடுவார்கள்.
அதே குப்பை மேட்டில் அடுத்திருந்த கவரில் சில சிக்கன் எலும்புகள், உடைந்த வளையல், பால் கவர் மற்றும் மூன்று ஓல்ட் மான்க் ஷாஷைகள். என்ன சொல்வது? பாவம் அந்த பெண். ஆனால் வைராக்கியமானவள். மதுக்கடையில் குடித்து விழுவதற்கு பதிலாக வீட்டிலேயே கணவனை குடிக்க, குடித்துவிட்டு தன்னை அடிக்கவும் அனுமதித்திருக்கிறாள். காய்கறி மீதம் எதுவும் காணமுடியவில்லை. சிக்கன் எலும்புகள் கூட ஒன்றிரண்டு தொடை துண்டுகள்தான். ஓல்ட் மான்க்கை தனித்து குடிக்கமுடியாது (என்னை நம்புங்கள்). ஒருவேளை கணவன் மட்டும் சுவைத்ததா இந்த துண்டுகள்?அப்படியானால் நேற்று அந்த பெண் பசியில் தூங்கியிருக்க வேண்டும். சே! என்ன சமுதாயம் டா இது?
விரத்தியில் நடக்கையில் ஒரு ஆணுறை காலனியில் ஒட்டிக்கொண்டது. அருவருப்பில் உதறி தள்ளினேன். ஒரு விதத்தில் இதனை உபயோகித்தவன் இதனை கழிப்பறையில் ஃப்லஷ் செய்து கழிவு நீர் அடைத்துக்கொள்ளாமல் ஜன்னலிலிருந்து வெளியே வீசியது தப்பில்லை என்றுதான் தோன்றியது. இருந்தாலும் குப்பை தொட்டியில் சேர்த்திருந்தால் மிகவும் நன்று. ஒருவேளை அவசரத்தில் வெளியேறியதால் முடியவில்லையோ? சமுதாயம் ஜனத்தொகை பெருக்கத்தைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றுள்ளது. காமத்தை பாதுகாப்பாக மேற்கொள்ளவேண்டிய அவசியத்தையும் உணர்ந்துள்ளது. என் நாடு முன்னேறிவிடும்.
பால் கடை இன்னம் கொஞ்சதூரம்தான். வழியில் இடதுபுறத்தில் புதர் அருகே பழைய குப்பைகளை எரித்திருப்பதை கண்டேன். எரிந்த காகிதங்களின் மத்தியில் ஒரு புத்தகம் பாதி எரிந்து தலைப்பு மட்டும் எரியாமல் இருந்தது. அந்த காட்சி என்னை ஆழ்ந்த சோகத்தில் வீழ்த்தியது. அந்த புத்தகம் எனக்கு பரிச்சயமானது. சமுதாய அறத்தை பற்றிய ஒரு நல்ல நாவல். புத்தகத்தை எரிக்கும் சமுதாயம் முன்னேறிதேயில்லை . இன்னொன்றையும் உணர்ந்தேன், முன்னம் கண்ட குப்பைகளின் மூலம் அதன் உரிமையாளர்கள் பற்றி ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது. ஆனால் இந்த புத்தகத்தின் உரிமையாளர் யார்?
நன்றி. நான் வசிப்பது பெங்களூரில். உணர்கசா என்பது உலர் கழிவு (dry waste) என்பதின் கன்னட ஆக்கம்.
கதை நன்றாக இருக்கிறது. தலைப்பு ” உணர்கசா ” என்பது புரியவில்லை. இப்படி ஒரு தமிழ் வார்த்தை இருக்கிறதா. .?எதை உணர்த்த இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்தீர்கள் என தெரியப்படுத்தினால் நன்று.. கொஞ்சம் புரிவது போல் இருக்கிறது.